சண்டை காட்சியில் விலா எலும்பு உடைந்தது, அப்பா சொன்னது- விடுதலை 2 பற்றி கென் கருணாஸ் உருக்கம்
விடுதலை 2 பட அனுபவம் குறித்து நடிகர் கென் கருணாஸ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் 'விடுதலை'. விடுதலை படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்த நிலையில் சமீபத்தில் இதன் இரண்டாம் பாகமும் வெளியானது.
மேலும், இப்படத்தில் மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், சேத்தன், கௌதம் மேனன், கென் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். முதல் பாகத்தில் அதிகார வர்க்கத்திற்கும், மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து எடுத்த வெற்றிமாறன், இரண்டாம் பாகத்தில் முழுக்க முழுக்க பெருமாள் வாத்தியாராக வரும் விஜய் சேதுபதியின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்கியிருக்கிறார்.
விடுதலை 2 படம்:
இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். மேலும், இந்த படத்தில் சில காட்சிகள் வந்தாலுமே அழுத்தமான கருப்பன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தவர் தான் கென் கருணாஸ். இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் கென், விடுதலை 2 படம் வாழ்க்கையில் எனக்கு ரொம்ப முக்கியமான படம். என்னுடைய நடிப்புக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
கென் பேட்டி:
படத்தில் என்னுடைய காட்சிகள் 10 நிமிடம் தான் இருந்தது. ஆனால், நடிக்கும் போது கருப்பன் கதாபாத்திரம் இவ்வளவு ஸ்ட்ராங்கானது என்று எனக்கு தெரியாது. படம் முடிந்த பிறகு தான் ரசிகர்கள் என்னை ஞாபகம் வைத்து பாராட்டுவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு கருப்பு நிறம் தான் ஃபேவரட். அதிலேயே கேரக்டர் பெயர் அமைந்தது சந்தோஷமாக இருக்கிறது. கருப்பன் பவர்ஃபுல்லான பெயர். சசிகுமார் சார், இயக்குனர் கிருஷ்ணா சார், அருண் அண்ணா எல்லோருமே போன் பண்ணி என்னுடைய நடிப்பை பாராட்டி பேசிருந்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. வெற்றிமாறன் சார் தான் என்னுடைய குரு. எல்லா புகழும் அவருக்கு தான் போய் சேரும்.
பட அனுபவம் பற்றி சொன்னது:
நான் அவரோட பெரிய ரசிகர். கருப்பன் கதாபாத்திரம் பற்றி வெற்றிமாறன் சார் சொன்ன போது கொஞ்சம் வெயிட் போட்டு வாட்ட சட்டமாக இருந்தால் நல்லா இருக்கும் என்று தோன்றியிருந்தது. அதனால் டைட் எல்லாம் இருந்து கார்டியோ பண்ணி 15 நாளிலேயே 3 கிலோ வெயிட் போட்டேன். ஆனால், இது எதுவுமே வெற்றிமாறன் சாருக்கு தெரியாது. ஷூட்டிங்கில் என்னை பார்த்ததும் சூப்பர் என்று பாராட்டி இருந்தார். இந்த நேரத்தில் என்னோட ஜிம் மாஸ்டருக்கு தான் நன்றி சொல்லணும். மேலும், படத்தில் பைட் சீன் நன்றாக இருக்கு என்று நிறைய பேர் சொல்லி இருந்தார்கள். எல்லோரும் உண்மையாக உணர்வுபூர்வமாக ஃபைட் பண்ணதால் தான் அந்த காட்சி நன்றாக வந்தது.
https://www.youtube.com/watch?v=w3OTjyt3FNg
சண்டை காட்சி அனுபவம்:
சண்டை காட்சியில் என்னுடைய விலா எலும்பு உடைந்தது. ஆனால், அதை நான் சாரிடம் சொல்லவே இல்லை. அந்த வலியோடு தான் நடித்து முடிக்கணும் என்று நினைத்தேன். ஆனால், பைட் மாஸ்டர் கண்டுபிடித்து விட்டார். அவர் சாரிடம் சொல்லிவிட்டார். இந்த விஷயம் தெரிந்ததுமே ஹாஸ்பிடலில் என்னை கொண்டு போய் சேர்த்து விட்டார்கள். ரொம்ப அக்கறையாக நலம் விசாரித்துக் கொண்டிருந்தார். நான் பழைய மாதிரி மீண்டும் வர கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆனது. எனக்கு முழுமையாக சரியான பிறகு தான் மீதி சண்டை காட்சிகள் எல்லாம் எடுத்தார். வெற்றிமாறன் சாரால் தான் நான் அறிமுகப்படுத்தப்பட்டேன். அவர் படங்களில் தொடர்ந்து நடிப்பது எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு. எனக்கு எலும்பு உடைந்த போது கவலைப்படாதே, தியேட்டரில் உன்னோட காட்சிகளை பார்த்துட்டு எல்லோரும் கத்தும்போது அந்த வலியெல்லாம் மறந்து விடும் என்று என்னுடைய அப்பா சொன்னார். இப்போ அவர் சொன்னது போல் தான் எனக்கு நடந்திருக்கிறது என்று பல விஷயங்களை கூறி இருக்கிறார்.