வாழ்வில் துணையே கிடையாது - ஆர்த்தி ரவியின் அறிக்கைக்கு பதிலடி கொடுத்த கெனிஷா பிரான்சிஸ்
ரவி மோகனின் மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கெனிஷா போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஆர்த்தி-ரவி சர்ச்சை தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பேரிடியாக விழுந்தது. இதை அடுத்து இது தொடர்பாக ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி இருந்தார். அதோடு ரவி-ஆர்த்தி பிரிந்ததற்கு காரணம் பாடகி கெனிஷா தான் என்றும், இருவருக்கும் இடையே பழக்கம் இருப்பதால் தான் இவர்கள் பிரிந்தார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தது. ஆனால், அதை ரவி மறுத்தார்.
இப்படி இவர்களுடைய பிரச்சினை நாளுக்கு நாள் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது.
அதன் பின் ரவி குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்திருந்தார். மேலும், ரவி -ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் பிரபலத்தின் திருமணத்திற்கு பாடகி கெனிஷா உடன் ஜோடியாக ஜெயம் ரவி சென்று இருக்கிறார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தாவிற்கு தான் சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தான் நடிகர் ரவி அவர்கள் கெனிஷாவுடன் ஜோடியாக வந்திருந்தார். இருவருமே மேட்சிங் உடை அணிந்திருந்தார்கள். இது தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது.
ரவி மோகன்-ஆர்த்தி சர்ச்சை:
பின் இந்த விவகாரம் தொடர்பாக ஆர்த்தி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர்,
என் மௌனத்தை கலைக்கிறேன், என் குழந்தைகளுக்காக… கடந்த ஒரு வருடமாக மௌனத்தை ஒரு விரதமாகவே மேற்கொண்டு வருகிறேன். இதற்கு காரணம் நான் பலகீனமானவள் என்பது அல்ல. என் பேச்சை விட என்குழந்தைகளின் அமைதியான வாழ்க்கை மிகவும் முக்கியம் எனக்கருதியதால் தான் அந்த விரதம். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், பழிச்சொற்கள், வசைகள் அனைத்தையும் மௌனமாகவே தாங்கிக்கொண்டேன். என் பக்கம் உண்மையும் நியாயமும்இருந்தும் நான் பேசாமல் இருந்ததற்கு காரணம் என் குழந்தைகளுக்கு தந்தை மற்றும் தாய் இருவரிடையே யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதுதான்.
ஆர்த்தி அறிக்கை:
இன்றைக்கு உலகம் கூர்ந்து பார்க்கும் காட்சிகளும், நாடகங்களும் வேறு, நடந்த உண்மை என்பது முற்றிலும் வேறு. எங்கள் விவாகரத்து வழக்கு இன்னும் சட்டபூர்வமாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் 18 வருடங்களாக நான் காதலுடனும், நம்பிக்கையுடனும் கைகோர்த்து நடந்த ஒரு மனிதன் என் கைகளை மட்டுமல்ல தன் பொறுப்புகளில் இருந்தும் கைகழுவி சென்று இருக்கிறார். பல மாதங்களாக அந்தக் குழந்தைகளின் பொறுப்பை என் தோள்களில் மட்டுமே சுமந்து கொண்டிருக்கிறேன். யாரும் அறியாமல் அந்தக் குழந்தைகள் சிந்தும் கண்ணீரையும் என்கைகள் தான் துடைத்துக்கொண்டிருக்கிறது. இன்று அவர் புதிதாக முளைத்தவர்களுடன் புதியதொரு உறவை உருவாக்கி கொண்டதால் பழைய உறவு இப்பொழுது வெறும் செங்கல் சுவர் போல அவர் கண்களுக்குகாட்சியளிக்கிறது.
என் குழந்தைகளுக்கு அன்பும் அக்கறையும் கொடுப்பேன் என்ற அவரது வாக்குறுதியும் பறந்துவிட்டது. ஆனால் இன்றும் என்னை தான் பணத்தாசை பிடித்தவள் போல் சித்தரிக்கிறார்கள். அது மட்டும் உண்மை என்றால் இப்பொழுது அனைத்தையும் இழந்து நிற்கும் இந்த நிலையில் இல்லாமல் நான் சுயநலத்துடன் எப்பொழுதோ எனது பாதுகாப்பை கவனித்திருப்பேன். ஆனால் கணக்குபோட்டு வாழ்வதைவிட காதலுடன் வாழ்வது சிறந்தது என்றுநான் முடிவெடுத்ததால் தான் இன்று இந்த நிலையில்நிற்கிறேன். இன்றும் அந்த காதலுக்காக நான் வருத்தப்படவில்லை. ஆனால் அது பலவீனமாக புரிந்து கொள்ளப்படுவதை தான்தாங்க முடியவில்லை. இன்று என் குழந்தைகளுக்கு முறையே 10 மற்றும் 14 வயதாகிறது. அவர்களுக்கு பொருளாதார ரீதியானபாதுகாப்பும், உறுதியும் மிகமுக்கியம். இன்று நடந்துகொண்டிருக்கும் சட்டவிவகாரங்களை புரிந்துகொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம் ஆனால் கைவிடப்பட்டதன் வலி அவர்களுக்கு கண்டிப்பாக தெரியும். எடுக்கப்படாத தொலைபேசி அழைப்புகள்,நிராகரிக்கப்பட்ட சந்திப்புகள், போலி சமாதான வாக்குறுதிகள் இவை அனைத்தும் காயங்களாக எங்கள் நெஞ்சில் இருக்கிறது.
இன்று நான் ஒரு மனைவியாகவோ, அல்லது குற்றச்சாட்டுகளை சுமந்து நிற்கும் ஒரு பெண்ணாகவோ பேசவில்லை. தன் குழந்தைகளின் நலனை காக்க நினைக்கும் தாயாக மட்டுமே குரல் எழுப்புகிறேன். அப்பா என்பது உறவுமட்டுமல்ல அது ஒரு உயர்ந்த பொறுப்பு. இன்று எங்கள் வாழ்க்கையில் குறுக்கே வந்தவர்களால் என் குழந்தைகளின் உடல் மன ஆரோக்கியம் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது அவர்கள் சிந்தும் கண்ணீர் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. என் வார்த்தைகளை நீங்கள் தவிர்க்கலாம் ஆனால் அந்த எதிரொலிக்கு நீங்கள் செவிசாய்த்து தான் ஆக வேண்டும். அன்புள்ள ஊடகவியலாளர்களுக்கு என்னை நீங்கள் அவரது முன்னாள் மனைவி என்று அடையாளப்படுத்த வேண்டாம். அந்த முடிவை சட்டம் எடுக்கும் வரை அமைதி காப்போம். இப்பொழுதும் பழிவாங்கவோ பரபரப்புக்காகவோ நான்பேசவில்லை என் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காகவே போராடுகிறேன் என்று கூறி இருந்தார்.
கேனிஷா பதிவு:
இப்படி இருக்கும் நிலையில் ஆர்த்தியின் அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கெனிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், வாழ்வில் வெல்ல வேண்டும் என்ற கனவுகள் கொண்டவர்களுக்கு இரண்டு தேர்வுகள் இருக்கிறது. ஒன்று ஆதரவான துணை இருக்க வேண்டும் அல்லது துணையே இல்லாத வாழ்க்கை தான் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். தற்போது இவரின் இந்த பதிவு தான் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.