அயன் படத்துல வில்லனா நான் தான் நடிக்க இருந்துச்சு- ஆனா - கோலங்கள் ஆதி அளித்த பேட்டி
அயன் பட வாய்ப்பு குறித்து கோலங்கள் அஜய் கபூர் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் அஜய் கபூர். இவர் பஞ்சாப்பை சேர்ந்தவர். இவர் ஆரம்பத்தில் மீடியாவிற்குள் நுழைவதற்காக பல போராட்டங்களை சந்தித்தார். அது மட்டும் இல்லாமல் வாய்ப்பு தேடி சென்றிருக்கும் போது இவர் தினமும் வாக்கிங் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். அப்படி வாக்கிங் செல்லும் போது தான் நடிகை சத்யா ப்ரியாவுடைய அறிமுகம் இவருக்கு கிடைத்திருக்கிறது.
அதற்கு பிறகு தான் இவர் கோலங்கள் சீரியலில் வாய்ப்பு கேட்டு சென்றார். அப்போது இயக்குனர் திருச்செல்வம், நான் ஏற்கனவே ஆதி கதாபாத்திரத்தில் நடிகர் ஒருவரை ஃபிக்ஸ் பண்ணிவிட்டேன் என்று சொன்னார். இருந்தாலும், எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் நான் நடித்துக் காட்டுகிறேன் என்று அடம் பிடித்திருக்கிறார். இயக்குனரும் சரி என்று சொன்னவுடன் ஒரே சாட்டில் அஜய் நடித்து காட்டியிருக்கிறார். உடனே திருச்செல்வத்திற்கு பிடித்து போய்விட்டது. எப்படியோ போராடி அஜய் இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு வாங்கினார்.
கோலங்கள் சீரியல்:
சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்ற தொடர்களில் ஒன்று தான் கோலங்கள். இந்த தொடர் 2003 ஆம் ஆண்டு தொடங்கி 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. மொத்தம் இந்த தொடர் 1533 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த தொடரில் கதாநாயகியாக தேவயானி நடித்திருந்தார். இந்த சீரியல் தான் நடிகை தேவயானிக்கு பெரிய அளவில் ரீச் கொடுத்தது. மேலும், இந்த சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ஆதியும் ஒரு காரணம்.
அஜய் கபூர் பேட்டி:
கோலங்கள் சீரியல் இவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது. அதற்கு பின் இவர் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். வெள்ளித்திரையில் கூட இவர் சில படங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக இவர் சன் டிவியில் ஒளிபரப்பான வள்ளி தொடரில் நடித்து இருந்தார். தற்போது இவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. இவர் என்ன ஆனார் என்றும் தெரியவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் அஜய் கபூர் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் அயன் பட வாய்ப்பு குறித்து கூறியிருந்தது, சூர்யா நடித்த அயன் படத்தில் வில்லன் கமலேஷ் கதாபாத்திரத்தில் நடிக்க என்னை தான் கேட்டிருந்தார்கள்.
அயன் பட வாய்ப்பு:
கே வி ஆனந்த் சாருடைய அப்பா தான் என்னை சிபாரிசு செய்தார். ஆனால், கோலங்களில் பிஸியாக இருந்தேன். அதனால் படத்தில் நடிக்க முடியவில்லை. இருந்தாலும், நான் அந்த படத்தில் பணியாற்ற வேண்டும் என்று என்னை டப்பிங் கொடுக்க சொன்னார்கள். கமலேஷ் கதாபாத்திரத்துக்கு நான் தான் குரல் கொடுத்தேன். ஒரே நாளிலேயே மொத்த டப்பிங் முடித்து விட்டேன். இதை பார்த்து இயக்குனர் பாராட்டினார் இருந்தார்.
கமலேஷ் ரோல்:
அதுமட்டுமில்லாமல் அந்த கதாபாத்திரத்திற்கு உங்கள் குரல் தான் உயிர் கொடுத்தது என்றெல்லாம் சொன்னார்கள். அப்போது நான் கண்டிப்பாக இந்த படம் ஹிட் கொடுக்கும் என்று சொன்னேன். அதேபோல் படம் நல்ல சூப்பர் ஹிட் ஆனது. அதற்கு பிறகு இயக்குனரை சந்தித்து பேசினேன். அப்போது அவர், மீண்டும் நாம் படங்களில் இணைந்து பண்ணுவோம் என்று கூறினார். அந்தப் படத்தை என்னால் மறக்கவே முடியாது என்று பகிர்ந்து இருக்கிறார்.