சமந்தாவின் விவாகரத்து சர்ச்சை, குவிந்த கண்டனங்கள்- அந்தர் பல்டி அடித்த அமைச்சர் சுரேகா

By subhashini · 3/10/2024

சமந்தா- நாக சைதன்யா விவாகரத்து சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்டு அமைச்சர் கொண்டா சுரேகா போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நாக சைதன்யா- சமந்தா இருவரும் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிந்திருந்தார்கள்.

இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று எந்த விவரமும் தெரியவில்லை.
பிரிவிற்கு பின் சமந்தா-நாக சைதன்யா இருவருமே தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் அமைச்சர் கொண்டா சுரேகா அண்மையில் அளித்த பேட்டியில், சமந்தா-நாக சைதன்யா விவாகரத்திற்கு KT ராமா ராவ் தான் காரணம். KT ராமா ராவ் செய்த விஷயங்களால் தான் பல நடிகைகள் திருமணம் செய்து கொண்டு தெலுங்கு சினிமாவை விட்டு போய்விட்டார்கள் என்றெல்லாம் பேசி இருந்தார்.

நாகார்ஜுனா ட்வீட் :

இப்படி இவர் பேசியிருந்தது இணையத்தில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருக்கிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகர் நாகார்ஜுனா ட்வீட் ஒன்று போட்டிருந்தார். அதில் அவர், உங்கள் அரசியலுக்காக சினிமா நடிகர்களுடைய வாழ்க்கையை பயன்படுத்தாதீர்கள். அடுத்தவர்களுடைய பிரைவசிக்கும் மதிப்பு கொடுங்கள். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண் இப்படி என் குடும்பத்தை பற்றி பொய்யான குற்றச்சாட்டு வைப்பது சரியில்லை. உங்கள் கருத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று கோபமாக பதிவிட்டிருந்தார்.

சமந்தா போஸ்ட்:

இதை அடுத்து பிரபலங்கள் பலருமே அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக நடிகை சமந்தா, என்னுடைய விவாகரத்து பர்சனல் மேட்டர். யாரும் அதைப்பற்றி யூகங்களின் அடிப்படையில் பேச வேண்டாம். நாங்கள் அதைப் பற்றி வெளிப்படையாக பேசவில்லை என்றால் அதற்காக நீங்கள் தவறாக பேசாதீர்கள். எங்களுடைய விவாகரத்து mutual consent அடிப்படையில் நடந்தது. அதில் எந்த அரசியல் சதியும் கிடையாது. என் பெயரை உங்கள் அரசியல் பிரச்சனையில் இழுக்காதீங்க. நான் இதுவரை அரசியல் தொடர்பு இல்லாமல் தான் இருக்கிறேன். அதே போல் தான் இருக்க விரும்புகிறேன் என்று கோபமாக பதிலளித்திருக்கிறார்.

நாக சைதன்யா பதிவு:

இவரை தொடர்ந்து சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா, வாழ்க்கையில் விவாகரத்து என்பது ரொம்ப வேதனையான, துரதிஷ்டவசமான முடிவுகளில் ஒன்று. பல யோசனைகள் பிறகு தான் நானும், என்னுடைய முன்னாள் மனைவியும் பிரிய முடிவெடுத்தோம். மரியாதையுடனும், கண்ணியத்துடனும் முன்னேற வேண்டும் என்பதற்காக நாங்கள் அமைதியான முறையில் எடுத்த முடிவு இது. இந்த விஷயத்தில் பல ஆதாரமற்ற கிசுகிசுக்கள் வந்திருக்கிறது. என்னுடைய முன்னாள் மனைவி மற்றும் என்னுடைய குடும்பத்தினர் மீதுள்ள மரியாதை காரணமாக நான் இதையெல்லாம் பற்றி பேசாமல் அமைதியாக இருந்தேன். பெண் அமைச்சர் வைத்த குற்றச்சாட்டு பொய்யானது. ஊடக தலைப்புச் செய்திகளுக்காக பிரபலங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பயன்படுத்திக் கொள்வது வெட்கக்கேடானது என்று கூறியிருக்கிறார்.

கொண்டா சுரேகா மன்னிப்பு:

தற்போது சோசியல் மீடியா முழுவதும் இந்த விவகாரம் தான் பூதாகரமாக வெடித்து இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக கொண்டா சுரேகா மன்னிப்பு கேட்டு டீவ்ட் போட்டிருக்கிறார். அதில் அவர், நான் அந்த பேட்டியில் பேசியதின் நோக்கம் பெண்களை ஒரு தலைவர் எப்படி இழிவுபடுத்தினார் என்பதை சுட்டிக்காட்ட மட்டும் தான். உங்கள் உணர்வுகளை புண்படுத்துவது என்னுடைய நோக்கம் கிடையாது. நடிகை சமந்தா, நீங்கள் அபரிமிதமாக வளர்ந்த விதத்தை நான் ரசிக்கிறேன். என்னுடைய வார்த்தைகளால் நீங்களோ அல்லது உங்கள் ரசிகர்களும் புண்பட்டிருந்தால் நிபந்தனை இன்றி அவற்றை திரும்ப பெறுகிறேன். இதை தயவு செய்து வேறு விதமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full