நான் சர்வதேச கைக்கூலியா, உதவி விளம்பரம் பணத்திற்காக செய்ததா? கேபிஒய் பாலா உருக்கம்
தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்கு நடிகர் பாலா கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அதிலும் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இதன் மூலம் தான் இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்தும், பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார்.
மேலும், பாலா அவர்கள் நடிகர் மட்டுமில்லாமல், சமூக சேவை செய்பவரும் ஆவார்.
இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, பெரியோர்களின் மருத்துவ செலவிற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். பின் இவர் மலைவாழ் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தந்து இருந்தார். தற்போது ஷெரிப் இயக்கத்தில் பாலா நடிப்பில் வெளிவந்த படம் காந்தி கண்ணாடி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில தினங்களாகவே பாலா செய்து வரும் உதவியை விமர்சித்து வருகிறார்கள்.
பாலா பற்றிய சர்ச்சை:
பாலாவுக்கு பணம் எப்படி வருகிறது? அவர் ஒரு சர்வதேச கைக்கூலி. அவர் போலியான ஆம்புலன்ஸ்
வாகனத்தை வாங்கி கொடுக்கிறார், இவர் செய்யும் உதவிகள் எல்லாம் விளம்பரத்திற்கு தான், ஏமாற்று வேலை என்றெல்லாம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக வெளியிட்ட வீடியோவில் நடிகர் கேபிஒய் பாலா, எவ்ளோ வன்மம். நான் இந்த சர்ச்சை இப்ப முடியும் அப்ப முடியும் என்று பார்த்துட்டு இருந்தேன். ஆனால், முடிகிற மாதிரி தெரியவில்லை. ஒரே ஒரு படம் தான் பண்ணேன். அதுக்கு இந்த அளவு பண்ணுவாங்கன்னு சத்தியமாக தெரியாது. ஒரு ஆம்புலன்ஸில் நம்பர் பிளேட்டால் பிரச்சனை பண்றார்கள். ஆனால், அந்த ஆம்புலன்ஸால் நிறைய பேர் பலன் அடைஞ்சிருக்காக.
பாலா வீடியோ:
அதையெல்லாம் அவர்கள் பேசவில்லை. நம்பர் பிளேட்டில் ஒரே ஒரு டி எழுத்து மிஸ் ஆனதால் பாலாவினுடைய முகத்திரை கிழிந்தது. பாலா ஒரு சர்வதேச கைக்கூலி என்றெல்லாம் சொல்கிறார்கள். நான் உண்மையிலேயே ஒரு தினக்கூலி. அதே போல் நான் ஹாஸ்பிடல் கட்டுவதை விமர்சிக்கிறார்கள். என்னிடம் இவ்வளவு பணம் ஏது என்று கேட்கிறார்கள். நான் நிகழ்ச்சிக்கு போறேன், படம் நடிக்கிறேன், விளம்பர படம் பண்ணினேன். என்னுடைய சொந்த காசுல தான் உதவி செய்கிறேன். நான் வெளிநாடு நிகழ்ச்சிக்கு போவதால் வெளிநாட்டில் இருந்து பணம் வருதுன்னு சொல்கிறார்கள். இந்த காலத்தில் யார் அப்படி காசு கொடுப்பா? என் வீடு கட்ட வேண்டிய இடத்தில் தான் அமுதவாணனிடம் சொல்லி இன்னும் கொஞ்சம் இடம் வாங்கி ஒரு கிளினிக் கட்டுறேன்.
சர்ச்சைகளுக்கு பதிலடி:
என்னோட பேரை கலங்கடிக்கறதுக்காக தான் இப்படி எல்லாம் விமர்சிக்கிறாங்க. இப்ப நான் ஏன் இந்த வீடியோ போடறேன் என்றால், இந்த சர்ச்சையை பார்த்து உதவி செய்ய வர இளைஞர்கள் பின்வாங்கிட கூடாது. நான் உதவி செய்ததை youtube-ல் போட்டு காசு பார்க்கிறேன் என்று விமர்சிக்கிறார்கள். நான் இன்ஸ்டாகிராமில் மட்டும்தான் போடுகிறேன். இன்ஸ்டாகிராமில் காசு வராது. எனக்கு youtube கிடையாது. ஆனால், என்னை பற்றி தப்பா பேசி தான் youtube இல் நிறைய பேர் காசு சம்பாதிக்கிறார்கள். பிரச்சனை இருக்கிறதுனால தான் நல்லது பண்றோம். ஆனால், நல்லது பண்றதுலேயே பிரச்சனை இருக்கான்னு கேட்டா என்ன சொல்றதுன்னே தெரியவில்லை. விமர்சனத்தை பார்த்து நான் ஓட மாட்டேன். எனக்குன்னு மக்கள் இருக்காங்க. அவங்களுக்காக நான் ஓடுவேன் என்று கூறியிருக்கிறார்.