'சஞ்சு, சூர்யாவை நீக்கினால்... கம்பீரையும் கேட்க வேண்டாமா?' - கவுதம் கம்பீர் மீது கடுமையாக பாய்ந்த ஸ்ரீகாந்த்
'சஞ்சு, சூர்யாவை நீக்கினால்... கம்பீரையும் கேட்க வேண்டாமா?' - கவுதம் கம்பீர் மீது கடுமையாக பாய்ந்த ஸ்ரீகாந்த்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி மோசமாக தோல்வியடைந்து தொடரை இழந்தது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அணித் தேர்வு, இளம் வீரர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் மற்றும் இந்திய அணியின் செயல்பாடு குறித்து பல முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வரிசையில் முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர்ரை நேரடியாக விமர்சித்துள்ளார்.
'சஞ்சு, சூர்யாவுக்கு ஒரு விதி... கம்பீருக்கு வேறு விதியா?'
தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், இந்திய அணியில் ஒரே மாதிரியான அளவுகோல் பின்பற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். "சஞ்சு சாம்சனையும், சூர்யகுமார் யாதவையும் அணியில் இருந்து நீக்க முடிகிறது. அப்படியானால், இந்த தோல்விகளுக்குப் பிறகு கம்பீரை யார் கேள்வி கேட்பார்கள்? அவரை நீக்க வேண்டும் என்று யாராவது சொல்ல முடியுமா? முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவுகோல் வைத்திருக்கிறார்கள்" என்று அவர் கூறினார்.
'உலகக் கோப்பை வென்றது மட்டும் காரணமாக இருக்க முடியாது'
இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது என்பதால், தற்போதைய தோல்விகளுக்கு யாரும் பொறுப்பேற்காமல் இருக்க முடியாது என்று ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
"இரண்டு மாதங்களுக்கு முன்புதான் உலகக் கோப்பையை வென்றார்கள். அதேபோல் சூர்யகுமார் யாதவும் உலகக் கோப்பையை வென்ற கேப்டன்தான். ஆனால் இன்று அவர் அணியில் இல்லை. அதே அளவுகோல் எல்லோருக்கும் இருக்க வேண்டும். ஒருவருக்கு மட்டும் பாதுகாப்பு, மற்றவர்களுக்கு தண்டனை என்பது சரியல்ல" என்று அவர் விமர்சித்தார்.
'தோல்வி இருந்தும் எந்த கவலையும் இல்லை'
இந்திய அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்தும், பயிற்சியாளர் தரப்பில் அதற்கான பதற்றம் தெரியவில்லை என்றும் ஸ்ரீகாந்த் சாடினார். "நேற்றைய போட்டிக்குப் பிறகும் எந்த கவலையும் இல்லாமல் இருந்தார். தொடர் தோல்விகளும், ஒயிட்வாஷ்களும் நடந்தாலும் எந்த அழுத்தமும் இல்லாதது போல நடந்து கொள்கிறார். அவரை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்ற மனநிலையில்தான் இருக்கிறார்" என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
தோல்விகளுக்கு யார் பொறுப்பு?
இங்கிலாந்து தொடரில் இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு, அணித் தேர்வு என அனைத்து துறைகளிலும் தடுமாறியுள்ளது. இந்த நிலையில், வீரர்களை மட்டுமே குறை கூறாமல், அணியை வழிநடத்தும் பயிற்சியாளர் மற்றும் நிர்வாகத்தின் முடிவுகளும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதே ஸ்ரீகாந்தின் கருத்தாக உள்ளது. இந்திய அணி அடுத்த தொடர்களில் மீண்டு வருமா, அல்லது இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் மாற்றங்களை மேற்கொள்ளுமா என்பதே தற்போது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.