பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் நடித்த 'குமார சம்பவம்' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

By subhashini · 12/9/2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் குமரன் தியாகராஜன். தற்போது இவர் நாயகனாக நடித்திருக்கும் படம் குமாரசம்பவம். இந்த படத்தை இயக்குனர் பாலாஜி வேணுகோபால் தான் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பாயல் ராதாகிருஷ்ணன், ஜி.எம் குமார், பால சரவணன், இளங்கோ குமரவேல், லிவிங்ஸ்டன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ராஜா மணி இசை அமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் ஹீரோ குமரன் இயக்குனராக வேண்டும் என்று லட்சியத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார். இதனால் இவர் பல தயாரிப்பாளர்களிடம் தன்னுடைய கதையை சொல்கிறார். ஆனால், யாருமே அவருடைய கதையை ஏற்றுக்கொள்ளவில்லை. சின்ன வயதிலேயே ஹீரோ குமரன் தன்னுடைய தந்தையை இழந்து தாத்தா, அம்மா, தங்கையுடன் தான் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் மேல் மாடியில் தான் சமூக ஆர்வலர் இளங்கோ குமரவேல் குடி இருக்கிறார்.

இளங்கோ குமரவேலும் தாத்தா ஜி. எம் குமார் நெருங்கிய நண்பர்கள். இதனாலே ஹீரோ வீட்டில் இளங்கோ தங்க இடம் கொடுத்தார் தாத்தா. இளங்கோ குமரவேல் சமூகப் பிரச்சனைகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து போராடி வருகிறார். இதனால் பல பிரச்சனைகளை ஹீரோ குமரன் சந்தித்து வருகிறார். இதனால் தான் ஹீரோ குமரனுக்கும் இளங்கோ குமரவேலுக்கும் இடையே ஒத்து போகவில்லை. இருந்தாலும் தன்னுடைய தாத்தாவிற்காக குமரன் பொறுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த சூழலில் குமரன் தன்னுடைய படத்தை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று போராடி இருப்பதால் தாத்தா தன்னுடைய பூர்வீக வீட்டை விற்க முடிவு செய்கிறார். அதோடு அந்த சொத்தில் ஒரு பங்கை இளங்கோ குமரவேலுக்கு கொடுக்க வேண்டும் என்று உயில் எழுதியும் வைத்திருக்கிறார். இதனால் குமரனுக்கு கோபம் வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென இளங்கோ குமரவேல் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்.

எல்லாருடைய சந்தேகமும் ஹீரோ குமரன் மீது தான் விழுகிறது. இதனால் போலீசாருமே தொடர்ந்து விசாரிக்கிறார்கள். அதற்குப்பின் குமரன் சொந்தமாக படத்தை எடுத்தாரா? இளங்கோ குமார வேலை கொன்றது யார்? இந்த பிரச்சனையில் இருந்து ஹீரோ குமரன் தப்பித்தாரா? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை. படத்தில் ஹீரோ குமரன் தங்கராஜன் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முதல் படத்திலேயே காமெடி, ஆக்‌ஷன், காதல் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். முகபாவனைகள் தான் இவருக்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.

இவரை அடுத்து ஹீரோயினி பாயல் ராதாகிருஷ்ணன் தன்னுடைய அழகான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவர்களுக்கு பின் தாத்தா வேடத்தில் ஜிஎம் குமார் மிரட்டி இருக்கிறார் என்று சொல்லலாம். பின் சமூக ஆர்வலராக இளங்கோ குமாரவேல் தன்னுடைய அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் பால சரவணன் நடித்திருக்கிறார். இருந்தாலும் பெரிதாக காமெடிகள் கவரவில்லை. இவர்களை அடுத்து படத்தில் வரும் மற்ற நடிகர்களுமே தங்கள் வேலையை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்கள்.

ரு சாதாரண கதையை இயக்குனர் கிரேசி மோகன் பாணியில் ட்விஸ்ட் நகைச்சுவையாக கொடுத்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம். முதல் பாதி பொறுமையாக சென்றாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக சிறப்பாக இருக்கிறது. ஆனால், சில இடங்களில் காமெடிகள் தான் பெரிதாக அமரவில்லை. படத்தை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக கொண்டு சென்றிருந்தால் நன்றாக இருக்கும். சில இடங்களில் காட்சிகள் நாடகம் போல் நகர்வது தான் படத்திற்கு பலவீனம். இருந்தாலும் எல்லோரும் சென்று பார்க்கும் படமாக தான் குமார சம்பவம் இருக்கிறது.

நிறை:

குமரன் தங்கராஜின் நடிப்பு நன்றாக இருக்கிறது

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது
நகைச்சுவை நன்றாக இருக்கிறது

குறை:

கதைக்களத்தை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக கொடுத்திருக்கலாம்

முதல் பாதி பொறுமையாக செல்கிறது

சில காட்சிகள் நாடகம் போல இருக்கிறது

மொத்தத்தில் குமார சம்பவம் - ஆர்பாட்டம் இல்லாத சம்பவம்

behindtalkies AMP · Quick view
View full