சர்ச்சையை ஏற்படுத்திய காளி போஸ்டர், கர்வமாக பேசிய பெண் இயக்குனர் மீது நடவடிக்கை - நன்றி தெரிவித்த எச்.ராஜா.

By Arun · 5/7/2022

கையில் சிகரெட்டுடன் இருக்கும் காளி போஸ்ட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் லீனா மணிமேகலை மீது புகார் அளித்து இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கவிஞர், ஆவணப்பட இயக்குனர், சுயாதீன திரைப்பட இயக்குனர் என பன்முகம் கொண்டவர் லீனா மணிமேகலை. இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இவர் பாலியல்- சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், ஈழ போராட்டங்கள் குறித்து திரைப்படங்களையும் ஆவணப் படங்களையும் இயக்கி இருக்கிறார். மேலும், இவருடைய மாடத்தி, செங்கடல் போன்ற திரைப்படங்கள் எல்லாம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. தற்போது இவர் கனடாவின் டொரண்டோ பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் லீனா மணிமேகலை அவர்கள் காளி என்ற ஆவணப் படத்தின் போஸ்டரை வெளியிட்டார். இதில் காளி வேடம் அணிந்து ஒரு பெண்ணின் கையில் சிகரெட்டும், LGBTQ சமூகத்தினரின் கொடியும் இருந்தது. இன்னும் பிற கைகளில் தண்டாயுதம், சூலம் இருந்தது. இந்த புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது. அதாவது, இந்த புகைப்படம் இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதால் லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என ட்விட்டரில் நெட்டிசன்கள் பலரும் டிரன்டிங் செய்திருந்தார்கள்.

இதையும் பாருங்க : யார் இந்த கேப்டன் மில்லர் ? விடுதலை புலிகள் போராளியாக நடிக்கிறாரா தனுஷ்? இதோ விவரம்.

காளி படத்தின் சர்ச்சை குறித்து லீனா மணிமேகலை கூறியது:

மேலும், இந்த ஆவணப்படத்தின் சர்ச்சை குறித்து லீனா மணிமேகலை கூறியிருந்தது, ஒரு மாலைப்பொழுது டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப் பார்த்தால் என்னை கைது செய்யும் எண்ணத்தை விட்டு லவ் யூ சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள் என்று தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில் ‘காளி’ திரைப்படம் சம்மந்தப்பட்ட அனைத்தையும் திரும்பப் பெறுமாறு அந்த படத்தை திரையிட்ட நிகழ்ச்சி குழுவினருக்கு ஒட்டாவா இந்திய உயர் ஆணையம் அறிவுப்பு வெளியிட்டு உள்ளது.

ஒட்டாவா இந்திய ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

இது தொடர்பாக ஒட்டாவா இந்திய ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது, ஆகா கான் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற 'அண்டர் தி டெண்ட்' நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக காட்சிப்படுத்தப்பட்ட ஒரு திரைப்பட போஸ்டரில் இந்து கடவுளை அவமரியாதையாக சித்தரித்ததாக கனடாவில் உள்ள இந்து குழுக்களின் தலைவர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து டொராண்டோவில் உள்ள எங்கள் துணைத் தூதரகம் இது குறித்து நிகழ்வின் அமைப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், பல இந்து அமைப்புகள் கனடா அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பில் கூறி இருப்பது:

அதனால் கனடா அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பட்டாளார்கள் சர்ச்சைக்குரிய அந்த திரைப்படம் சம்மந்தப்பட்ட அனைத்தையும் திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் காளி தேவியை அவமதிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்திய இந்திய உயர் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார்.

எச்.ராஜா டீவ்ட்:

அதில் அவர் கூறியது, காளி தேவியை இழிவுபடுத்தும் லீனா மணிமேகலை மற்றும் அவரது கூட்டாளிகளின் முயற்சியை தடுத்து நிறுத்தி விரைவான நடவடிக்கை எடுத்ததற்காக ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஆணையத்திற்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் இந்தியாவைச் சேர்ந்த இந்துத் தலைவர்களுக்கும், கனடாவில் உள்ள இந்துக் குழுக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full