வித்தியாசமான கிரைம் திரில்லர் பாணியில் வந்த 'தாவூத்' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
அறிமுக இயக்குனர் பிரசாந்த் ராமன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தாவூத். இந்த படத்தில் லிங்கா, சாரா ஆச்சர், திலீபன், ராதாரவி, சாய் தீனா, சாரா, வையாபுரி, சரத் ரவி, அர்ஜெய், அபிஷேக், ஜெயக்குமார், சேரன்ராஜ், சரவணன் சீலன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ராகேஷ் அம்பிகாபதி இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தை turm நிறுவனத்தின் சார்பில் உமா மகேஸ்வரி தயாரித்திருக்கிறார்கள். வித்தியாசமான கேங்ஸ்டர் பாணியில் வெளிவந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் தாவூத் மிகப்பெரிய கேங்ஸ்டர் ஆக இருக்கிறார். இவர் போதைப் பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். மும்பையில் இருந்து கொண்டே இவர் தமிழ்நாட்டிலும் தன்னுடைய போதைப் பொருள் கடத்தலை நடத்துகிறார். இந்தியா முழுக்க பல இடங்களில் இவர் தான் போதைப் பொருள்களை சப்ளை செய்கிறார். ஆனால், இவருடைய புகைப்படம் உட்பட எந்த விவரமும் வெளி உலகத்திற்கு தெரியாது.
இன்னொரு பக்கம் இந்த போதை பொருள் சாம்ராஜ்யத்தை அழிக்க அர்ஜெய் தலைமையில் காவல்துறையினர் மும்முரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் தாவூத்தின் கடத்தல் பணிகளை அவருடன் 20 வருடங்களாக சேர்ந்து தீனா செய்து கொண்டிருக்கிறார். இருந்தாலும் இவர் தாவூத்திடமிருந்தே சரக்குகளை எல்லாம் கைப்பற்ற திட்டம் போடுகிறார். இன்னொரு பக்கம் தாவூத்தின் சாம்ராஜ்யத்தை அழிக்க வில்லன் கேங் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் தாவூத் உடைய சரக்கை சரியான இடத்தில் சேர்க்கும் வேலையில் அபிஷேக் இறங்குகிறார்.
இவருக்கு உதவியாக கார் ஓட்டுனராக ஹீரோ லிங்கா வருகிறார். ஹீரோவிற்கு பணம் தேவை இருக்கிறது என்பதால் கடத்தல் பணியில் ஈடுபடுகிறார். திட்டமிட்டபடி தாவூத் சரக்கை ஹீரோ கொண்டு போய் சேர்த்தாரா? தாவூத் பற்றிய விவரம் வெளிவந்ததா? உண்மையை போலீஸ் கண்டுபிடித்தார்களா? ஹீரோவின் நிலைமை என்ன? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை. படத்தின் ஹீரோ லிங்கா சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அப்பாவியான முகம், திறமையான நடிப்பு என்று தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.
இவரை அடுத்து கதாநாயகியாக சாரா ஆச்சார் வருகிறார். இவர் அறிமுக நடிகையாக இருந்தாலும் முடிந்தவரை தன்னுடைய வேலையை செய்து இருக்கிறார். போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறை அதிகாரியாக அர்ஜெய் நடித்திருக்கிறார். தாவூத்தின் அடியாளாக திலீபன் , சாய் தீனா, சரத் ரவி, அபிஷேக் எல்லோரும் நடித்திருக்கிறார்கள். படத்தில் மற்ற நடிகர்கள் உடைய கதாபாத்திரங்களுமே பொருத்தமாக இயக்குனர் தேர்வு செய்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை விறுவிறுப்பாகவும் கதையை சுவாரசியமாகும் இயக்குனர் கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.
முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் திறம்பட செயல்பட்டு இருக்கிறார். நடிகர்களுமே தங்களுடைய வேலையை அர்ப்பணிப்புடன் செய்திருக்கிறார்கள். பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. எடிட்டிங், ஒளிப்பதிவு எல்லாமே நன்றாக இருக்கிறது. ஒரு எளிமையான கதையை கொண்டு இரண்டு மணி நேரம் பார்வையாளர்களை சலிப்படைய செய்யாமல் அடுத்து என்ன? என்று யோசிக்க கூடிய அளவிற்கு இயக்குனர் கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்கூடிய விஷயம்தான்.
https://youtu.be/9_LAD9BTzFw?si=xBux2OMk7uh3NUgi
குறிப்பாக, தாவூத் யார்? என்பதை சொல்லக்கூடிய காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. இருந்தாலும் சில காட்சிகள் பார்வையாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் இறுதி காட்சி நன்றாக இருக்கிறது. இடையில் தான் கொஞ்சம் பொறுமையாக செல்கிறது. ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் தான். மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதான குறைகள் எதுவுமே இல்லை. எல்லோரும் சென்று பார்க்கும் ஒரு படமாக தான் தாவூத் இருக்கிறது.
நிறை:
நடிகர்கள் நடிப்பு
கதைக்களம் அருமை
கதைக்களத்தை கொண்டு சென்ற விதம் நன்றாக இருக்கிறது.
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது
கிளைமாக்ஸ் நன்றாக இருக்கிறது
குறை:
சில காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்
முதல் பாதி பொறுமையாக செல்கிறது
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
மொத்தத்தில் தாவூத் - நல்ல முயற்சி