சிஎம் விஜய் பத்தி பேசினாலே வாய்ப்பு கொடுக்க தயங்குறாங்க - நடிகர் போஸ் வெங்கட் பேட்டி
சிஎம் விஜய் பத்தி பேசினாலே வாய்ப்பு கொடுக்க தயங்குறாங்க - நடிகர் போஸ் வெங்கட் பேட்டி
எழுத்தாளர் லட்சுமி சரவணகுமார் இயக்கத்தில் லிங்கம் வெப் சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த வெப் சீரிஸில் நடிகர் கதிர், திவ்யபாரதி, பூர்ணிமா ரவி, போஸ் வெங்கட் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். 80களில் குமரியில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து எழுத்தாளர் ராஜநாராயணன் பிரபல பத்திரிக்கையில் லிங்கம் என்ற தலைப்பில் இந்த தொடர்கதை எழுதினார். அதை தழுவி தான் தற்போது லிங்கம் என்ற வெப் சீரிஸ் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும், இந்த வெப் சீரிஸில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் போஸ் வெங்கட் அளித்த பேட்டியில், இந்த வெப் சீரீஸுக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்திருக்கிறது. இந்த வெப் சீரிஸ் தியேட்டரில் சினிமா பார்த்த எபெக்டை அப்படியே கொடுக்கிறது என்று பத்திரிகையாளர்களும் பாராட்டி இருந்தார்கள். சினிமா நண்பர்களும் எனக்கு பாராட்டுகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நானும் ஏற்கனவே லிங்கம் கதையை படித்திருந்தேன். அவரைப் பத்தி பல விஷயங்களை கேள்விப்பட்டேன். அதை ஒரு தொடராக பார்க்கும்போது உண்மையிலேயே பிரம்மிப்பாக இருக்கிறது. ஒரு மனிதன் எப்படி இவ்வளவு துணிச்சலாக இருந்திருக்க முடியும் என்ற ஆச்சரியமும் இருக்கிறது.
போஸ் வெங்கட் பேட்டி:
எப்போதுமே எழுத்து வடிவம் வேறு, அதை திரை வடிவமாக படம் பிடிப்பது வேறு அதை. இன்னொரு முக்கியமான விஷயம் லிங்கம் கதை முழுவதுமாக உண்மை சம்பவம் தான். ஒரு புத்தகம் படிக்கும் போது நமக்குள் ஒரு தனி உணர்வு கடத்தப்படும். லிங்கம் சீரிசை மக்கள் இந்த அளவுக்கு பிரம்மாண்டமாக பேசுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் லட்சுமி சரவணக்குமார் சாருடைய எழுத்தின் வீரியம் தான். என்னுடைய அடுத்த டைரக்ஷன் படத்துக்கான வேலைகள் முடிந்திருக்கிறது. சீக்கிரமாகவே அது குறித்து அறிவிப்பு வரும். நிச்சயமாக என்னுடைய படம் மக்களுக்கு ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை கொடுக்கும். இந்த முறை நான் என்னுடைய படத்தில் நீர் பகிர்வு அரசியலைப் பற்றி பேசி இருக்கிறேன்.
விஜய் அரசியல்:
நான் ஓப்பனாக அரசியல் பேசுவதால் சினிமா வாய்ப்புகள் தவறுவது நடக்கும் தான். ஆனால், அதெல்லாம் நமக்கு கண்ணுக்கு தெரியாமல் பின்னால் நடக்கிற விஷயங்கள். ஒருவேளை நான் அமைதியாக இருந்திருந்தால் இந்த நேரம் இன்னும் ஒரு நாலு படங்கள் கூடுதலாக நடித்திருக்கலாம். இப்பதான் விஜய் பற்றி பேசி இருக்காரு. அவருடைய ரசிகர்கள் கோவிப்பாங்க. இவரை போட வேண்டாம்னு தவிர்க்கும் தயாரிப்பு நிறுவனங்களும் இருக்கிறது. அந்த படத்தினுடைய தயாரிப்பாளரோ அல்லது இயக்குனர்களோ கூட விஜய் ரசிகர்களாக இருக்கலாம். நான் நடிப்பையும் அரசியலையும் தனித்தனியாக தான் பார்க்கிறேன். ஆனால், இண்டஸ்ட்ரியல் பல பேர் அப்படி தான் பார்க்கிறார்கள். ஒரு புதிய ஆட்சி வந்தால் மாநிலத்தில் ஒரு செழிப்பு நடக்கிறது நமக்கே தெரியும் .ஆனால், இதுவரைக்கும் அந்த மாதிரி எதுவுமே நடக்கவில்லை.
தவெக ஆட்சி பற்றி சொன்னது:
யாரெல்லாம் முதல்வர் விஜயை வரவேற்றார்களோ அவர்கள் அனைவரும் அமைதியாகிவிட்டார்கள். கடந்த ஒன்றரை மாதத்தில் தமிழகத்தில் பாலியல் வன்முறைகள் கொலைகள் ஆணவ கொலை நிறைய நடந்து கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு அந்த அளவுக்கு சீர்கெட்டு போயிருக்கிறது. அதுமட்டுமில்ல இப்ப போதைப்பொருளுக்காக கைதாகிற பாதிப்பேர் தவெக கட்சியை சேர்ந்தவர்கள் தான். உதாரணத்திற்கு தாம்பரம் எம்எல்ஏ சரத் சொல்லலாம். இவங்கதான் போதை பொருளை ஒழிக்க போறாங்களா? ஊழல் இல்லாத ஆட்சி இவங்க அமைத்திடுவாங்களா? அதிமுக ஓட பழைய அமைச்சர்களையும் எம்எல்ஏக்களையும் வைத்துக்கொண்டு எப்படி ஊழல் இல்லாத ஆட்சி நடத்த முடியும். அதனால் இடைத்தேர்தலில் விசில் சின்னம் ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா பண்ணின தொகுதிகளில் எல்லாம் தவெக மிகப் பெரிய அடியை சந்திக்கிறது உறுதி
என்று கூறியிருக்கிறார்.