என் சம்பளம் வீட்டு வாடகைக்கே போயிடும், ஆனா 'ராயன்' என் வாழ்க்கையையே மாத்திடுச்சு - 'வாட்டர் பாக்கெட்' கானா காதர் நெகிழ்ச்சி

By Rajkumar · 31/7/2024

'ராயன்' படத்தின் வாட்டர் பாக்கெட் பாடல் மூலம் பிரபலமான கானா காதரின் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. கோலிவுட்டில் மிகப் பிரபலமான முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியா முழுவதும் 'ராயன்' பட செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தற்போது தனுஷ் இயக்கி, நடித்த 'ராயன்' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இது தனுஷின் 50வது படமாகும்.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் 'ராயன்' படத்தின் 'வாட்டர் பாக்கெட்' பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. சமீபத்தில் கூட இப்பாடலை எழுதிய பெயிண்டர் கானா காதரை, தனுஷும் ஏ.ஆர்.ரஹ்மானும் நேரில் அழைத்து பாராட்டி இருந்த வீடியோ வைரலானது.

கானா காதர் பேட்டி:

'வாட்டர் பாக்கெட் பாடல்' ஹிட்டானதை குறித்து கானா காதர், இந்தப் பாட்டு என் வாழ்க்கையை மாற்றி இருக்கு. எல்லாரும் என்னை பாராட்டுறாங்க. அது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. என் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம் 'ராயன்' தான். வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்த நிலையில், தனுஷ் சாரோட உதவி இயக்குனர்கள் என்னை தேடி வந்தார்கள். தனுஷ் சார் படம்னு சொன்னதும் நான் நம்பவே இல்லை. அப்புறம் ஆடிஷன் போயிட்டு செலக்ட் ஆனது என்னால நம்பவே முடியல.

https://www.youtube.com/watch?v=nTjBd7X8QXE

ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்:

மேலும், நான் சின்ன வயசுல இருந்து ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன். என்னோட அப்பா, அம்மா சின்ன வயசுலயே இறந்துட்டாங்க. என் பாட்டியோட அரவணைப்பில் தான் நாங்கள் வளர்ந்தோம். சாப்பாட்டுக்கு கூட ரொம்ப கஷ்டப்பட்டோம். அந்தப் பசியை போக்கினது எனக்கு பிடிச்ச கானா தான். பசியை மறக்கிற அளவுக்கு நான் பாடுவேன். அந்த ஆர்வம் தான், என்னை 'ராயன்' படம் வரைக்கும் கூட்டிட்டு வந்திருக்கு.

வாழ்க்கை கொடுத்திருக்காங்க:

அதைத் தொடர்ந்து அவர், தனுஷ் சார் மற்றும் ரஹ்மான் சார் எனக்கு புது வாழ்க்கை கொடுத்திருக்காங்க. இந்த நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த எல்லாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'ராயன்' படத்துக்கு அப்புறம், எனக்கு மூணு பெரிய படங்களுக்கு பாட்டு எழுதற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனால தான் நான் சொல்றேன் 'ராயன்' என் வாழ்க்கையை மாத்திடுச்சு. இந்தப் படத்துல கிடைத்த சம்பளம் வைத்து என் மனைவிக்கு பர்தாவும், மகள்களுக்கு நல்ல டிரஸும் வாங்கி கொடுத்தேன்.

மனசுக்கு கஷ்டமா இருக்கு:

இதுக்கு முன்னாடி நான் பெயிண்டிங் வேலை தான் பாத்துட்டு இருந்தேன். அதில் ஒரு நாளைக்கு 700 ரூபாய் கிடைக்கும். என் பொண்ணுங்களுக்கு நல்ல டிரஸ் கூட வாங்கித்தர என்னால முடியாது. ஆனா இப்போ நான் ஒரு நல்ல அப்பாவாக உணர்கிறேன். இந்த சந்தோஷத்தை பார்க்க என்னுடைய அப்பா அம்மா, என்னை வளர்த்த பாட்டி உயிரோட இல்ல. அவங்களுக்கு என்னால எதுவும் செய்ய முடியல. அது மட்டும் தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு என்று வருத்தத்தோடு கூறியிருந்தார்.

behindtalkies AMP · Quick view
View full