சுந்தர் சி மற்றும் விஷாலின் காமெடி கூட்டணி எப்படி இருக்கு?- 'மத கஜ ராஜா' படத்தின் முழு விமர்சனம் இதோ
சுந்தர். சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, மணிவண்ணன், மனோ பாலா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கும் படம் தான் ‘மதகஜராஜா’. இப்படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த 2012 படம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட இப்படம், பல்வேறு பிரச்சனைகளில் சிக்கியதால் வெளியாகாமல் இருந்தது. தற்போது சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பொங்கலை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இப்படம் மக்களிடையே வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்ப்போம்.
கதைக்களம் :
படத்தின் சிறு வயதிலிருந்தே விஷால், சந்தானம், சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா ஆகியோர் நண்பர்களாக இருக்கின்றனர். வெவ்வேறு ஊர்களில் வசிப்பவர்கள் ஒரு திருமணத்தில் மீண்டும் சந்திக்கும் போது தன் நண்பர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் உள்ளதை விஷால் அறிகிறார். முக்கியமாக சடகோபன் ரமேஷ் மற்றும் நிதின் சத்யா ஆகிய இருவரும் ஒரே நபரால் பாதிக்கப்பட்டு இருப்பதைத் தெரிந்து கொண்ட விஷால் அதை தீர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். அப்படி அவர்கள் என்ன பிரச்சனையில் சிக்கியிருக்கிறார்கள்? விஷால் தன் நண்பர்களுடன் இணைந்து அந்த பிரச்சனையை சரி செய்தாரா? என்பதுதான் படத்தின் கதை.
மத கஜ ராஜா சுருக்கமாக எம்ஜிஆர் என விஷால் அறிமுகம் ஆகும் காட்சி, சீரியல் காட்சி போல தோன்றினாலும் படத்தில் நடிகர் சந்தானம் தன் கவுண்டர் நகைச்சுவையால் ரசிகர்களைச் சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். படத்தின் முதல் பாதி பொறுமையாகச் சென்றாலும், இரண்டாம் பாதி முழுவதும் திரையரங்கமே சிரிப்புச் சத்ததிலேயே இருக்கிறது. தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹிட் இயக்குனர்கள் எனப் பெயர் எடுத்த பலரும் தோல்வி படங்களைக் கொடுக்கும் சூழலில் சுந்தர். சி ஆச்சரியப்படுத்துகிறார்.
படத்தில் சில கவர்ச்சியான காட்சிகளை வைத்தாலும் அதை முகம் சுளிக்காமல் பார்க்க வைப்பதுடன் நகைச்சுவையாக மாற்றி சுந்தர்.சி ரசிக்க வைக்கிறார். பாடல்களுக்கான காரணங்கள் மட்டும்தான் கொஞ்சம் அநியாயமாக இருக்கிறது. மொத்தத்தில் காட்சிகளைத் திரைக்கதையாக மாற்றிய விதம் படத்தை விட்டு நகராமல் ரசிகர்களை பார்த்துக் கொள்கிறது. இரண்டு நாயகிகள், சந்தானம் -லொள்ளு சபா சுவாமிநாதன் காமெடிகள், அரசியல்வாதி மனோபாலா, 8 பேக்கில் ஆக்சன் செய்யும் விஷால் என மொத்த திரைப்படமும் சரவெடி தான்.
குறிப்பாக கதாநாயகிகளாக வரலட்சுமி மற்றும் அஞ்சலியை தேர்ந்தெடுத்தது படத்திற்கு சிறப்பாக அமைந்திருக்கிறது. அதிலும், வரலட்சுமி யோகா சொல்லிக் கொடுக்கும் காட்சியில் சந்தானம் -லொள்ளு சபா சுவாமிநாதனின் நகைச்சுவைக்கு தியேட்டரில் விசில்கள் பறக்கின்றன. ஆனால், நகைச்சுவை என்கிற பெயரில் பெண்கள் உடல் குறித்து கிண்டல் அடிக்கும் வசனங்களை இயக்குனர் குறைத்து இருக்கலாம். அதேபோல், அப்பா-மகள் இடையேயான 18 + நகைச்சுவை வசனங்கள் ரசிகர்களுக்கு சிறிய நெருடலைத் தருகிறது.
மேலும், மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோ பாலா மற்றும் சிட்டிபாபுவை திரையில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு கொஞ்சம் எமோஷனல் ஆகிறது. கலகலப்பில் செய்த நகைச்சுவை எல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல் இப்படத்தில் மனோ பாலாவின் நகைச்சுவை காட்சிகள் அமைந்திருக்கிறது. சந்தானம் காமெடி மிஸ் செய்பவர்களுக்கு கண்டிப்பாக இப்படம் ஒரு செம ட்ரீட் தான். விஜய் ஆண்டனி இசையமைத்த பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. மொத்தத்தில் குடும்பத்துடன் இந்த பொங்கலுக்கு சிரித்து மகிழ நல்ல பொழுதுப்போக்கு படமாகத் திரைக்கு வந்துள்ளார் மத கஜ ராஜா.
நிறை :
விஷாலின் 8 பேக் தோற்றம்
விஜய் ஆண்டனியின் பாடல்கள்
சந்தானத்தின் சரவெடி காமெடி
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிவண்ணன், மனோபாலா மற்றும் சிட்டிபாபு ஆகியோரை திரையில் காண்பது பெரிய பிளஸ்
குறை :
படம் முழுவதும் லாஜிக்கே இல்லை.
சில 18+ நகைச்சுவை வசனங்களை தவிர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் 'மத கஜ ராஜா' திரைப்படம் மற்றொரு 'கலகலப்பு'