கோவை குணாவின் இறப்பு குறித்து பரவிய வதந்திக்கு மதுரை முத்து கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. நகைச்சுவை நடிகர் கோவை குணாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் கோவை கணபதி விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர். இவர் முதலில் திருவிழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பல குரலில் பேசி கோவை மக்களை மகிழ்வித்து இருந்தார். அதன் மூலம் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.

அப்படியே இவர் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் இவர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மேலும், நகைச்சுவை நடிகர் மதுரை முத்து- கோவை குணா இணைந்து செய்யும் காமெடிகள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றிருந்தது. இவர் ரஜினிகாந்த், கவுண்டமணி, ஜனகராஜ், எம் ஆர் ராதா போன்ற பல நடிகர்களின் குரலை மிமிக்ரி செய்வது மட்டுமில்லாமல் அவருடைய உடல் மேனரிசத்தையும் செய்வார். இதனால் குணா கலக்கப்போவது யாரு சீசன் 1 வெற்றியாளர் ஆனார்.

Advertisement

இவர் நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாமல் பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதனை தொடர்ந்து இவர் தமிழ்நாடு பல குரல் கலைஞர்கள் என்ற சங்கத்தில் இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இதனிடையே இவர் ஜூலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆகி விட்டது. இப்படி தன்னுடைய குடும்பத்தோடும், நிகழ்ச்சிகள் செய்து கொண்டும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த கோவை குணாவின் வாழ்க்கையில் பெரிய அதிர்ச்சி ஒன்று ஏற்பட்டது.

அதாவது, சில ஆண்டுகளாகவே இவர் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் இவர் டயாலிசிஸ் செய்து இருந்திருக்கிறார். சமீபத்தில் உடல்நல குறைவால் குணா அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின் மார்ச் 20ஆம் தேதி கோவை குணா அவர்கள் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் உயிரிழந்தார். இவருடைய இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள், நகைச்சுவை நடிகர்கள், பல குரல் கலைஞர்கள் என பலருமே இரங்கல் தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் கோவை குணாவை குறித்து நகைச்சுவை நடிகர் மதுரை முத்து அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, பன்முக கலைஞர் என்றாலே அது கோவை குணா மட்டும் தான்.

Advertisement

அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவருடன் இணைந்து நான் பல நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன். பொதுவாகவே தன்னுடன் இருக்கும் கலைஞர்களை போட்டியாளராக தான் பலரும் நினைப்பார்கள். ஆனால், அனைவரையும் நண்பராக பாவித்தவர் கோவை குணா. பல குரல், நடிப்பு என எது குடுத்தாலும் கச்சிதமாக அவர் செய்வார். அவரை விட யாராலும் அதை சிறப்பாக செய்ய முடியாது என்ற எண்ணத்தை வர வைத்து விடுவார். அவருடைய திறமையை பார்த்து நானே மிரண்டு போயிருக்கிறேன். மேலும், நான் சிறப்பாக நிகழ்ச்சிகளை பங்கேற்க அவர் உற்சாகமும் கொடுப்பார்.

Advertisement

தொலைக்காட்சிக்கு வருவதற்கு முன்பே அவர் பிரபலமாக இருந்தார். இருந்தாலும், தொலைக்காட்சியின் மூலம் அவருக்கு என்று ஒரு தனி கூட்டமே உருவாகி இருக்கிறது. மேலும், இவர் பல நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்திருக்கிறார். அவர் சிறந்த கலைஞர் என்பதை தாண்டி சிறந்த மனித நேயம் உடையவர் என்று சொல்லலாம். அவர் பல கலைஞர்களுக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார். ஆனால், தமிழ் சினிமா தான் கோவை குணாவை பயன்படுத்தவில்லை. பெரிய பெரிய இயக்குனர், நடிகர்கள் எல்லாம் கோவை குணாவின் ரசிகர்களாக இருந்தனர். அதோடு கோவை குணாவிற்கு இருந்த ஒரு சில கெட்ட பழக்கத்தால் தான் அவர் இப்படி ஆகிவிட்டார் என்று பலரும் கூறுகின்றனர்.

அது ரொம்ப தவறான ஒன்று. அவரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கிறதே தவிர அவரிடம் தவறான கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லை. மேலும், பன்முகத் தன்மையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு கோவை குணா பெயரில் விருது வழங்க வேண்டும். கோவை குணா பெயரில் விருது வழங்கினால் விருதுக்கும் பெருமையை, பெறுபவர்களுக்கும் பெருமை. அவருக்கு விரைவில் கண்ணீர் அஞ்சலி கூட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். அதில் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு கோவைகுணா பெயரில் விருது வழங்க வேண்டும் என திட்டமிட்டு இருக்கிறோம் என்று மதுரை முத்து கூறியிருக்கிறார்.

Advertisement