மணத்தி கணேசன் முதலில் ஹாக்கியில் தான் சாம்பியன், ஆனால் கபடி - ‘பைசன்’ நிஜ நாயகன் உறவினர் பேட்டி

By subhashini · 18/10/2025

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக திகழும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பைசன். இந்த படத்தில் பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், லால் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு நிவாஸ். கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன் இருவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த படம் திருச்செந்தூர் அருகே உள்ள மணத்தி கிராமத்தில் பிறந்து கபடியில் சாதித்த அர்ஜுனா விருது வாங்கிய கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது மணத்தி கணேசன் மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் மணத்தி கணேசனின் உறவினரும் அவருடன் ஒன்றாக பள்ளியில் படித்தவருமான அருள் ராஜ் அளித்த பேட்டியில், என்னுடைய அம்மா வழியில் நெருங்கிய சொந்தம் தான் கணேசன். மச்சான் முறை வேணும்.

அருள் ராஜ் பேட்டி:

நாங்க ரெண்டு பேருமே சாயர்புரம் போப் பள்ளியில் தான் படித்தோம். எனக்கு அவர் ஒரு வருட சீனியர். பள்ளிக்கூடத்தில் முதலில் அவர் ஹாக்கியில் தான் கில்லியாக இருந்தார். கோவில்பட்டியில் தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் எல்லாம் நடக்கும். அந்த போட்டியில் கலந்துகொண்டு கணேசன் பரிசெல்லாம் வாங்கி வருவார். மாவட்ட அளவில் ஹாக்கி சாம்பியன் ஆகவும் இருந்தார். அப்போது பள்ளிக்கூடத்தில் தங்கராஜ் என்ற பிடி ஆசிரியர் இருந்தார். அவர் தான் ஹாக்கியில் ஆர்வமாக இருந்த இவரை கபடி பக்கம் திருப்பி விட்டார்.

மணத்தி கணேசன் பற்றி சொன்னது:

அதன் பிறகு அவர் கபடியில் மாநில, தேசிய, சர்வதேச அளவில் கூட போய் சாதித்தது எல்லோருக்குமே தெரியும். சாதாரண விவசாய குடும்ப பின்னணியில் இருந்து வந்து அவர் தொட்ட உயரம் ரொம்பவே அசாத்தியமான ஒன்று. எங்கள் சொந்தக்காரர்களிலேயே நிறைய பேர் அவரைப் பார்த்து முன்னேறனும் என்று நினைப்பார்கள். இத்தனைக்கும் அந்த சமயங்களில் தென் மாவட்டங்களில் ஜாதி கலவரங்கள் எல்லாம் இருந்தது. இளைஞர்கள் பலர் தேவையில்லாமல் சிக்கிக் கொண்டு இருந்தார்கள். மச்சான் வாழ்க்கையை படமாக எடுத்தது தொடர்பாக இயக்குனர் மாரி செல்வராஜ் எங்க ஊருக்கு வந்த போது நானும் அவரை சந்தித்து பேசினேன்.

பைசன் படம் பற்றி சொன்னது:

அதேபோல் நேற்று தான் படம் பார்த்தேன். துருவ் செம்மையாக மிரட்டி இருக்கிறார். படத்திலும் கமர்சியல் என்று சொல்லி ரொம்பவும் கூட்டி குறைத்து சொல்லாமல் முடிந்தவரை அப்படியே சொல்லி இருக்கிறார்கள். அதுக்காகவே மாரி செல்வராஜை பாராட்டலாம். சில படங்கள் மேக்கிங் நல்லா இருக்கும். ஆனால், கமர்சியலுக்காக கூட்டி சொல்லிடுவார்கள். அப்படி இல்லாததால் தான் எங்கள் ஊர் பக்கமும் பைசன் படத்தை கொண்டாடிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full