நடிகர்களை விட இயக்குநர்கள் தான் அதிர்ஷ்டசாலிகள் - இயக்குநர் மணிரத்தினம் சொன்ன காரணம், என்ன தெரியுமா?
நடிகர்கள், இயக்குனர்களுக்கு இடையான வித்தியாசத்தை பற்றி இயக்குனர் மணிரத்தினம் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம். தமிழ் திரையுலகில் ஒரு இயக்குநருக்கு இவ்வளவு ரசிகர் பட்டாளமா! என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு இயக்குநர் மணிரத்னமிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.
இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளி வந்த படம் பொன்னியின் செல்வன்.இந்த படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்து இருக்கிறார். பல ஆண்டு கால கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் காவியங்களில் கதையை திரைப்படமாக எடுத்து இருந்தார் மணிரத்தினம். இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை அடுத்து தற்போது மணிரத்தினம்-கமல் கூட்டணியில் தக் லைப் படம் உருவாகி இருக்கிறது.
தக் லைஃப் படம்:
ஏற்கனவே கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணியில் நாயகன் என்ற படம் வெளியாகி இருந்தது. கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகிறது.
இந்த தக் லைஃப் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படத்தினுடைய ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டு வருவதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பட குழுவினர் மும்முரமாக பிரமோஷன் செய்து கொண்டிருக்கிறார்கள்.
மணிரத்தினம் பேட்டி:
இந்த நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் மணிரத்தினம், எந்த ரோலாக இருந்தாலும் கமல் அதில் பொருந்தி கொள்ளக் கூடியவர். யார் சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்தை மெருகேற்றி அதை நம்பும்படியாக கொண்டு செல்கிறாரோ அதுதான் தேவை. சிம்புவை எடுத்துக் கொண்டால் அவருடைய குணாதிசயத்தில் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். வெளியிலிருந்து நடித்துக் கொடுத்தது போல இருக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்தின் சூழலில் சிம்பு இருந்தால் எப்படி நடந்து கொள்வாரோ அப்படி நடந்து கொள்வதுதான் அந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கும் நியாயம்.
படம் பற்றி சொன்னது:
அந்த வகையில் ஒரு நடிகருடைய பங்களிப்பு ரொம்ப முக்கியம். தக் லைப் படத்தை பொறுத்தவரை படத்தில் நடித்துள்ளவர்களுடைய கதாபாத்திரங்களுக்கான தேவை இருந்தது. அதிலிருந்து எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சில சமயம் ஒரு கதாபாத்திரம் அழுத்தமாக இருந்தால் அதற்கு பிரபலமான ஒரு நடிகர் நடிக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. அதை எந்த ஒரு நடிகர் மூலமாகவும் அழுத்தமான கதாபாத்திரமாக மாற்றிவிடலாம். ஆனால், சில நேரம் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது என்றால் அதற்கு பிரபலமான முகம் தேவை. அதுதான் அந்த கதாபாத்திரத்திற்கு கூடுதல் வலிமை சேர்க்கும்.
நடிகர்கள்-இயக்குனர்கள் பற்றி சொன்னது:
நான் 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருக்கிறேன். எனக்கு ஒரே இடத்தில் இருப்பதால் சோர்வு எல்லாம் கிடையாது. இது என்னுடைய வேலை கிடையாது. சினிமா மீதான காதல். கதை சொல்வதில் இருக்கும் ஆர்வம், கதையை சினிமா என்ற ஊடகம் மூலம் சொல்கிறோம். அவர்களே வேண்டாம் என்று அனுப்பும் வரை நான் இயக்கிக் கொண்டிருப்பேன். நடிகருக்கு இல்லாத ஒரு பிளஸ் இயக்குனருக்கு உண்டு. காரணம், ஒரு வருடத்தில் 60 அல்லது 75 நாட்கள் தான் படப்பிடிப்பு நேரம். மற்ற நேரம் எப்போதுமே ஐடியா தோன்றும். அதை எழுதலாம். இதனால் நிறைய நேரம் கிடைக்கும். அதே நடிகர் பல படங்களில் நடிக்கிறார். பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டி இருக்கும். இயக்குனர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான். அவர்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது. நிறைய நேரம் ஓய்வு எடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.