ஒன்று இரண்டு அல்ல மூன்று முறை, அதை சாத்தியமாக்கியது இவர்கள் தான் - நெகிழ்ச்சியில் மணிகண்டன் பதிவு
மக்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் மணிகண்டன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக மணிகண்டன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பீட்சா 2 வில்லா என்ற படத்தில் துணை இயக்குனராக தமிழ் சினிமா படத்தில் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த இந்தியா பாகிஸ்தான் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதை தொடர்ந்து இவர் காதலும் கடந்து போகும், எட்டு தோட்டாக்கள், விக்ரம் வேதா போன்ற பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். குறிப்பாக, இவர் விக்ரம் வேதா படத்தில் டயலாக் ரைட்டராக இருந்தார். இதற்காக இவருக்கு சில விருதுகளுமே கிடைத்திருந்தது. அதற்குப்பின் இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியிருந்த காலா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மகனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருந்தார்.
மணிகண்டன் திரைப்பயணம்:
இதை தொடர்ந்து இவர் சில்லு கருப்பட்டி, நெற்றிக்கண் போன்ற பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கான ஒரு அங்கீகாரத்தை பெற்றார். அதற்குப்பின் சூர்யா நடிப்பில் மற்றும் தயாரிப்பில் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியிருந்த ஜெய் பீம் படத்தில் மணிகண்டன் அவர்கள் ராஜகண்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதை தொடர்ந்து இவர் குட் நைட், லவ்வர் போன்ற அடுத்த அடுத்த ஹிட் படங்களில் நடித்து வந்தார்.
குடும்பஸ்தன் படம்:
தற்போது இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார் என்று சொல்லலாம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த குடும்பஸ்தன் படம் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தை சினிமாக்காரன் எஸ். வினோத் தயாரிப்பில் இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கி வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து மணிகண்டன் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அது மட்டுமில்லாமல் மணிகண்டன் நடித்த குட் நைட், லவ்வர் மற்றும் குடும்பஸ்தன் ஆகிய மூன்று படங்களுமே 50 நாட்களைக் கடந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
மணிகண்டன் பதிவு:
இப்படி இருக்கும் நிலையில் இதற்கு காரணமான ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் மணிகண்டன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், மக்களிடமிருந்து எனக்கு கிடைக்கும் அன்பை வெளிப்படுத்த எனக்கு வார்த்தைகளே இல்லை. ஒரு சின்ன திரைப்படம் திரையரங்கில் 50 நாட்கள் ஓடியதை கொண்டாடுவது மிகப்பெரிய வெற்றி, சாதனை. அது ஒருமுறை இரண்டு முறை அல்ல மூன்று முறை நடந்திருக்கிறது. இதை சாத்தியமாக்கிய ஒவ்வொருவருக்குமே என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
நன்றி சொன்ன மணின்கண்டன்:
நீங்கள் எங்களுக்கு கொடுக்கும் அன்பு எப்போதுமே எங்களுடன் இருக்கும். என் மீது நம்பிக்கை வைத்த திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் இயக்குனர்களுக்கும் இந்த படங்கள் வெற்றி பெற உழைத்த அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் படக்குழு உறுப்பினர்களுக்கும் என்னுடைய நன்றிகள். என்னையும் என்னுடைய நடிப்பையும் ஏற்றுக்கொண்ட அனைத்து மக்களுக்கும் மனதார அன்பு கலந்த நன்றிகள் என்று நிகழ்ச்சியில் பதிவிட்டிருக்கிறார்.