மணிகண்டனின் 'குடும்பஸ்தன்' படம் ரசிகர்களை கவர்ந்தாரா? முதல் நாள் வசூல் விவரம் இதோ

By subhashini · 25/1/2025

மணிகண்டனின் குடும்பஸ்தன் படத்தினுடைய முதல் நாள் வசூல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக மணிகண்டன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பீட்சா 2 வில்லா என்ற படத்தில் துணை இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த இந்தியா பாகிஸ்தான் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதை தொடர்ந்து இவர் காதலும் கடந்து போகும், எட்டு தோட்டாக்கள், விக்ரம் வேதா போன்ற பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். குறிப்பாக, இவர் விக்ரம் வேதா படத்தில் டயலாக் ரைட்டராக
இருந்தார். இதற்காக இவருக்கு சில விருதுகளுமே கிடைத்திருந்தது. அதற்குப்பின் இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியிருந்த காலா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மகனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருந்தார்.

மணிகண்டன் திரைப்பயணம்:

இதை தொடர்ந்து இவர் சில்லு கருப்பட்டி, நெற்றிக்கண் போன்ற பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கான ஒரு அங்கீகாரத்தை பிடித்தார். அதற்குப்பின் சூர்யா நடிப்பில் மற்றும் தயாரிப்பில் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியிருந்த ஜெய் பீம் படத்தில் மணிகண்டன் அவர்கள் ராஜகண்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு மிகப்பெரிய பாராட்டைப் பெற்றிருந்தது. இதை தொடர்ந்து இவர் குட் நைட், லவ்வர் போன்ற அடுத்த அடுத்த ஹிட் படங்களில் நடித்து வந்தார்.

குடும்பஸ்தன் படம்:

தற்போது இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார் என்று சொல்லலாம். தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் குடும்பஸ்தன். இந்த படம் சினிமாக்காரன் எஸ். வினோத் தயாரிப்பில் இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கி வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் மணிகண்டன் மற்றும் சான்வி மேகனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் இணைந்து குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வைசாக் இசையமைத்திருக்கிறார், சுஜித் N சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் வசூல்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் குடும்பஸ்தன் படத்தினுடைய முதல் நாள் வசூல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டது. இந்த படம் இதுவரை ஒன்றரை கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. வளர்ந்து வரும் நடிகருடைய படத்துக்கு முதல் நாளே ஒன்றரை கோடி வசூல் என்பது பெரிய விஷயம் தான். இனிவரும் நாட்களிலும் இந்த படம் நல்ல வசூல் செய்யும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சொல்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

படத்தின் கதை:

படத்தில் மிடில் கிளாஸ் பையனாக இருக்கும் மணிகண்டன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அப்போது அவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஹீரோயினை காதல் திருமணம் செய்து கொள்கிறார். அதனால் இவர்கள் இரு வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு ஏற்படுகிறது. இருந்தாலும் அவர்களை வீட்டில் சேர்த்துக் கொள்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு குடும்பத்தின் மொத்த பொறுப்பும் மணிகண்டன் கைக்கு வருகிறது. இந்த சமயம் பார்த்து கிராபிக் டிசைனராக வேலை செய்யும் மணிகண்டன் வேலையின் போது நகைக்கடை பிரதிநிதியை அறைந்து விடுகிறார். அதனால் அவருக்கு வேலை போய் விடுகிறது. தனக்கு வேலை போனதை வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் மணிகண்டன் மறைக்கிறார். இந்த சூழலில் வீட்டு தேவைகளுக்காக கடன் வாங்கும் மணிகண்டன் அதை சமாளிக்க முடியாமல் திணறுகிறார். அதன் பின் என்ன நடந்தது? இந்த நெருக்கடியிலிருந்து அவர் வெளிவந்தாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதி கதை.

behindtalkies AMP · Quick view
View full