4 வருடம் என் வாழ்க்கையில் அவ்வளவு கஷ்டத்தை பார்த்தேன் - மனம் திறந்து மணிகண்டன் பகிர்ந்த தகவல்

By subhashini · 14/3/2025

தன்னுடைய நண்பர்கள் குறித்து நடிகர் மணிகண்டன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக மணிகண்டன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பீட்சா 2 வில்லா என்ற படத்தில் துணை இயக்குனராக தமிழ் சினிமா படத்தில் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த இந்தியா பாகிஸ்தான் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதை தொடர்ந்து இவர் காதலும் கடந்து போகும், எட்டு தோட்டாக்கள், விக்ரம் வேதா போன்ற பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். குறிப்பாக, இவர் விக்ரம் வேதா படத்தில் டயலாக் ரைட்டராக இருந்தார். இதற்காக இவருக்கு சில விருதுகளுமே கிடைத்திருந்தது. அதற்குப்பின் இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியிருந்த காலா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மகனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருந்தார்.

மணிகண்டன் திரைப்பயணம்:

இதை தொடர்ந்து இவர் சில்லு கருப்பட்டி, நெற்றிக்கண் போன்ற பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கான ஒரு அங்கீகாரத்தை பெற்றார். அதற்குப்பின் சூர்யா நடிப்பில் மற்றும் தயாரிப்பில் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியிருந்த ஜெய் பீம் படத்தில் மணிகண்டன் அவர்கள் ராஜகண்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதை தொடர்ந்து இவர் குட் நைட், லவ்வர் போன்ற அடுத்த அடுத்த ஹிட் படங்களில் நடித்து வந்தார்.

குடும்பஸ்தன் படம்:

இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார் என்று சொல்லலாம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் குடும்பஸ்தன். இந்த படம் சினிமாக்காரன் எஸ். வினோத் தயாரிப்பில் இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கி வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நடிகர் மணிகண்டன் மற்றும் சான்வி மேகனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

மணிகண்டன் பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் மணிகண்டன், எங்கள் வீட்டில் கிரகபிரவேசம் பண்ணி இருந்தோம். அப்போது என்னுடைய நண்பர்களிடம் என் அப்பா, நான் பெற்றேன், படிக்க வைத்தேன், அவ்வளவுதான். மீதி எல்லாம் நீங்கள் தான் பார்த்திருக்கிறீர்கள். அவனைப் பார்த்துக்கோங்க என்று சொன்னார். அவர் அப்படி சொன்னதற்கு காரணம், என்னுடைய கேரியர் தொடங்கியதிலிருந்து சினிமாவிற்கு நான் வந்தது முதல் அனைத்துமே என்னுடைய நண்பர்களால் தான்.

வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டம்:

அவர்கள் என்னிடம், நீ ட்ரை பண்ணா உனக்கு வரும் என்று போலியாக சொல்லாமல் உனக்கு இது வரவில்லை, இது நன்றாக இல்லை. நீ நிறைய கத்துக்கணும் என்று சொல்லி எனக்கு மோட்டிவேட் பண்ணினார்கள். அதே மாதிரி நான் நடுவில் ஒரு 4,5வருடம் எங்கள் வீட்டில் சுத்தமாக காசு வாங்க கூடாது என்று முடிவு பண்ணி விட்டேன். எனக்கும் அந்த சமயத்தில் வேலை இல்லை. அப்போது என்னுடைய நாலு வருஷமும் என்னுடைய நண்பர்கள் பிரவீன், ராகேந்து தான் தினமும் காசு கொடுப்பார்கள் என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full