உண்மையான பைசன் இவர் தான் - நெகிழ்ச்சியில் இயக்குனர் மணிரத்தினம் சொன்ன விஷயம்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக மாரி செல்வராஜ் திகழ்கிறார். இவர் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கி இருந்தார். இந்த படங்களும் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து கடைசியாக இவர் இயக்கிய வாழை படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் பைசன். இந்த படத்தில் பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், லால் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு நிவாஸ். கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன் இருவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள்.
பைசன் படம்:
கபடி விளையாட்டை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதோடு கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளிவந்த இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் பைசன் படத்தை பார்த்து இயக்குனர் மணிரத்தினம் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மணிரத்னம் பாராட்டு:
மணிரத்தினம் பாராட்டி சொன்னதை மாரி செல்வராஜ் போட்ட பதிவில், பைசன் படத்தை பார்த்தேன். உங்கள் படத்தை பார்த்து பெருமைப்படுகிறேன். எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. மாரி செல்வராஜ் தான் உண்மையான பைசன். அதோடு இங்கே இந்த மாதிரி குரல்கள் இருப்பது ரொம்பவே முக்கியம் என்று சொன்னார் மணிரத்தினம். பரியேறும் பெருமாள் படத்தில் இருந்து என்னுடைய படைப்புகள் அத்தனையும் பார்த்து கவனித்து பாராட்டி என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் அத்தனை வார்த்தைகளுக்கும் என் நன்றியும் பேரன்பும் எப்போதும் சார் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
படத்தின் கதை:
கபடி விளையாட்டின் மீது ஆர்வமாக இருக்கும் ஒரு கிராமத்து இளைஞன், ஜாதி பிரச்சனைகள், அவமானங்கள், வன்முறை, துரோகங்கள் என பல தடைகளை மீறி எப்படி தன் வாழ்க்கையில் வெற்றி பெற்று இந்திய அணியில் இணைகிறார் என்பது தான் படத்தினுடைய கதை. படத்தின் ஆரம்பத்தில் ஜப்பானில் நடக்கும் ஆசிய கபடி விளையாட்டு போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. அதில் விளையாடும் இந்திய வீரராக துருவ் விக்ரம் இருக்கிறார். இவர் இந்த இடத்துக்கு எப்படி வந்தார்? என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தார் என்பது தான் கதை.