“தமிழில் பிழை இருக்கிறது”... சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் – எம்.எல்.ஏ ராஜேந்திரன் இடையே காரசார வி
சட்டப்பேரவையில் மரிய வில்சனின் தமிழ் உச்சரிப்பு குறித்து எம்.எல்.ஏ ராஜேந்திரன் பேசியதைத் தொடர்ந்து காரசார விவாதம். “நான் யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்ள முடியாது” என அமைச்சர் பதில்.
தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சனின் தமிழ் உச்சரிப்பு மற்றும் சில சொற்றொடர்களில் ஏற்பட்டதாகக் கூறப்படும் இலக்கணப் பிழைகள் தொடர்பாக, கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ டி.எம். ராஜேந்திரனுக்கும் நிதியமைச்சர் மரிய வில்சனுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. ஒரு கட்டத்தில் விவாதம் தனிப்பட்ட விமர்சனமாக மாறும் சூழல் ஏற்பட்ட நிலையில், சபாநாயகர் குறுக்கிட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார்.
“தமிழில் சில சொற்கள் இலக்கணப் பிழையாக இருந்தது”
சட்டப்பேரவையில் பேசிய கடையநல்லூர் எம்.எல்.ஏ டி.எம். ராஜேந்திரன், நிதியமைச்சர் மரிய வில்சனின் ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக இருந்ததாக முதலில் குறிப்பிட்டார். அதே நேரத்தில், தமிழில் பட்ஜெட் உரையை வாசித்தபோது சில சொற்றொடர்களை அவர் பயன்படுத்தவில்லை என்றும், சில வார்த்தைகள் இலக்கணப் பிழையுடன் இருந்ததாகவும் தெரிவித்தார்.
எனினும், இதை நிதியமைச்சருக்கு எதிரான குறையாகவோ அல்லது குற்றச்சாட்டாகவோ தான் பார்க்கவில்லை என்றும் ராஜேந்திரன் விளக்கம் அளித்தார். எதிர்காலத்தில் நிதியமைச்சருக்கு பிழையின்றி பட்ஜெட் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவருக்கு உதவ வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மொழியை வைத்து கேலி செய்கிறீர்களா?”
ராஜேந்திரனின் கருத்துக்கு பதிலளித்த நிதியமைச்சர் மரிய வில்சன், தனது கல்வி மற்றும் பணிப் பின்னணி குறித்து விளக்கினார். சுமார் 25 முதல் 30 ஆண்டுகள் கல்வித் துறையில் இருந்ததாகவும், அந்த காலகட்டத்தில் தனது தொழில்சார் தொடர்புகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தன்னைப் பற்றிய விமர்சனங்கள் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து வருவதாகக் கூறினார். உருவ கேலி, சாதி மற்றும் பெண்களைப் பற்றிய கேலி உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து தற்போது மொழியை வைத்தும் கேலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் ஆவேசமாக தெரிவித்தார்.
“நான் யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்ள முடியாது”
தனது தனிப்பட்ட நம்பிக்கைகள் குறித்தும் பேசிய மரிய வில்சன், கிறிஸ்தவம் தனக்கு அன்பு, அமைதி மற்றும் இரக்கம் ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். தமிழ் மொழியை தான் மதிப்பதாகவும், அதே நேரத்தில் தனது பேச்சு முறையை வைத்து தன்னை கேலி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.
“நான் இப்படித்தான் பேசுவேன். நான் யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்ள முடியாது. என் ஸ்டைல் இதுதான். கேலி செய்கிறீர்களா?” என்ற வகையில் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
சபாநாயகர் தலையிட்டு விவாதத்துக்கு முற்றுப்புள்ளி
நிதியமைச்சரின் பதில் ஆவேசமாக சென்ற நிலையில், சபாநாயகர் குறுக்கிட்டார். நிதியமைச்சர் மக்களுக்கு புரியும் வகையில்தான் பேசுகிறார் என்றும், இந்த விவகாரத்தை இதோடு விட்டுவிடலாம் என்றும் கூறி இரு தரப்பினருக்கும் இடையிலான விவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.கேலி செய்த திமுக MLA - கடுப்பான அமைச்சர் மரிய வில்சன்
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் உரை மற்றும் நிர்வாக விவகாரங்கள் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், நிதியமைச்சரின் தமிழ் உச்சரிப்பு குறித்த ஒரு கருத்து, அவருக்கும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏவுக்கும் இடையே நேரடி வாக்குவாதமாக மாறியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.