எங்க வீட்டுல சோலார் இருக்குன்னு பார்த்தீங்களா? நான் தற்குறியா?- கொந்தளிக்கும் மாஸ்டர் மகேந்திரன்

கரண்ட் சர்ச்சைக்கு மகேந்திரன் விளக்கம்

By subhashini · 15/6/2026

தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்கே மாஸ்டர் மகேந்திரன் தான். தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் மாஸ்டர் மகேந்திரன். சமீபத்தில் தமிழகத்தின் மின்வெட்டு பிரச்சனை குறித்து மகேந்திரன், தமிழ்நாட்டில் மின்வெட்டு இருக்கு. என் வீட்டிலும் மின் வெட்டு இருக்கு. அதுக்காக நம்ம முதலமைச்சர் விஜய் கேள்வி கேட்க எழுப்பினால் உங்க வீட்டுக்கு கரண்ட் வந்துருமா?

இப்ப முதலமைச்சரை நோக்கி மைக்கை நீட்டி என்னங்க, தமிழ்நாட்டில ஒரே மின்வெட்டா இருக்கு? அப்படின்னு கேள்வி கேட்டா உடனே கரண்ட் வந்துருமா? அதோட இவ்வளவு நாள் நீங்கள் கரண்ட் இல்லாம இருந்தீங்க இல்ல, ஒரு ஆறு மாதம் இந்த பிரச்சனை வந்தால் எதிர்கொண்டு போக முடியாதா? சோலார் மாதிரியான வேறு ஆப்ஷன்களுக்கு போயிருக்கணும். சூரிய ஒளியில் இருந்து கரண்ட் எடுப்பது எப்படி என்பது எனக்கு தெரியும் என்று பேசியிருந்தார்.

மாஸ்டர் மகேந்திரன் சர்ச்சை:

இதை அடுத்து சோசியல் மீடியாவில் இரண்டு நாட்களாகவே மாஸ்டர் மகேந்திரனை வருத்தெடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் மகேந்திரன், முதலில் ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்திக்கொள்கிறேன். நான் இந்த நிமிடம் வரை எந்த கட்சியிலும் உறுப்பினராக இல்லை. ஏதாவது ஒரு கட்சியில் போய் சேரனும் என்ற எண்ணமும் எனக்கு இப்போதைக்கு இல்லை. அதேபோல் பவர் கட்டுக்கு காரணம்னு யாரையும் நான் குறிப்பிட்டு பேசவில்லை. சில நொடிகள் போற ஷார்ட்ஸ்ல இதுதான் பிரச்சனை. முன்னாடியும் பின்னாடியும் என்ன பேசி இருக்காங்க என்று தெரியாது.

மகேந்திரன் பேட்டி:

அந்த 10, 20 நொடியில் பேசுவதை வைத்து அவங்க எதையாவது நினைத்துக் கொண்டு அப்படியே பரப்பி விட வேண்டியது. நான் சொல்ல வந்த விஷயம் இதுதான். மின்சார தேவை அதிகமாகின்ற போது தான் பவர் கட் பிரச்சனை வரும். அந்த தேவையை சமாளிக்க என்னென்ன வழி எல்லாம் இருக்கோ அதைத்தான் பார்க்கணும். அப்பதான் வெயில் அதிகம் அடிக்கிற நம்மூரில் சோலார் மின்சாரம் இருக்கு என்று சொன்னேன். சோலார் மின்சாரம் தயாரிச்சோம்னா அரசாங்கத்தில் மானியம் எல்லாம் தராங்கன்னு கேள்விப்பட்டேன். அந்த வழியை நாம் முன்னோடியா தேர்ந்தெடுத்தோம்னா இப்படி பிரச்சனையை சந்திக்க வேண்டிய நிலை வந்திருக்காது என்று ஆதங்கத்தை தான் நான் வெளிப்படுத்தினேன்.

சர்ச்சைகளுக்கு பதிலடி:

பக்கத்து மாநிலமான கேரளாவில் கொச்சின் ஏர்போர்ட் முழுக்க முழுக்க சோலார் சிஸ்டத்தில் இயங்குகிறது. அங்கே எல்லாம் அது சாத்தியமாகும்போது இங்கு ஏன் முடியாது என்று தான் என்னுடைய கேள்வி. ஆனால், அதை தப்பா புரிந்து கொண்டு என் வீட்டில் சோலார் செட்டப் வைத்திருக்கிறேன். இன்னும் திமிராக பேசுவேன் என்றும் திட்டி தீர்க்கிறார்கள். தற்குறி என்று சொல்கிறார்கள். நீங்களே சொல்லுங்க, நான் பேசினது தற்குறித்தனமா? அல்லது தப்பா புரிஞ்சுகிட்டவங்க தற்குறியா? அதனால நான் என் கருத்தில் உறுதியாக இருக்கிறேன். அதிலிருந்து பின்வாங்குவதாக இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full