'ஷ்ரேயாஸ் ஐயர்ரை நேரடியாக கேப்டனாக்கியது சரியான முடிவா?' - பிசிசிஐ தேர்வாளர்களை கேள்வி கேட்ட முகமது கைஃப்
'ஷ்ரேயாஸ் ஐயரை நேரடியாக கேப்டனாக்கியது சரியான முடிவா?' - பிசிசிஐ தேர்வாளர்களை கேள்வி கேட்ட முகமது கைஃப்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி தடுமாறி வரும் நிலையில், அணித் தேர்வு மற்றும் கேப்டன் நியமனம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறாதது, ஷ்ரேயாஸ் ஐயர் நேரடியாக கேப்டனாக நியமிக்கப்பட்டது, திலக் வர்மா துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டது ஆகிய முடிவுகளை முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
'கேப்டன், வைஸ் கேப்டன் என்றால் நீக்கவே முடியாது'
தனது யூடியூப் சேனலில் பேசிய கைஃப், திலக் வர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டன், துணைக் கேப்டனாக நியமித்ததால் அணி நிர்வாகம் தேவையற்ற அழுத்தத்தில் சிக்கியுள்ளதாக கூறினார். "கேப்டன் மற்றும் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்ட இரண்டு வீரர்களுக்கே ஒவ்வொரு போட்டியிலும் பிளேயிங் லெவனில் இடம் உறுதியானதா என்ற கேள்வி இருக்கிறது. திலக் வர்மா திறமையான வீரர்தான். அவர் போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார். ஆனால் கேப்டன், துணைக் கேப்டன் என்ற பதவி கொடுத்தவுடன் அவர்களை எளிதாக அணியில் இருந்து நீக்க முடியாது. அதுதான் தற்போது பிரச்சினையாக மாறியுள்ளது," என்றார்.
'சஞ்சு சாம்சனை நீக்கியது மிகப்பெரிய தவறு'
இந்த முடிவின் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது சஞ்சு சாம்சன் தான் என்றும் கைஃப் கூறினார். "சஞ்சுவை நீக்கியது மிகப்பெரிய முடிவு. அதை வேறு விதமாக கையாள முடிந்திருக்கும். அபிஷேக் ஷர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் ஆகிய மூவருக்கும் வாய்ப்பு கொடுத்து அதன் பிறகு முடிவு எடுத்திருக்கலாம். ஆனால் அவசரமாக சஞ்சுவை வெளியேற்றியது சரியான அணுகுமுறை அல்ல," என்று அவர் தெரிவித்தார்.
'இந்திய கிரிக்கெட்டில் இதுபோல் நடந்ததே இல்லை'
ஷ்ரேயாஸ் ஐயர் நேரடியாக கேப்டனாக நியமிக்கப்பட்டது இந்திய கிரிக்கெட்டில் அரிதான சம்பவம் என்றும் கைஃப் சுட்டிக்காட்டினார். "டி20 அணியிலேயே இல்லாத ஒரு வீரர் திடீரென மீண்டும் அணிக்குள் வந்து, நேரடியாக உலக சாம்பியன் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவது இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே நடந்ததாக எனக்கு நினைவில்லை. இது மிகப்பெரிய முடிவு. அந்த முடிவை எடுத்தவர்களிடமும் கேள்விகள் கேட்கப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.
'ஷ்ரேயாஸ் மீது அல்ல... முடிவு எடுத்தவர்கள்மீதுதான் கேள்வி'
தான் ஷ்ரேயாஸ் ஐயரை குற்றம் சொல்லவில்லை என்றும், அவரை கேப்டனாக நியமித்த தேர்வுக் குழு மற்றும் அணி நிர்வாகத்தின் முடிவைத்தான் கேள்வி எழுப்புவதாக கைஃப் தெளிவுபடுத்தினார். "ஷ்ரேயாஸ் ஐயர் தவறு செய்தார் என்று நான் கூறவில்லை. அவர் தனது வேலையை செய்கிறார். ஆனால் உலகக் கோப்பையை வென்ற அணியின் கேப்டனை மாற்றி, டி20 அணியிலேயே இல்லாத ஒருவரை நேரடியாக கேப்டனாக்கியது மிகப்பெரிய முடிவு. அந்த முடிவுக்கான விளக்கத்தை தேர்வாளர்களும் அணி நிர்வாகமும் அளிக்க வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.
இந்திய அணியின் அடுத்த முடிவு என்ன?
இங்கிலாந்து தொடரில் இந்திய அணி எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாததால், கேப்டன்சி, அணித் தேர்வு மற்றும் பிளேயிங் லெவன் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக சஞ்சு சாம்சனை வெளியே வைத்தது, திலக் வர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிப்பது, ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி என அனைத்தும் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த விமர்சனங்களுக்கு இந்திய அணி அடுத்த போட்டிகளில் வெற்றியுடன் பதிலளிக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.