'நான் என்ன பண்றது' - ஹேமா கமிட்டி விவகாரம், பத்திரிக்கையாளர்கள் கேள்வியால் திணறிய மோகன்லால்
ஹேமா கமிட்டி தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட அடுக்கடுக்கான கேள்விக்கு நடிகர் மோகன்லால் திணறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சினிமாவில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மலையாள சினிமாவிலும் இந்த மாதிரி நிறைய நிகழ்வுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்திருந்தது.
பின் இது தொடர்பாக விசாரணையும் நடத்தி இருந்தார்கள். அதனை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயன் இடம் 233 பக்க அறிக்கை ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், இதை பல காரணங்களால் வெளியிடாமல் இருந்தது. பின் கடந்த 19 ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், நிறைய பெண்கள் அட்ஜஸ்ட்மெண்ட் என்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது.
ஹேமா கமிட்டி அறிக்கை:
இது குறித்து கேரள சினிமாவில் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. மேலும், இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இந்த ஹேமா கமிட்டி விவகாரம் தொடர்பாக இதுவரை மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்மூட்டி எதுவுமே பேசவில்லை. இதை அடுத்து மலையாள திரைப்பட சங்கமான அம்மா சில தினங்களுக்கு முன்பு தான் கலைக்கப்பட்டது. பாலியல் புகார் குறித்து ஆலோசிக்க அம்மா சங்கம் கூடுவதாக இருந்த நிலையில் மோகன்லால் உட்பட 17 நிர்வாகிகள் ராஜினாமா செய்து விலகி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபலங்கள் கருத்து:
இதை அடுத்து பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகரும், அம்மா அமைப்பின் முன்னாள் தலைவருமான மோகன்லால், அம்மா அமைப்பில் இரண்டு முறை நான் தலைவராக இருந்திருக்கிறேன். ஆனால், இதுபோன்று ஒரு இக்கட்டான சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை. என்னுடைய மனைவி மருத்துவமனையில் இருக்கிறார். அதனால் தான் நான் செய்தியாளர்களை சந்திக்க முடியவில்லை. நான் இங்கே தான் இருக்கிறேன். எங்கேயும் ஓடி ஒளியவில்லை. மலையாள சினிமாவில் 21 சங்கங்கள் இருக்கிறது. ஆனால், அம்மா அமைப்பை மட்டும் குறை சொல்ல வேண்டாம்.
https://youtu.be/UF5qbHHdkew?si=44fT2lBex_vGk8dl
மோகன்லால் பேட்டி:
எல்லாவற்றுக்கும் அம்மா அமைப்பை குறை கூறுவது சரி கிடையாது. மலையாள திரை உலகம் பாதிக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பாலியல் புகார் தொடர்பாக அரசு தன்னுடைய கடமையை செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அம்மா அமைப்பு மீது அவதூறு பரப்பாதீர்கள். இந்த பிரச்சனையில் இருந்து மலையாள திரை உலகம் மீண்டு வர வேண்டும். வயநாடு நிலச்சரிவின் போது அம்மா அமைப்பின் மூலம் மக்களுக்கு பல உதவிகளை செய்திருக்கிறோம். பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக எல்லாத் துறைகளிலுமே மாற்றம் வேண்டும். பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சைகளுக்கு ஒட்டுமொத்த கேரளா திரையுலகமே பதில் சொல்லும்.
ஹேமா கமிட்டி குறித்து சொன்னது:
இந்த பாலியல் புகாரால் சினிமாத்துறையில் உள்ள கடைநிலை ஊழியர்கள் கூட பாதிக்கப்படக்கூடாது. அனைத்து பாலியல் குற்றச்சாட்டுகளையுமே ஒட்டுமொத்த கேரளா திரை உலகமும் பதில் சொல்லும். இந்த புகார்கள் தொடர்பாக அரசும், நீதிமன்றம் தான் கடமைகளை செய்யும். மேலும், இந்த புகார் தொடர்பாக நான் முழுமையாக விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன். அம்மா சங்கத்தின் செயல்பாடுகளில் பாதிப்பு கிடையாது. ஹேமா கமிட்டி அறிக்கையை நான் முழுமையாக படிக்கவில்லை. யார் தவறு செய்தாலும் கண்டிப்பாக தண்டனை பெற்றாக வேண்டும் என்று பேசியிருந்தார். இருந்தாலுமே செய்தியாளர்கள் இந்த விவகாரம் தொடர்பாக மோகன்லாலை கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே போனதால் ரொம்பவே திணறி விட்டார்.