'அந்த அழைப்பின் பின்னணியில் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியும்'- விமர்சனங்களுக்கு மோகினி டே பதிலடி

By krithika · 23/11/2024

கடந்த சில நாட்களாகவே ஏ.ஆர். ரஹ்மானின் விவாகரத்து குறித்த செய்திகள் தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவின் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். தொடக்கத்தில் பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மான், முதல் முதலில் இசையமைத்தது மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளிவந்த 'யோதா' என்ற படம் தான். ஆனால், அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே தமிழில் 'ரோஜா' படம் வெளியானதால் ரோஜா படமே ரஹ்மானின் முதல் படமாக மாறியது.

மேலும், இவர் இசை அமைத்த முதல் படத்திலேயே அனைத்து பாடல்களும் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டானது தொடர்ந்து, கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களுக்கும் இசையமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு, கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த
'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்திற்கு இசையமைப்பதற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்தது நாம் அறிந்ததே.

ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து:

இப்படி 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர். ரஹ்மானின் விவாகரத்து செய்தி திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதாவது சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா , திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்து நான் ரஹ்மானை பிரிந்து செல்வது கடினமாக முடிவுதான். இத்தனை வருடங்கள் வாழ்க்கையை நடத்திய பிறகு சமீப காலமாக எங்களுக்குள் வலியும் கவலையும் அதிகமாகின. பதட்டங்கள் உருவாகி ஒரு தீர்க்க முடியாத இடைவெளி உருவாகி இருக்கின்றன. அந்த இடைவெளியை நிரப்ப முடியவில்லை எங்களால் முடியவில்லை.

View this post on Instagram

A post shared by “A.R.Ameen” (@arrameen)

எழுந்த சர்ச்சைகள்:

அதனால் கடுமையான மனவலியில் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மான், தனது மனைவி சாய்ரா பானுவின் அறிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் தனது எக்ஸ் தளத்தில் விவாகரத்துச் செய்தியை உறுதி செய்திருந்தார். இதற்கிடையே, ஏ.ஆர். ரஹ்மானிடம் பணியாற்றும் பாடகி மோகினி டே, தன் கணவர் மார்க் ஹர்ட்சுவை பிரிவதாக அறிவிக்க, இவர்கள் இருவர் குறித்து சில வதந்திகள் பரப்பப்பட்டது.

ஏ.ஆர். அமீன் பதிவு:

அதனால், தன் தந்தை குறித்து எழுந்து வந்த வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏ.ஆர். ரகுமானின் மகன் ஏ.ஆர். அமீன் , 'என் தந்தை ஒரு லெஜெண்ட். திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளால் மட்டுமல்ல, இத்தனை வருடங்களாக அவர் சம்பாதித்த மதிப்பு, மரியாதை மற்றும் அன்பு ஆகியவற்றிற்காக அவர் லெஜெண்ட். ஆதாரம் அற்ற பொய்யான சில வதந்திகள் பகிருவதை பார்க்கும் போது மனம் உடைகிறது. ஒருவரின் வாழ்க்கையைப் பற்றி பேசும்போது உண்மையின் முக்கியத்துவத்தையும், மரியாதையையும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். பொய்யான தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும் ' என்று பதிவிட்டு இருந்தார்.

மோகினி டே பதிவு:

இந்நிலையில், பாடகி மோகினி டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், என் மீதான விமர்சனங்கள் தொடர்ந்த போது, பல நேர்காணல்களுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பின் பின்னணியில் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியும். நான் அவைகளை மரியாதை உடன் நிராகரிக்க விரும்புகிறேன். இந்த வதந்திகளுக்கு தீனி போடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. எனது ஆற்றல், வதந்திகளுக்கு பதில் கூறி செலவழிக்கத் தகுதியற்றது என்றே நம்புகிறேன். தயவுசெய்து எனது தனியுரிமையை மதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full