அப்பாவின் இல்லாதது மிகப்பெரிய இழப்பு - தந்தையின் நினைவு நாளில் விஜய் வசந்த் வெளியிட்ட உருக்கமான வீடியோ
தனது தந்தையின் நினைவு நாளில், விஜய் வசந்த் வெளியிட்டிருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வசந்த் & கோ மற்றும் வசந்த் தொலைக்காட்சி நிறுவனரும், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி யாக இருந்த வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆவது நாள் இயற்கை எய்தினார். வசந்தகுமாரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், உறவினர்கள், பொதுமக்கள், அவரது ஊழியர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி இருந்தார்கள்.
மேலும், வசந்தகுமாரின் மகன்தான் நடிகர் விஜய் வசந்த். தற்போது இவர் தான் வசந்த் & கோ வின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளார். இவர் முதல் முதலில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய 'சென்னை 28' திரைப்படத்தில் தான் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து, பல படங்களில் விஜய் வசந்த் நடித்திருக்கிறார். மேலும், கடந்த சில வருடங்களுக்கு முன் கன்னியாகுமரி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று விஜய் வசந்த் எம்பியாகவும் பொறுப்பேற்றார். தற்போது இவர் சினிமாவை காட்டிலும், அரசியலில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
வசந்த் விஜய் வீடியோ :
இந்நிலையில், இன்று தனது தந்தையின் நினைவு என்பதால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் வசந்த் உருக்கமான காணொளியை வெளியிட்டுள்ளார். அதில், ஆகஸ்ட் 28 இன்று, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினரும் எனது தந்தையுமான H.வசந்தகுமார் அவர்கள் மறைந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. 2020 ஆம் ஆண்டு இதே நாளில் அப்போலோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி, கொரோனா தாக்குதல் காரணமாக உயிர் இழந்தார். மக்கள் பணி செய்து கொண்டிருக்கும்போது கொரோனா தொற்று ஏற்பட்டு எனது அப்பா இயற்கை எய்தினார்.
அப்பா குறித்து விஜய் வசந்த் உருக்கம்:
மேலும் அதில், எனது அப்பாவுடன் மறக்க முடியாத நினைவுகள் என்றால் அதிகமாக இருக்கிறது. இப்போ எல்லாமே மறக்க முடியாத நினைவுகள் ஆகிவிட்டது. ஏனென்றால், அவர் இல்லாத போது தான் அவர் செய்த எல்லா விஷயங்களும் என் மனதில் வந்து போய்க்கொண்டிருக்கிறது. எனது அப்பாவோட மிகப்பெரிய பலமே தொலைநோக்குப் பார்வையும், எதையும் பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையும் தான். Nothing is impossible என்று சொன்னால் கூட அவருக்கு பிடிக்காது. Everything is possible என்று சொல்ல சொல்லுவார். அந்த அளவுக்கு எல்லாருக்கும் ஒரு பாசிட்டிவ் பைப் அவர் கொடுப்பார்.
அப்பா இல்லாதது மிக பெரிய இழப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் என்ற மண்ணில் பிறந்து, தனது வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியாமல், நான் சாதித்துக் காட்டுவேன் என்ற லட்சியத்தோடு சென்னைக்கு கிளம்பி வந்தார். அங்கு ஒரு கடையை ஆரம்பித்து, அதைப் பெரிய நிறுவனமாக மாற்றி மக்கள் மத்தியில் ஒரு பெரிய இடத்தை பிடித்திருக்கிறார் என்றால் அதுக்கு அவருடைய விடாமுயற்சியும், கடுமையான உழைப்பும் தான் காரணம் என்று சொல்வேன். எனது அப்பா இல்லாதது மிகப்பெரிய இழப்புதான். தொழில் ரீதியாகவும் சரி, குடும்பத்திலும் சரி ஒரு காட் பாதர் மாதிரி அவரு இருந்தாரு.
ஆறுதல் கூறும் இணையவாசிகள்:
எங்கள் எல்லோருக்கும் ஒரு பாதுகாப்பு கவசமாக அவர் இருந்தார். அவர் இல்லாத போது தான், அவர் எவ்வளவு வலிகளையும், தடங்கல்களையும் தாங்கி கொண்டு இருந்திருக்கிறார் என்று தெரிகிறது . அவர் மரணத்திற்கு பிறகு தான், இந்த உலகம் எங்களுக்கு புதியதாக தெரிந்தது. அவருடைய ஒவ்வொரு நிமிடமும் உழைக்க வேண்டும், மக்களுக்காக ஏதாவது பண்ணனும் என்ற எண்ணத்தோடு இருந்தார். இன்று அவர் இல்லை என்பது எங்களுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று உருக்கத்தோடு விஜய் வசந்த் பேசியுள்ளார். தற்போது இந்த காணொளியை பார்த்த இணையவாசிகள், அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.