தமிழ் சினிமாவின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் 'மர்மர்' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

By subhashini · 6/3/2025

தமிழில் ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கி இருக்கும் படம் மர்மர். இந்த படத்தை எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் மெல்வின், ரிஷி, அங்கிதா, ஜெனிபர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் பாணியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் நான்கு யூடியூப் சேனல் இளைஞர்கள் காத்தூர் கிராமத்தில் உள்ள அமானுஷ்ய கதையை கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். பின் அதை வீடியோ டாக்குமெண்டாக தயார் செய்ய காத்தூர் கிராமத்திற்கே செல்கிறார்கள். காத்தூர் கிராமத்தில் மங்கை என்ற பெண்ணினுடைய ஆவி மக்களை பழிவாங்குகிறது. இன்னொரு பக்கம் பௌர்ணமி அன்று ஆற்றில் கன்னி மார்கள் குளிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இப்படி இந்த இரண்டு மர்மமான கதை உண்மையா? இல்லையா? என்பதை கண்டுபிடிக்க தான் இந்த நான்கு இளைஞர்களும் கிராமத்திற்குள் செல்கிறார்கள்.

அதில் இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள். இவர்களுக்கு அந்த கிராமத்தில் உதவ வழி காட்டியாக வரும் நபர் எதிர்பாராத விதமாக பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பின் அவருடைய மகள் காந்தா தான் இவர்களுக்கு உதவி செய்கிறார். ஆரம்பத்தில் இந்த இளைனர்கள் கிராமத்திற்குள் செல்லும் பயணம் ஜாலியாகத்தான் இருக்கிறது. உள்ளே நுழையும்போது மக்கள் ஒவ்வொருவரும் எச்சரிக்கையும், பயத்தையும் கொடுக்கிறார்கள்.

அவர்கள் பெரிதாக அதை கண்டுகொள்ளவில்லை. இருந்தாலும் அதையும் மீறி இரவு நேரத்தில் பல அமானுஷ்ய அசைவுகளும், காலடி சத்தங்களும் தொடர்ந்து நடக்கிறது. இதனால் இவர்கள் பேய் இருக்கிறதா என்பதை ஆராய ஒய்ஜா போர்டை வைத்து விளையாட ஆரம்பிக்கிறார்கள். அதற்குப் பின்னால் இவர்கள் கேட்ட கதை உண்மையா? இல்லையா? என்பது தான் மீதி கதை. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை கேமரா விசுவலில் தான் கதை செல்கிறது.

தமிழ் சினிமாவில் திகில், பேய் படங்கள் புதிது கிடையாது. ஆனால், ‘ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர்’ பாணியில் கதையை இயக்குனர் கொண்டு இருப்பது பாராட்டுக்குரிய விஷயம். ஹாலிவுட், இந்தி சினிமாவில் இந்த மாதிரியான படங்கள் வந்திருந்தாலும் தமிழில் இதுதான் முதல் முறை. திகில் ஊட்டுவதற்கு பெரும்பாலும் இரவு நேர காட்சிகளை தான் காண்பிப்பார்கள். பெரும்பாலும் பகல் நேர காட்சியை எடுத்து இரவு நேரம் மாதிரி லைட் போட்டு விடுவார்கள். ஆனால், இந்த படத்தில் அப்படி இல்லாமல் உண்மையாகவே இரவு நேரத்தில் தான் படபிடிப்பை நடத்தி இருந்தார்கள்.

பகல் நேரத்தில் சருகு, இலைகள், மரங்கள் இடையே நடக்கும் பயணம், இரவில் நெருப்பு வெளிச்சம், டார்ச் லைட்டில் என்று கதையை அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இதற்காக ஒளிப்பதிப்பாளர் ஜோசப் முழு பங்களிப்பையும் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் படங்கள் என்பது இசையமைப்பாளர் பின்னணி இசை அமைக்க கூடாது. பின்னணி ஒலிகளும் லைவாக இருக்க வேண்டும். அதை மனதில் கொண்டு தான் இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=ETjtBlBRqdg

படத்தில் வரும் சத்தங்கள் பார்வையாளர்களை மிரட்டும் வகையில் இயக்குனர் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு ஒலியுமே துல்லியமாக கொடுத்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. படத்தினுடைய ஒலிஅமைப்பு, ஒளிப்பதிவு, லைட்டிங், கலரிங் எல்லாமே பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. ஆனால், சில காட்சிகள் முகம் சுளிக்கும் வகையிலும், ஒவ்வாமை ஏற்படும் வகையிலும் இருந்தாலுமே விறுவிறுப்பை குறையாமல் இயக்குனர் கொண்டு சென்று இருக்கிறார். மொத்தத்தில் ஒரு திரில்லரான படமாக மர்மம் இருக்கிறது.

நிறை:

முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் படம்

ஒலி அமைப்பு, ஒளிப்பதிவு, லைட்டிங் அருமையாக இருக்கிறது

படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை த்ரில்லிங் கதை.

கதைக்களம் கொண்டு சென்ற விதம் நன்றாக இருக்கிறது.

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

சில காட்சிகள் முகம் சுளிக்கும் அளவிற்கு இருக்கிறது

மற்றபடி படத்தில் பெரிதாக குறைகள் இல்லை

மொத்தத்தில் மர்மர் - உச்சம்

Tamil Behind Talkies AMP · Quick view
View full