நான் சரியாக சொல்கிறேனா தெரியவில்லை, ஆனால் - திருமணம் பற்றி இசையமைப்பாளர் தமன் பகிர்ந்த தகவல்
பெண்கள் சுதந்திரம் குறித்து தமன் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தமன். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம்,இந்தி என பிற மொழி படங்களில் இசை அமைத்து வருகிறார். இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
இந்த படத்தில் இவர் ஐந்து நடிகர்களில் ஒருவராக, இசைக்கருவி வாசிப்பவர் ஆக நடித்திருந்தார்.
அதற்கு பிறகு தான் இவருக்கு படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.. அதனை தொடர்ந்து இவர் முதன்முதலாக சிந்தனை செய் என்ற படத்தில் தான் இசையமைத்தார். அதற்குப்பின் இவர் அய்யனார், வந்தான் வென்றான்,காஞ்சனா, ஒஸ்தி போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து வருகிறார்.
தமன் குறித்த தகவல்:
அது மட்டுமில்லாமல் இவர் 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
அதர்வா நடிக்கும் இதயம் முரளி என்ற படத்தில் தான் தமன் நடித்திருக்கிறார். அந்த படத்திற்கு அவரே இசையும் அமைத்திருக்கிறார். இந்தப் படத்தை இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் தான் இயக்குகிறார். தற்போது இந்த படத்தினுடைய வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவர் பிரபல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார்.
தமன் பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது திருமணம் குறித்து தமன் கூறியிருப்பது, பெண்கள் சமூகத்தை நாம் இழந்து கொண்டே வருகிறோம். சமூக விதிமுறைகள், பெண்களின் சுதந்திரம் மாறிவிட்டதால் தான் இன்றைய சூழலில் திருமணம் செய்து கொள்வது பற்றி யோசிக்க வேண்டி இருக்கிறது. நான் இப்போது யாரையுமே திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. பெண்களும் வாழ்க்கையில் சுதந்திரமாக இருக்க விரும்புவதால் தான் இது கடினமாக மாறிவிட்டது.
பெண்கள் சுதந்திரம்:
அவர்கள் யாரும் யாருக்கு கீழும் இருக்க விரும்பவில்லை. நம் முந்தைய பெண்கள் சமூகத்தை இழந்து விட்டோம் என்று எனக்கு தோன்றுகிறது. பெண்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவதாலும் யாரையும் சார்ந்து வாழ விரும்பவில்லை என்பதாலும் கலாச்சாரம் மாறிவிடுகிறது. சமூக வலைத்தளங்கள், மக்கள் உறவுகளை பார்க்கும் விதமும் மாறிவிட்டது. தனிமனிதர்கள் வெற்றிகரமான திருமணத்தை உருவாக்க தேவையானவற்றை கவனிக்காமல் விடுகிறார்கள்.
திருமணம் வாழ்க்கை:
நான் சரியான வார்த்தைகளை பயன்படுத்துகிறேனா என்று தெரியவில்லை. நாம் அழகான விஷயங்களை மட்டுமே பகிர்கிறோம். அதன் பின்னாடி இருக்கும் கஷ்டத்தை மறைத்து வருகிறோம். இப்போது நான் திருமணத்தை ஆதரிப்பதில்லை. காரணம், இன்றைய நிலைகளை புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. மக்கள் விவாகரத்து பெறுவது எல்லாம் சாதாரணமாக ஆகிவிட்டது. யாரும் சகித்துக் கொள்ள விரும்பவும் இல்லை. அதனால் எனக்கு திருமணத்தில் நம்பிக்கையும் இல்லை என்று கூறியிருக்கிறார். இப்படி தமன் சொன்ன கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள்.