தங்கலான் படக்குழுவினரை வாழ்த்தி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்ட அறிக்கை

By subhashini · 14/8/2024

தங்கலான் படம் குறித்து நடிகர் சீமான் வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக ‘தங்கலான்’ படம் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரபல நடிகர் விக்ரம் நடித்திருக்கும் படம் தான் தங்கலான். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் உடன் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

தங்கலான் படம்:

இந்த விழாவில் நடிகர்கள் தங்களின் படம் அனுபவம் குறித்து பகிர்ந்து இருந்தார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாக இருக்கிறது. படக் குழுவினருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சூர்யா, இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று பதிவு ஒன்று போட்டிருந்தார்.

சீமான் பதிவு:

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் படக்குழுவினரை வாழ்த்தி பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில், ஆதித்தமிழர்களின் வாழ்வியலையும், வலியையும் இரத்தமும் சதையுமாகக் காட்சிப்படுத்தி, இயக்கம், இசை, நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு, கலை, தொழில்நுட்பம் என அனைத்து பிரிவுகளிலும் ஆகச்சிறந்த படைப்பாக உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் உலக அரங்கில் தமிழ்த் திரையுலகை தலைநிமிரச் செய்யும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது.

ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் எதிர்கொள்ளும் சமூக சிக்கல்களுக்கும், பறிக்கப்பட்ட அவர்களது உரிமை மீட்புக்கும், நல்வாழ்விற்கும் என தனது ஒப்பற்ற கலைத்திறனை அர்ப்பணித்துள்ள அன்புத்தம்பி பா.ரஞ்சித் அவர்களுக்கும், நடிப்புக்கலையில் தான் கொண்டுள்ள அளவற்ற காதலாலும், தனித்திறனாலும் தான் ஏற்ற பாத்திரத்திற்கும், கதைக்களத்திற்கும் ஏற்ப தனது உடலை வருத்தி, திருத்தி வெளிப்படுத்தியுள்ள அசாத்திய நடிப்பாற்றலால் காட்சிகளில் நம்மை ஒன்றச் செய்துள்ள பெருங்கலைஞன் அன்புத்தம்பி விக்ரம் அவர்களுக்கும், வரலாற்றுப்பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு மண் மனம் மாறாத மக்களிசையாலும், வீரம் தெறிக்கும் போர்ப்பறையிசையாலும் காட்சிகளுக்கு வலிமைசேர்த்துள்ள என் ஆருயிர் இளவல் ஜி.வி.பிரகாஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

குருதி தோய்ந்த தங்கச்சுரங்கங்களில் மறைக்கப்பட்ட வரலாற்றை உணர்வுச்சூடேற்றும் திரைக்கதை மற்றும் உரையாடல்களாக வார்த்துள்ள அன்பிற்கினிய எழுத்தாளர்கள் அழகிய பெரியவன், தமிழ் பிரபா ஆகியோருக்கும், வரலாற்றுக்காலத்தை அதன் விழுமியங்களோடு கண் முன்னே கொண்டு வந்துள்ள கலை இயக்குநர் தம்பி மூர்த்தி அவர்களுக்கும், அதனை உலகத்தரத்தில் ஒளிஓவியமாக வடித்துள்ள ஒளிப்பதிவாளர் அன்புத்தம்பி கிஷோர்குமார் அவர்களுக்கும், படத்தொகுப்பாளர் தம்பி செல்வா அவர்களுக்கும், தங்கலான் திரைப்படத்திற்கு கடின உழைப்பையும், ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ள அனைத்து திரைக்கலைஞர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது அன்பும், பாராட்டுகளும்.

வருகின்ற 15-08-2024 அன்று வெளியாகவிருக்கும் தங்கலான் திரைப்படத்தை உலகெங்கும் பரவிவாழும் என் உயிர்க்கினிய அன்னைத்தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் திரையரங்கங்களுக்குச் சென்று கண்டு களித்து, மாபெரும் வெற்றியடையச் செய்து, மேலும் இதுபோன்ற ஆகச்சிறந்த படைப்புகள் தமிழில் உருவாகத் துணை நிற்குமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full