கமலுக்கு எதிராக கிளம்பும் கன்னட அமைப்புகள் - ஆதரவு தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கை

By subhashini · 31/5/2025

கமலஹாசனுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாக கமலின் மொழி சர்ச்சை தான் பூகம்பமாக வெடித்து கொண்டு இருக்கிறது. தற்போது கமல் நடித்து இருக்கும் படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகிறது. இந்த தக் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தினுடைய பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை நடந்து இருந்தது.

இந்த விழாவிற்கு தக் லைப் பட குழுவினருடன் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் வருகை தந்திருந்தார். அப்போது விழாவில் சிவராஜ் குமாரை பார்த்து கமல், உயிரே உறவே தமிழே. உங்களுடைய பாசை தமிழில் இருந்து வந்தது என்று கூறி இருந்தார். இப்படி கமலஹாசன் பேசியிருந்த விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. காரணம், தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது என்று அவர் கூறியிருப்பார். இதனால் கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் வெடித்திருக்கிறது. கன்னட ரக்ஷனா வேதிகே உள்ளிட்ட தீவிர கன்னட இயக்கங்கள் கமலின் பேச்சுக்கு எதிர்ப்புகளை தெரிவித்து எச்சரிக்கை விட்டு வருகிறார்கள்.

கமல் மொழி சர்ச்சை:

அதுமட்டுமில்லாமல் சில இடங்களில் கன்னட அமைப்புகள் தக் லைப் படத்தினுடைய போஸ்டர்களையும் கிழித்து இருந்திருக்கிறார்கள். இது தொடர்பாக கன்னட ரக்ஷனா வேதிகே தலைவர், கன்னடா தமிழுக்கு பிறகு பிறந்ததாக கூறியிருக்கிறார். உங்களை நான் எச்சரிக்கிறேன். உங்களுக்கு கர்நாடகாவில் தொழில் வேண்டுமா? இருந்தும் கன்னடத்தை அவமதிப்பீர்களா? இதே நீங்கள் கர்நாடகாவில் இருந்திருந்தால் உங்கள் மீது கருப்பு மை வீச தயாராக இருந்திருப்போம். உங்கள் படம் கர்நாடகாவில் தடை செய்யப்படும் என்று நாங்கள் எச்சரிக்கிறோம் என்று கூறி இருந்தார்கள். இதற்கு கமலஹாசன் தரப்பில் விளக்கம் அல்லது மன்னிப்பு கேட்காவிட்டாலும் கர்நாடகாவில் அவருடைய படங்களை புறக்கணிக்க போகிறோம் என்று சில அமைப்புகள் அழைப்பும் விடுத்திருந்தது.

நடிகர் சங்கம் அறிக்கை:

இதற்கு கமலஹாசன், அரசியல்வாதிகளுக்கு மொழியை பற்றி பேசும் கல்வி தகுதி கிடையாது. என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது என்று கூறி இருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக கமலுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில்,
கமல்ஹாசன் தமிழ்த் திரைப்படங்களை கடந்து இந்திய அளவிலும், அகில உலக அளவிலும் தனது படைப்புகளின் வாயிலாக தனி முத்திரை பதித்த ஒரு மூத்த கலைஞர். திரைப்படங்களையே தனது சுவாசமாகவும், உணர்வாகவும், உயிராகவும் சுமந்து வாழும் மகத்தான ஒரு படைப்பாளர். வெகுஜன மக்களை மட்டுமின்றி, அந்த மக்களின் பேராதரவையும், அபிமானத்தையும் ஈட்டிய பல திரை நட்சத்திரங்களின் மனதிலும், மதம், இனம், மொழி பேதமின்றி தனது பேரன்பாலும், கலைத்திறனாலும் நிரந்தர இடம் பிடித்தவர் பத்மஸ்ரீ டாக்டர். கமல்ஹாசன். அந்த வகையில், அவருக்கும் கிரிஷ் கர்னாட்டுக்கும் உள்ள நட்பும் அவர் எழுத்தின் மேல் இருக்கும் பெரும் ஈடுபாடும் அனைவரும் அறிந்ததே.

அவரது ‘ராஜ்கமல் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘ராஜ பார்வை’ திரைப்படத்தை ஆழ்ந்த சகோதர பாசத்துடன் முன் நின்று ‘கிளாப்’ அடித்து துவக்கி வைத்தவர் கன்னட திரை உலகின் ஈடில்லா உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த பத்மபூஷன், தாதா சாகிப் பால்கே, கர்நாடக ரத்னா, அமரர், டாக்டர் ராஜ்குமார் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.பின்னாளில், துரதிஷ்டவசமாக டாக்டர்.ராஜ்குமார் அவர்கள் கடத்தப்பட்ட சமயத்தில், அதை கண்டித்தும், அவரை மீட்க வேண்டியதை வலியுறுத்தியும் நடத்தப்பட்ட போராட்டங்களில் முதல் குரலாக ஒலித்து முன் நின்றவர்களில் கமல்ஹாசன் குறிப்பிடத்தக்க பங்காற்றியதை எவரும் மறுக்க இயலாது. ராஜ்குமார் தனது உடன் பிறவா மூத்த சகோதரராகவும், அவரது புதல்வர் சிவராஜ்குமாரை தனது மகனுக்கு இணையாகவும், கன்னட மக்களைத் தனது குடும்பமாகவும் கருதுபவர் கமல்ஹாசன்.

சிவராஜ்குமார் மீண்டு வந்ததை கண்ட மகிழ்ச்சியில் கமல்ஹாசன் வெளிப்படுத்திய அந்த வார்த்தைகளுக்கு குறிப்பிட்ட ஒரு சிலர் தவறாக அர்த்தம் புரிந்து கொண்டது மட்டுமில்லாமல் அந்த தவறான புரிதலை தீயென வேகமாக பரப்பியும் வருகின்றனர். அதனால் தேவையற்ற சங்கடமான சூழலையும் பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது. இந்திய மொழிகள் அனைத்திற்குமே உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வரும் கமல்ஹாசன், ஒருமைப்பாட்டின் குரலாகவும், சகோதரத்துவத்தின் அடையாளமாகவும் திகழ்ந்து வருபவர். அதன் வெளிப்பாடாகவே ‘கர்நாடகா கமல்ஹாசன் நற்பணி இயக்கம்’ மூலமாக நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் முன்னெடுத்து வருகிறார். என்றும் கன்னட மொழியை சீர்தூக்கி பார்க்கின்ற கமல், ஒருபோதும் சிறுமைப்படுத்தும் நோக்கம் இருந்ததில்லை என்பதை அவருடைய கடந்த கால நிகழ்வுகள் தரவுகளாக இருக்கின்றன. உண்மை இவ்வாறு இருக்க, அதற்கு மாறாக கமல்ஹாசன் கன்னட மொழிக்கு எதிரானவர் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை சித்தரித்து அவதூறு பரப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. சாதி, மதம், இனம், மொழி என்ற எந்த பாகுபாடும் இன்றி, மாநில, தேசிய எல்லைகளைக் கடந்து, தனது வாழ்நாளை முழுவதுமாக கலைப்பணிக்கு அர்ப்பணித்த ஓர் மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் இத்தகைய அநீதியை, சுய சிந்தனையும், பகுத்தறிவும் கொண்ட எவருமே அனுமதிக்கலாகாது.

சுய ஆதாயங்களுக்காக, குறிப்பிட்ட சிலர் கமல்ஹாசனை கருவியாக பயன்படுத்தி கன்னட - தமிழ் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்ய அனுமதிப்பது மிகத் தவறான முன்னுதாரணமாகவும், வரலாற்றில் ஒரு மாபெரும் கருப்புப்புள்ளியாகவும் நிலைத்து விடக்கூடும். கர்நாடக மாநிலத்தின் அனைத்து அன்பர்களும், திரைத்துறை அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் கமல்ஹாசனின் உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடாக உதிர்த்த வார்த்தைகளின் உண்மையான பொருளை உணர்ந்து, ஒரு மகத்தான கலைஞனுக்கு எதிராகத் திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகளைத் தடுத்து நிறுத்த முற்பட வேண்டும் என தமிழ்த் திரையுலகத்தின் சார்பாக ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ பேரன்புடன் கோரிக்கை வைக்கிறோம். எந்தக் கலையும், மொழி உட்பட அனைத்து வேறுபாடுகளையும், எல்லைகளையும் கடந்தது. அந்தக் கலையை ரசிக்கும் மக்களுக்கும் கலைஞர்களுக்கும் கூட அது பொருந்தும். மொழிகள் அனைத்துமே நீடு புகழோடு வாழ வேண்டும், “அன்பும் புரிதலும் மாற்றார் பண்பாடு போற்றுதலும் மட்டுமே நம்மை இறுகப் பிணைத்து வளம் தரும் எதிர்காலத்திற்கு வழி வகுக்கும். பேதமற்ற ஒற்றுமை பாராட்டும் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full