சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் வெளிவந்த நட்டியின் 'ரைட்' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

By subhashini · 27/9/2025

இயக்குனர் சுப்பிரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ரைட். இந்த படத்தில் நட்டி நட்ராஜ், அருண் பாண்டியன், அக்ஷரா ரெட்டி, முன்னா ரமேஷ், வினோதினி, ஆதித்யா சிவகுமார், யுவினா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு குணா பாலசுப்ரமணியம் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தை திருமலா லக்ஷ்மணன், சியாமளா இணைந்து தயாரித்திருக்கிறார்கள். சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் ஹீரோ நட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். இவர் ஒருநாள் பிரதமர் பாதுகாப்பிற்காக சென்றிருந்தபோது அவருடைய காவல் நிலையத்தை மர்ம நபர் ஒருவர் எங்கோ இருந்து ஒரு தொழில்நுட்ப ரீதியாக தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். காவல் நிலையம் மற்றும் அதனைச் சுற்றி வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், காவல் நிலையத்தில் இருப்பவர்கள் வெளியே சென்றாலும் அந்த வெடிகுண்டுகள் தானாகவே வெடிக்கும் என்று அந்த மர்ம நபர் கூறி இருக்கிறார்.

இன்னொரு பக்கம் தன் மகன் காணவில்லை என்று அருண்பாண்டியன் புகார் அளிக்கிறார். அந்த சமயம் பார்த்து திருமணம் அழைப்பிதழ் கொடுக்க பெண் சப் இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்திற்குள் வருகிறார். சில காவலர்கள், இரண்டு கைதிகள் அந்த காவல் நிலையத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். பிரதமர் நிகழ்ச்சி நடக்கும்போது இந்த விஷயம் ஹீரோ நட்டிக்கு தெரிய வருகிறது. ஆனால், எல்லோரும் பயந்து போய் விடுவார்கள் என்று வெளியே சொல்லாமல் பிரச்சனையை சமாளிக்க நட்டி போராடுகிறார்.

அதற்குப்பின் அந்த மர்ம நபர், தன்னுடைய தேவை என்ன என்பதை நட்டியிடம் சொல்கிறார். அது என்ன? அவர் யார்? காவல்துறை அவர்கள் கேட்டதை செய்து கொடுத்தார்களா? காவல் நிலையத்தில் சிக்கியிருப்பவர்கள் மீட்கப்பட்டார்களா? இதன் பின்னணி என்ன? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.
படத்தில் ஹீரோ நட்டி, போலீஸ் கதாபாத்திரத்தில் மிடுக்காக நடித்திருக்கிறார். படம் முழுவதுமே அவர் வரவில்லை என்றாலும் இறுதியில் அவர் வந்திருக்கும் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

குறிப்பாக, நட்டி தான் படத்தில் போடப்பட்ட அனைத்து முடிச்சுகளையும் அவிழ்த்து வைக்கிறார். இவரை அடுத்து படத்தில் வரும் அருண்பாண்டியன் தன்னுடைய அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். பெண் சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அக்ஷரா ரெட்டி நடித்திருக்கிறார். சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்பட்டு பிரச்சனை சமாளிக்க முயற்சிப்பது என உண்மையான போலீஸ் அதிகாரி போலவே அவர் நடித்து அசத்தியிருக்கிறார். இவர்களை அடுத்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

குணா பாலசுப்பிரமணியினுடைய இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை என்றாலும் பின்னணி இசை நன்றாக இருக்கிறது. படம் முழுக்க முழுக்க காவல் நிலையத்தில் தான் நடக்கிறது. காவல் நிலையத்தை தனது வசதிக்கேற்ப வடிவமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஒளிப்பதிவு எடிட்டங் நன்றாக இருக்கிறது. மேலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றம், பழிவாங்கும் கதை ஆகியவற்றை ஒரு வித்தியாசமான முயற்சியில் இயக்குனர் கொண்டு சென்றிருக்கிறார்.

காவல் நிலையத்தில் நடக்கும் கதையை எந்தவித சலிப்பும் இல்லாமல் விறுவிறுப்பாக நகர்த்தி சென்று இருக்கிறார். இருந்தாலும் ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள். சில காட்சிகள் யூகிக்க கூடிய அளவில் இருக்கிறது. இடையில் இன்னும் கொஞ்சம் சில காட்சிகளை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கலாம். மொத்தத்தில் எல்லோரும் ஒருமுறை சென்று பார்க்கும் படமாக இருக்கிறது.

நிறை:

நட்டி, அருண் பாண்டியன் நடிப்பு

கதைக்களம்

சமூகத்திற்கு நல்ல மெசேஜ்

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்

கிளைமாக்ஸ் நன்றாக இருக்கிறது

குறை:

சில காட்சிகள் விறு விறுப்பாக சென்றிருக்கலாம்

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

பாடல்கள் பெரிதாக கவரவில்லை

சில கதாபாத்திரங்களை அழுத்தமாக சொல்லி இருக்கலாம்

மொத்தத்தில் ரைட் - வித்தியாசமான முயற்சி

Tamil Behind Talkies AMP · Quick view
View full