தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பி உடல்நலக் குறைவால் நேற்று (செப்டம்பர் 25) காலமாய்யுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் நடிகை நயன்தாரா, எஸ் பி பியின் மறைவிற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்ட போதும் அவருக்கு ஏற்பட்ட உடல் நிலை கோளாறு காரணமாக நேற்று மதியம் 1.04 மணி அளவில் அவர் உயிரிழந்தாக மருத்துவ குழுவினர் அறிவித்து இருந்தனர். எஸ் பி பியின் மறைவிற்கு நாட்டின் பிரதமர் துவங்கி பாலிவுட், டோலிவுட் வரை இருக்கும் பல்வேறு பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். மேலும், பல்வேறு தமிழ் நடிகர், நடிகைகளும் எஸ் பி பியின் உடலுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர்.

Advertisement

இதை தொடர்ந்து இன்று (செப்டம்பர் 26) எஸ் பி பியின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நடிகை நயன்தாரா, எஸ் பி பியின் மறைவிற்கு தனது இரங்கலை அறிக்கை மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அதில்,  தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. தலைமுறைகளைத் தாண்டி நம்மை மகிழ்வித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாருடைய குரல், நம்முடைய எல்லா காலங்களுக்கும் காரணங்களுக்கும் பொருந்தி இருக்கும். நீங்கள் இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. ஆயினும் உங்கள் குரல் என்றென்றும் நீங்கா புகழுடன் இருக்கும்.

உங்களுக்கு அஞ்சலி செலுத்தி எங்களுக்கு நாங்களே ஆறுதல் சொல்லிக்கொள்ளும் இந்த நேரத்தில் கூட உங்கள் பாடல் மட்டுமே பொருந்துகிறது. எங்கள் வாழ்வில் உங்கள் ஆளுமை அப்படி.நீண்டகாலமாக இடைவிடாமல் உழைத்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு மனம் இல்லாமல் பிரியா விடை கொடுக்கிறோம். பாடும் நிலா விண்ணில் இருந்து பாடட்டும். உங்களை பிரிந்து வாடும் உங்கள் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் உங்கள் திரை உலக சகாக்களுக்கும் உலகெங்கும் பரவி இருக்கும் உங்கள் எண்ணற்ற ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த ஆறுதல் செய்தி இது. என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Advertisement