'அவங்கள ஏன் கேக்கல' கல்யாண வீடியோவில் தனது முன்னாள் காதலர்கள் குறித்து பேசிய நயன்தாரா

By krithika · 18/11/2024

பிரபல நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் குறித்த செய்திகள் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. நயன்தாராவின் வாழ்க்கை பயணத்தை வைத்து 'Nayanthara Beyond The Fairy Tale' என்கிற ஆவணப்படம் தயாராகியுள்ளது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இந்த ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார். இன்று நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு Netflix ஓடிடி தளத்தில் இந்த ஆவணப்படம் வெளியாகி உள்ளது. சமீபத்தில் கூட இந்த ஆவணப்படம் தொடர்பாக நயன்தாராவுக்கும் நடிகர் தனுஷுக்கும் பெரிய சர்ச்சை வெடித்திருந்தது.

அதாவது, நடிகர் தனுஷ் தயாரிப்பில், நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த படம் தான் 'நானும் ரவுடி தான்'. இந்த படத்தின் மூன்று நொடி கிளிப்பை நயன்தாராவின் ஆவணப்படத்தில் பயன்படுத்த தனுஷ் 10 கோடி கேட்டதாக நயன்தாரா குற்றச்சாட்டு வைத்திருந்தார். இதனால், திரையுலகில் இந்த பிரச்சனை பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இப்படி பல சர்ச்சைகளுக்கு நடுவே, இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. அதில் நயன்தாரா தனது வாழ்க்கையில் நடந்த சில கசப்பான விஷயங்களை பற்றியும் முதல் முறையாக மனம் திறந்து பேசி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

நாகார்ஜுனா பேசியது:

நயன்தாரா மட்டும் இல்லாமல் சில பிரபலங்களும் இந்த ஆவணப்படத்தில் இடம் பெற்றுள்ளார்கள். அந்த வகையில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நயன்தாரா பற்றி சில விஷயங்களை அதில் பகிர்ந்து உள்ளார். அதில் அவர், நயன்தாராவுடன் வெளிநாட்டில் ஷூட்டிங் செய்து கொண்டு இருந்தோம். அந்த சமயத்தில் தான் அவருடைய காதலில் பெரும் பிரச்சனை இருந்த சமயம். ஷூட்டிங் ஸ்பாட்ல போன் ரிங் ஆனாலே நாங்கெல்லாம் பயந்துடுவோம், ஏன்னா போன் வந்தாலே அவங்க அப்படியே மாறிடுவாங்க. இதெல்லம் பாத்துட்டு 'ஏன் இதுல எல்லாம் மாட்டிகிட்டு கஷ்டப்படுறீங்க'ன்னு நானே கேட்டு இருக்கேன் என்று கூறியுள்ளார்.

நயன்தாரா ஆவணப்படம்:

அதைத்தொடர்ந்து பேசியிருக்கும் நயன்தாரா, நான் சினிமாவுக்கு வந்த புதுசுல எல்லாரையும் நம்புனேன். என்கிட்ட யாரவது நல்லா பேசுனாலே கண்ண மூடிக்கிட்டு அவங்கள நம்பிடுவேன். என்னோட முதல் காதல்ல நான் உண்மையா இருந்தேன். நம்பிக்கை மட்டும் தான் நல்ல உறவை உருவாக்கும், அதையே தான் அடுத்தவரிடமும் நாம் எதிர்பார்ப்போம். அந்த நபர் உங்களை முழுசா காதலிக்கிறார் என்று 100 சதவீதம் நீங்கள் நம்பனும். நான் அதில் 100 சதவீதம் எப்போதும் கொடுத்துள்ளேன். நான் என்னோட கடந்த கால காதலை பற்றி இதுவரை பேசியதே இல்லை, ஆனா பலர் அவங்களாகவே ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள். எந்த கதையை நம்பனும்னு நினைக்கிறார்களோ அந்த மட்டும் தான் நமபவாங்க.

நயன்தாரா கூறியிருப்பது:

ஆனா, அந்த கதை எல்லாம் ரொம்ப மோசமா தான் இருந்தது. என்ன எதுன்னு கூட விசாரிக்காம அதை பலரும் நம்பியது தான் என் மனச ரொம்ப பாதிச்சது. இன்னிக்கி வரைக்கும் சம்மந்தபட்ட ஆண்கள் கிட்ட 'நீங்க ஏன் இதை செஞ்சீங்க, உண்மையிலேயே நடந்தது என்ன'னு ஒருத்தர் கூட கேள்வி கேட்கல. எப்பயும் பொண்ண மட்டும் தான் கேள்வி கேட்பாங்க. இதையெல்லாம் தாண்டி கொஞ்சம் வருஷம் கழிச்ச என்னமோ நான் ஒருத்தி மட்டும் தான் இங்க காதலிச்ச மாதிரி மறுபடியும் எல்லாத்தையும் முதல்ல இருந்து ஆரம்பிப்பாங்க. நான் நடுவுல சினிமாவ விட்டதுக்கு காரணம் நான் இல்ல, அந்த நபர் தான். அது என்னோட முடிவு இல்ல. அது ஒரு ஆப்ஷனா கூட எனக்கு கொடுக்கப்படல.

சினிமாவை விட காரணம்:

ஒரே வார்த்தைல இனிமே நீ நடிக்க கூடாதுன்னு சொல்லிட்டாரு. அந்த சமயத்துல வாழ்க்கைய பத்தி புரிஞ்சிக்கிற அளவுக்கு எனக்கு பக்குவம் இல்ல. நீங்க என்ன பண்றீங்கன்னு புரிஞ்சிக்கனும்னாலே நீங்க வேதனையான சூழ்நிலையில் இருந்தால் தான் அது நடக்கும். உங்களுக்கு பல விஷயங்கள் புரிய ஆரம்பிக்கும், உங்களை சுற்றி யாரெல்லாம் இருக்காங்கனு தெரியும். அது மாதிரி ஒரு வலி தான் என்னை முழுவதுமாக உடைத்து. அப்போ யோசிச்சேன் கண்டிப்பாக எனக்கும் ஒரு நாள் வரும். அன்னிக்கு பிரச்சனை இல்லைன்னு எல்லாருக்கும் புரிய வரும்னு நினைச்சேன் என்று நயன்தாரா கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full