பரியேறும் பெருமாள் யோகிபாபு மாதிரிதான் நான் இருந்தேன் , ஆனால் இப்போ - நீயா நானா வீரசெல்வி எஸ்குளூசிவ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா. இந்த நிகழ்ச்சியை பல ஆண்டு காலமாக கோபிநாத் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஒரு தலைப்பை எடுத்து கொண்டு இரு தரப்பினர் எதிரெதிரே அமர்ந்து காரசாரமாக விவாதம் செய்வார்கள். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் ஜாதி வெறியை மையமாக வைத்து விவாதம் நடந்திருந்தது. அதில் ஜாதி வெறி என்பது தீயை விட ஆபத்தானது. அது எல்லோரையுமே தீக்கரையாக்கும் என்று தன்னுடைய அறிவால் பயங்கரமாக பேசி இருந்தவர் வீரச்செல்வி.
மேலும், அந்த நிகழ்ச்சியில் ஜாதியை பெருமையாக பேசியவர்களுக்கெல்லாம் தக்க பதிலடி கொடுத்தும் இருந்தார். ஒரு சிறுவன் ஜாதியை பெருமையாக பேசி இருந்தார். அவரை தன்னுடைய பேச்சு திறமையால் பிறப்பால் அனைவரும் சமம் என்று சொல் வைத்திருக்கிறார் வீரச்செல்வி. இந்நிலையில் இது தொடர்பாக வீர செல்வி அளித்த பேட்டியில், என்னால் அந்த தம்பி மாறிவிட்டான் என்று முழு கிரிடிட்டையும் எடுத்துக்க முடியாது. அவன் பேசிய பிறகு எல்லோரும் ட்ரோல் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். நாம் ஏதோ தப்பா பேசிட்டோமோ என்று உணர ஆரம்பித்தான். காரணம், அந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாகி இருந்தது. அவன் மாறுவதற்கு அதுவும் ஒரு காரணம். அவனை திரும்ப மீட் பண்ணினேன். அப்போது அவர், நீங்க சொன்ன மாதிரியே தான் நடந்தது.
நீயா நானா வீரசெல்வி பேட்டி:
ஜாதி கட்சியில் என்னை வேலைக்காக மட்டும் தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். அங்கீகாரம் கொடுக்கவில்லை. வேலையை வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டார்கள். எல்லாத்தையும் நான் உணர்ந்துவிட்டேன் என்று ரொம்ப பீல் பண்ணி பேசினார். அவனோட குடும்பம் சாதாரண கூலி வேலைக்கு போற குடும்பம் தான். இப்போது அவனுக்கு குடும்பத்தை பற்றிய புரிதலும் சமூகத்தை பற்றி தெளிவும் வந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். என்ன ஒன்னு வீடியோவில் தமிழ்செல்வி அக்காவால் தான் மாறினேன் என்று சொன்னான். என் பெயரை மாற்றி சொல்லிவிட்டான். என் பேரு தமிழ்ச்செல்வி இல்லை வீரச்செல்வி. எல்லோரும் தமிழ் செல்வி தமிழ்செல்வி என்று வீடியோ போட ஆரம்பித்து விட்டார்கள். நான் ஜாதி பற்றி ஒரு தெளிவோடு இருப்பதால் எங்க அம்மாவுக்கும் சந்தோஷம்.
https://youtu.be/B_SYnS1su7s?si=opij-WjrlJwG4Aex
குடும்பம் பற்றி சொன்னது:
நாங்கள் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பாளமுத்தி கிராமத்தை சேர்ந்தவர்கள். அப்பா மதியழகன், அவர் பாதி பெரியாரிஸ்ட்ன்னு சொல்லலாம். அவர் திமுக காரர். ஜாதி எல்லாம் பெருசாக பார்க்க மாட்டார். எங்க அம்மா குடும்பம் கிராமத்தில் தலைமை குடும்பம். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த எங்க அம்மாவும் பெரிதாக ஜாதி எல்லாம் பார்க்க மாட்டார். அம்மா நிறைய பேருக்கு பீஸ் எல்லாம் கட்டி உதவி செய்திருக்கிறார். அப்பாவும் அம்மாவும் அப்படி இருந்ததால்தான் எல்லோரும் சமம் என்ற புரிதல் எனக்கு வந்தது. எங்கள் ஊருக்கு பேருந்து வசதி கிடையாது. ஆனால், எங்கள் ஊரில் பட்டியலின மக்கள் தோளில் துண்டு போடக்கூடாது, காலில் செருப்பு போடக்கூடாது என்று ஜாதி கொடுமை எல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
100 ரூபாய் கூலி கொடுத்துவிட்டு 500 ரூபாய் என்று 500 ரூபாய்க்கு வேலை வாங்குவார்கள்.
https://www.youtube.com/watch?v=tH7bFVF8S5U
ஜாதிவெறி பற்றி சொன்னது:
இந்த ஜாதி வெறியை எல்லாம் கண்கூட நான் பார்த்திருக்கிறேன். இந்த மாதிரி ஜாதிக்கொடுமை செய்பவர்கள் எல்லாம் என் உடன் நெருங்கி பழகியவர்கள், சொந்தக்காரர்கள். அடக்குமுறை எல்லா ஜாதியிலுமே இருக்கிறது. அடக்குமுறை பண்ற கும்பலில் மனிதாபிமான உள்ளவர்களும் இருப்பார்கள். அவர்களால் வாயை கூட திறக்க முடியாது. அப்படி வாயை திறக்க முடியாமல் நானும் இருந்திருக்கிறேன். கிட்டதட்ட பரியேறும் பெருமாள் படத்தில் வர யோகி பாபு கதாபாத்திரம் மாறி தான் நான் வாழ்ந்திருக்கிறேன். என்னை மாதிரியே நிறைய பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் அமைதியாக இருந்ததற்காக இப்போ எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால், இப்போ எங்க உறவினர் பசங்க யாராவது அடக்குமுறை செய்தால் வாயை உடைத்து விடுவேன் என்று தைரியமாக சொல்லுவேன். எங்கள் உறவினர்கள் எல்லோருமே நான் கடுமையாக எதிர்ப்பேன் என்று பயப்படுவார்கள். ஜாதியால் ஒரு புண்ணியமும் கிடையாது. 2016ல் என்னுடைய அப்பா இறந்துவிட்டார்.
கல்வியின் முக்கியத்துவம்:
நான் இன்ஜினியரிங் படித்து இருக்கிறேன். என்னுடைய தங்கையும் இன்ஜினியரிங் படித்திருக்கிறார். அப்பா இறந்தாலும் நாங்கள் படித்த கல்விதான் எங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறது. நான் இப்போ சென்னையில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். இந்த பிரபஞ்சத்தில் நாம ஒரு துகள்தான் என்பதை கல்வி மூலம் புரியவரும். அதனால் தான் கல்விதான் ரொம்ப முக்கியம். அந்த தம்பிக்கு படிப்பு குறைவாக இருப்பதால் தான் சமூகத்தைப் பற்றிய புரிதல் இல்லாமல் போய்விட்டது. பெற்றோர்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்கணும். படிப்பு ஒன்று தான் நம்மை முன்னேற்றும். படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை தம்பி தினகரனும் புரிந்து கொண்டான். எல்லோரும் ட்ரோல் பண்ணி அவனோட பாடி லாங்குவேஜ் மாறிவிட்டது. ராஜ வம்சம்னு சொல்லிக் கொண்டிருந்தான். இப்போ அவனோட தோரணை ராஜ வம்ச கெத்து எல்லாமே காணாமல் போய்விட்டது. அதனால் அவனை பாராட்டி வரவேற்கனும் தவிர மீண்டும் ட்ரோல் பண்ணி அவன் மனசை காயப்படுத்தக் கூடாது. அதுதான் என்னோட விருப்பம் என்று கூறியிருக்கிறார்.