மாட்டுக்கறி விவகாரம், கிளாமர் ரோல்ல நடிப்பீங்களா? சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்த நடிகை நிகிலா விமல்
தன்னை குறித்த சர்ச்சைகளுக்கு நிகிலா விமல் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவராக நிகிலா விமல் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தான் மீடியாவுக்குள் நுழைந்தார். அதற்குப் பின் இவர் மலையாள மொழி படத்தின் மூலம் நடிகையானார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
கடைசியாக இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி இருந்த ‘குருவாயூர் அம்பலநடையில்’ படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதனை அடுத்து இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் சோசியல் மீடியாவில் எழும் தன்னை குறித்த சர்ச்சைகளுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் நிகிலா விமல், சில பேர் என்னை நீங்கள் கிளாமர் ரோலில் நடிக்க மாட்டீர்களா? என்று கேட்டார்கள். எனக்கு கிளாமர் ரோல் என்று நினைப்பது அவர்களுக்கு வேறு மாதிரியாக தோன்றியிருக்கிறது. அவர்களுக்கு பிடித்த மாதிரி நான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
நிகிலா விமல் பேட்டி:
ஒரு படத்தை தேர்ந்தெடுக்கும் போது அது நமக்கு பிடிக்க வேண்டும். அதே போல் சில படங்களில் நான் நடிக்கும் போது அவர்கள் சொல்லும் கருத்துக்கு எதிர்மறையாக என்னுடைய கருத்தை சொல்வேன். அப்போது அவர்கள், உங்களை நாங்கள் ரொம்ப பாவமான நபர் என்று நினைத்தோம். ஆனால், இப்படி பேசுகிறீர்கள்? என்பது போல என்னை பார்ப்பார்கள். அந்த சமயத்தில் எனக்கு என்னுடைய மனதில், நீங்கள் என்னை கேட்டு வரும்போது எந்த நடிகரை பிடிக்கும்? என்ற கேள்விகளை தான் கேட்கிறீர்கள். நான் எந்த மாதிரி உலகத்தை பார்க்கிறேன் என்று கேட்பதில்லை என்ற கேள்வி தோன்றும்.
சர்ச்சை கருத்துக்களுக்கு விளக்கம்:
மேலும், மாட்டுக்கறி விவகாரம், கல்யாண விஷயம் போன்ற பல விஷயங்களை பேசி இருந்தேன். அரசியல் ரீதியாக நான் பேசுவதாக கருத்துக்கள் வெளியாகியிருந்தது. சிலர், நான் பேசியதை வேற மாதிரி எடுத்துக் கொண்டார்கள். அதனால் என்னை மோசமான வார்த்தைகளாலும் திட்டி இருந்தார்கள். ஆனால், சிலர் என்னுடைய கருத்தை சரி என்று சொல்கிறார்கள். அதே அவர்களுக்கு எதிராக நான் பேசினாலும் என்னை எதிராக திருப்பி விடுகிறார்கள். இன்னும் சிலர் எதற்காக இத்தனை நாள் இதைப் பற்றி பேசவில்லை என்றும் கேட்கிறார்கள்.
விமர்சனங்கள் குறித்து சொன்னது:
என்னிடம் அதைப் பற்றி எந்த சர்ச்சையான கேள்விகளையும் கேட்கவில்லை. அதனால் தான் நானும் அமைதியாக இருந்தேன். கேட்கும் போது தானே பதில் சொல்ல முடியும். நான் அரசியல்வாதியும் கிடையாது, அரசியலும் செய்யவில்லை. சர்ச்சையாக என்னை பற்றி பேசுபவர்களுக்கு நான் பதில் கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு நான் பதில் கூற மாட்டேன். காரணம், அவர்கள் அதை பெரிதாக ஊதி ஊதி, அவர்களுக்கு கன்டென்ட் ஆக மாற்றுகிறார்கள். நான் அமைதியாக இருப்பதை திமிர் பிடித்தவர் என்றெல்லாம் சொல்கிறார்கள்.
பெண்கள் குறித்து சொன்னது:
அதைப் பற்றி எனக்கு கவலையும் இல்லை. ஒரு சில விஷயத்தில் நான் அமைதியாக இருந்து விட்டு பின்னாடி யோசிக்கும் போது குற்ற உணர்வு ஏற்படுத்தும். ஒரு ஆண் தரப்பில் இருந்து ஒரு தவறான அணுகுமுறைக்கு திட்டுவது, அடிப்பது தான் பதிலாக இருக்கிறது. அதே பெண் தரப்பில் இருந்து பார்க்கும்போது அதைப் பற்றி பேச முடியாத சூழ்நிலை உருவாகிறது. பிற்காலத்தில் அதைப் பற்றி பேசுவதற்கு ஏற்ற சூழ்நிலையும் எமோஷனல் வரும்போது அதை வெளிப்படுத்துகிறோம் என்று பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.