விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்த 'ஓஹோ எந்தன் பேபி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

By subhashini · 12/7/2025

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால். தற்போது இவருடைய தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ஓஹோ எந்தன் பேபி. இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்து இருக்கிறார். இது தான் இவரின் முதல் படம். இந்த படத்தை
கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால், மிதிலா பாஸ்கர், கருணாகரன், மிஷ்கின் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் ஹீரோ ருத்ரா உதவி இயக்குனராக இருக்கிறார். ஆனால், இவருக்கு இயக்குனராக வேண்டும் என்பதுதான் ஆசை. இதனால் இவர் நடிகர் விஷ்ணு விஷாலை சந்தித்து கதை சொல்கிறார். அவர் சொன்ன ரெண்டு கதையுமே விஷ்ணு விஷாலுக்கு பிடிக்கவில்லை. இதனால் விஷ்ணு விஷால் ஒரு காதல் கதையை கேட்கிறார். உடனே ருத்ரா, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த காதல் கதையை எழுதி சொல்கிறார். முதல் ரெண்டு காதலுமே ருத்ராவுக்கு தோல்வியில் முடிகிறது.

மூன்றாவது காதல் தான் திருமண பேச்சு வரை செல்கிறது. இவர் மிதிலாவை தான் காதலித்து திருமணம் செய்ய இருக்கிறார். ஆனால், இவர்கள் காதல் ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் பின் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு இருவருமே பிரிகிறார்கள். அதோடு கதையை ருத்ரா நிறுத்தி விடுகிறார். இதுதான் கிளைமாக்ஸ் என்றும் விஷ்ணு விஷால் இடம் சொல்கிறார். ஆனால், விஷ்ணு விஷால் இது இடைவெளி. இரண்டாம் பாதிக்கு நீ உன் காதலியை கண்டிப்பாக சந்தித்து அங்கு என்ன நடக்கிறது.

அதுதான் இரண்டாம் பாதி என்று சொல்கிறார். இதனால் வேறு வழியே இல்லாமல் பிரேக்கப் ஆன காதலியை ருத்ரா சந்திக்க செல்கிறார். அதற்குப் பிறகு என்ன ஆனது? ருத்ரா தான் ஆசைப்பட்டபடி இயக்குனர் ஆனாரா? ருத்ராவின் கதை விஷ்ணு விஷாலுக்கு பிடித்ததா? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை. படத்தில் நாயகன் ருத்ரா, இதுதான் முதல் படம் என்று தெரியாத அளவிற்கு நடித்திருக்கிறார். தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாகவும் செய்திருக்கிறார். ஸ்கூல், காலேஜ், வேலை என்று மூன்று காலகட்டத்திற்கு ஏற்ப தன்னுடைய கதாபாத்திரத்தை வித்தியாசப்படுத்தி காண்பித்து இருக்கிறார்.

முதல் படத்திலேயே இவர் நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார் என்று சொல்லலாம். இதைத்தொடர்ந்து
படத்தில் வரும் மற்ற நடிகர்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஆனால், இவர்களையெல்லாம் தாண்டி படத்தின் நாயகி மிதிலா நடிப்பு அருமையாக இருக்கிறது. சந்தோஷம், சோகம், எமோஷனல் என அனைத்தையுமே சிறப்பாக செய்திருக்கிறார். அதோடு இவருக்கும் இதுதான் தமிழில் முதல் படம். காதல் தோல்வி, கல்யாணம் என்று வழக்கமான கதையாக இருந்தாலும் இயக்குனர் அதை கொஞ்சம் வித்தியாசப்படுத்தி காண்பிக்க முயற்சித்து இருக்கிறார்.

இருந்தாலுமே நிறைய காட்சிகள் சொதப்பலாக இருக்கிறது. விஷ்ணு விஷால் படத்தில் கெஸ்ட் ரோலாக இருந்தாலும் ஹீரோவாகவே வருகிறார். அவரிடம் கதை சொல்வதிலேயே படம் தொடங்குகிறது. படத்தில் காதல், மோதல், காதலியை தேடி செல்வது என்று இருந்தாலுமே பெரிதாக அழுத்தமான காட்சிகள் எதுவுமே இல்லை. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளும் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. கதை நன்றாக இருந்தாலும் அதை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் கோட்டை விட்டார். டெக்னிக்கலாக படம் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக தான் இருக்கிறது.

நிறை:

ருத்ராவின் நடிப்பு ஓகே

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

கதைக்களம் ஓகே

படத்தின் முதல் பாதி ஜாலியாக இருக்கிறது

ஒளிப்பதிவு பின்னணி இசை ஓகே

குறை:

கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் நிறையவே கவனம் செலுத்தி இருக்கலாம்

இரண்டாம் பாதி நன்றாகவே இல்லை

நிறைய காட்சிகளை அழுத்தமாக சொல்லவில்லை

இரண்டாம் பாதி ரொம்ப பொறுமையாக செல்கிறது

மொத்தத்தில் ஓஹோ எந்தன் பேபி - தடுமாற்றம்

behindtalkies AMP · Quick view
View full