கர்ப்பமாக இருக்கும் தங்கமயிலுக்கு துணையாக நிற்கும் கோமதி -பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
தங்கமயிலுக்கு துணையாக நிற்கும் கோமதி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ஹாஸ்பிடலில் கண்விழித்த முத்துவேல், தன்னை தள்ளிவிட்டது குமார் தான் என்றும் கதிருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று உண்மையை சொல்லி விட்டார். இதைக் கேட்டு சக்திவேல் பதறிப் போனார். பின் போலீஸுமே கதிர் மீது தவறில்லை என்று புரிந்து கொண்டு கதிரை விடுதலை செய்து விட்டார்கள். பாண்டியன் குடும்பம் சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் தனியாக இருந்த குமாரை சக்திவேல் அடி வெழுத்து வாங்கினார். ஒரு கட்டத்தில் குமார் உண்மையை சொல்லி விடுகிறார். இருந்தாலும் சக்திவேல், குமார் செய்ததை நினைத்து கோபப்பட்டார்.
அதற்கு பின் கதிரை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். கோமதி, ராஜி இருவரும் அழுதார்கள். அந்த சமயம் பார்த்து சக்திவேல், குமாரை அழைத்து வந்தார். குமாரை பார்த்து கோமதி கொந்தளித்தார். மொத்த பாண்டியன் குடும்பமே குமாரின் மீது சீறுகிறார்கள். சக்திவேல் எவ்வளவு தடுத்தும் பார்த்தார். இருந்தாலும் யாரும் கேட்கவில்லை. குமார்- சக்திவேலை வெளுத்து வாங்கினார்கள். அதற்குப்பின் அப்பத்தா, சக்தி வேலையும் குமாரையும் திட்டிக் கொண்டிருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பழனி, காந்திமதி எல்லோருமே சக்திவேல்- குமார் செய்த வேலையை நினைத்து திட்டிக் கொண்டிருந்தார்கள். மொத்த குடும்பமே குமாரால் உடைந்து போய் நிற்கிறது. சக்திவேலால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் வடிவு, முத்து வேலை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது கதிர்- ராஜி இருவரும் ஹாஸ்பிடல் வந்தார்கள். கதிரை பார்த்தவுடன் வடிவு- முத்துவேல் இருவருமே மாறி மாறி மன்னிப்பு கேட்டார்கள். கதிருக்கு ரொம்பவே தர்ம சங்கடமாக இருக்கிறது.
சீரியல் ட்ராக்:
பின் எல்லோரிடமும் சந்தோஷமாக கதிர் பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் கோமதி, சரவணன் அஞ்சலியுடன் பேசுவதை பற்றி பாண்டியனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். சரவணன், நாங்கள் நட்பாக தான் பேசுகிறோம் என்றார். கோமதி, எதுவாக இருந்தாலும் விவாகரத்து கேஸ் முடியும் வரை எதுவும் பண்ணாதே. உனக்கு குழந்தை பிறப்பதற்கு போகிறது. தயவுசெய்து குழந்தை பற்றியும் மயில் பற்றி யோசி என்றார். சரவணன், எனக்கு எல்லாம் தெரியும். எனக்கு அறிவுரை எல்லாம் சொல்ல தேவையில்லை என்று அவமரியாதையாக கோமதி இடம் பேசிவிட்டு சென்றார். இதையெல்லாம் பார்த்து பாண்டியன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் தங்கமயில் செக்கப்பிற்காக ஹாஸ்பிடல் போவதாக மீனாவிடம் சொல்கிறார். இதை மீனா, கோமதி இடம் சொல்லி வருகிறார். பின் ஹாஸ்பிடலில் நர்ஸ், உங்களுடன் யார் வந்திருக்கிறார்கள்? என்று தங்கமயிலிடம் கேட்கிறார். அப்போது கோமதி, நான் இருக்கிறேன் என்று சொல்கிறார். கோமதி, குழந்தையை வைத்து கஷ்டப்படுவோம் என்று நினைக்காதே உன்னுடன் நான் இருப்பேன் என்று சொல்கிறார்.