ஒருத்தன் பார்த்த வேலையால நிம்மதியா நடிக்கக்கூட முடியல, பத்து நாளா மன உளைச்சல்ல இருக்கேன் - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகரின் ஆதங்கம்

By subhashini · 4/3/2025

சைபர் கிரைமில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் அளித்திருக்கும் புகார் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான சீரியலில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலின் முதல் சீசன் வெற்றிகரமாக முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது சீரியலில் பழனிக்கு ஒரு வழியாக சுகன்யாவை திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். ஆனால், திருமண நாளிலிருந்து சுகன்யா, பழனியை வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறார். வெளியில் சொல்ல முடியாமல் பழனி அவஸ்தைப்படுகிறார்.

இன்னொரு பக்கம் ராஜி, குமாரை காதலிக்கிறார். இந்த விஷயம் தெரிந்த சுகன்யா, பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க குமாரின் அப்பாவுடன் திட்டம் போடுகிறார். இன்னொரு பக்கம் கதிர் எப்படியாவது ராஜியை போலீசாக வேண்டும் என்று மும்முரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். தங்கமயில் ஹோட்டலில் சப்ளையர் வேலை செய்கிறார். இனி அடுத்து என்ன? என்ற பரபரப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் தான் ஸ்டாலின். இவர் ஏற்கனவே முதல் சீசனில் மூர்த்தியாக அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இரண்டாவது சீசனில் பாண்டியன் தந்தையாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஸ்டாலின் அவர்கள் சைபர் கிரைம் போலீசில்
புகார் அளித்திருந்தார். பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ஸ்டாலின், என்னுடைய சொந்த ஊர் தேனி. வீட்டில் எல்லோருமே வாத்தியார் தான். நானும் வாத்தியார் ஆகுவேன் என்று நினைத்தார்கள். ஆனால், எனக்கு அந்த வேலை சரிப்பட்டு வரவில்லை. இயக்குனர் பாரதிராஜா எனக்கு தூரத்து சொந்தக்காரர். அவரை பார்த்துதான் எனக்கு நடிக்க ஆசை வந்தது. அதற்குப்பின் சீரியல், சினிமா என்று வந்து விட்டேன். இப்படி இருக்கும்போதே கடந்த 10 நாட்களாகவே எனக்கு ரொம்ப மன உளைச்சலாக இருக்கிறது. காரணம், என்னை மாதிரியே எங்கள் ஊர் பக்கத்திலிருந்து வந்து சீரியல்களில் ஒரு நடிகை நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்டாலின் பேட்டி:

சில தினங்களுக்கு முன்பு எங்களை இரண்டு பேரையும் சேர்த்து, நாங்கள் இருவரும் கணவன் மனைவி என்றும், இவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துங்களேன் என்றும் பேஸ்புக்கில் ஒரு போஸ்ட் இருந்தது. நாங்கள் ரெண்டு பேருமே ஒரே சேனலில் நடித்துக் கொண்டு வருகிறோம். அவார்ட் பங்ஷன் மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு ஒரே இடத்தில் சந்திப்போம். அப்போது எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்வது சகஜமான ஒன்று. அப்படிதான் நாங்கள் எங்கேயோ எடுத்த போட்டோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டு கணவன் மனைவி என்று கூறி ஆயிரக்கணக்கான பேர் ஷேர் செய்து இருக்கிறார்கள். அந்த போஸ்ட்டை பார்த்த என்னுடைய நண்பர்கள் தான் எனக்கு அனுப்பி வைத்து விசாரித்தார்கள். சில பேர், உண்மையாலுமே நான் திருமணம் செய்து கொண்டேன் என்றெல்லாம் நினைத்து கொண்டார்கள். அது தொடர்பாக போன் கால் வந்து கொண்டே இருந்ததால் நிம்மதியாக என்னால் நடிக்க கூட முடியவில்லை.

விமர்சனங்கள் பற்றி சொன்னது:

அதேபோல அந்த நடிகைக்குமே நிறைய பேர் போன் செய்து விசாரிக்கிறார்கள். இதனால் அவர் ரொம்பவே வேதனை அடைந்து இருக்கிறார். எங்கள் இரண்டு பேருக்குமே தனிப்பட்ட குடும்பம் இருக்கிறது. எனக்கு வளர்ந்த பையன்கள் இருக்கிறார்கள். அவர்கள் பேரன், பேத்தி எல்லாம் எடுத்து விட்டார்கள். இந்த சூழ்நிலையில் பொறுப்பில்லாமல் ஒருத்தர் செய்த வேலையால் இரண்டு பேர் குடும்பத்தில் இருக்கிறவர்கள் ரொம்பவே கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். இதையெல்லாம் யோசித்து பண்ண கூடாதா? இந்த மாதிரியான வேலையை எதற்காக செய்கிறார்கள்? விளையாட்டாக செய்தால் கூட அந்த போஸ்ட் கீழே சில பேர், இவர்கள் இவர்கள் ரியல் கணவன்-மனைவி இல்லை என்று சொல்கிறார்கள். அதை பார்த்தாவது திருத்தி போஸ்ட் டெலிட் பண்ண வேண்டாமா? அதையும் செய்யாமல் திரும்ப இரண்டாவது போஸ்டையும் எங்களைப் பற்றி போட்டு இருக்கிறார்கள்.

போலீஸ் புகார்:

இதுதான் மனரீதியாக கஷ்டமாக இருக்கிறது. இதே வேலையா தான் இவனுங்க இருக்கிறாங்க என்று புரிந்து தான் நான் சைபர் கிரைம் இடம் பேசினேன். என்னுடைய கோபத்தை புரிந்து கொண்டு அவர்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். இதில் என்ன பெரிய கொடுமை என்றால் எங்க ஊர் பக்கம் youtube சேனல் வைத்திருக்கிற ஒரு நபர்தான் தொடர்ந்து இதே மாதிரியான பதிவுகளை போட்டுக் கொண்டு வருகிறார். ஒரு விஷயத்தை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும். நடிகர் நடிகைகள் என்றால் கிசுகிசுக்கள் இருந்து தப்பிக்கவே முடியாது. இப்படி இருக்கும் போது தப்பான ஒரு தகவலை விளம்பரத்துக்காக பரப்புவதன் மூலம் சில பேர் அதை நிஜமாக இருக்குமோ என்று நம்பி விடுகிறார்கள். நாங்கள், அது தவறான தகவல் என்று கூவி கூவி சொன்னாலுமே ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். அதனால் தான் எனக்கு கோபம் கோபமாக வருகிறது. இன்னும் சில தினங்கள் பார்ப்பேன், சம்பந்தப்பட்ட அந்த பதிவை நீக்கப்படவில்லை என்றால் சீரியஸாக இந்த விவகாரத்தை கையாள இருக்குகிறேன் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full