சஞ்சு சாம்சன் மட்டும் ஏன் வெளியே? உணர்ச்சிப்பூர்வமான முடிவுதான் எடுக்கப்பட்டதா? - தேர்வுக்குழுவை கேள்வி எழுப்பிய பார்த்திவ் படேல்
சஞ்சு சாம்சன் மட்டும் ஏன் வெளியே? உணர்ச்சிப்பூர்வமான முடிவுதான் எடுக்கப்பட்டதா? - தேர்வுக்குழுவை கேள்வி எழுப்பிய பார்த்திவ் படேல்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி தடுமாறி தொடரை இழந்த நிலையில், அணித் தேர்வு குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக, உலகக் கோப்பையில் முக்கிய பங்கு வகித்த சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெறாதது பல முன்னாள் வீரர்களின் கேள்வியாக மாறியுள்ளது. அந்த வரிசையில் தற்போது முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேலும், சஞ்சு சாம்சன் ஏன் மீண்டும் மீண்டும் தியாகியாக்கப்படுகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு, வைபவ் சூரியவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கியது உணர்ச்சிப்பூர்வமான முடிவாகவே தெரிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
'சஞ்சு சாம்சன் மட்டும் ஏன் எப்போதும் வெளியே?'
சஞ்சு சாம்சனின் இந்திய கிரிக்கெட் பயணத்தை சுட்டிக்காட்டிய பார்த்திவ் படேல், கடந்த 11 முதல் 12 ஆண்டுகளாக ஒரே கேள்விதான் அவரை தொடர்ந்து துரத்தி வருவதாக கூறினார். "சஞ்சு சாம்சன் மட்டும் ஏன் எப்போதும் அணியில் இருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்? அவரது கிரிக்கெட் வாழ்க்கையைப் பார்த்தால், தொடர்ந்து பேசப்படும் விஷயம் 'நிலைத்தன்மை' மட்டும்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் வாய்ப்பு கிடைக்கும்போது முதலில் வெளியேறும் வீரராக சஞ்சுவே இருப்பது ஏன்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
'வைபவுக்கு வாய்ப்பு சரி... ஆனால் தர்க்கம் எங்கே?'
வைபவ் சூரியவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கிய முடிவு தவறு அல்ல என்றும், ஆனால் அதற்காக சஞ்சுவை நீக்கியது கேள்விக்குறி என்றும் பார்த்திவ் படேல் தெரிவித்தார். "வேகமாக ரன் அடிக்காத வீரரையோ, தொடர்ந்து சீராக விளையாடாத வீரரையோ வெளியே வைப்பது புரிகிறது. ஆனால் உணர்ச்சியையும், தர்க்கத்தையும் ஒன்றாக வைத்து முடிவெடுக்க முடியாது. உணர்ச்சிப்பூர்வமாக பார்த்தால் வைபவுக்கு வாய்ப்பு கொடுத்தது சரி. ஆனால் தர்க்க ரீதியாக பார்த்தால் சஞ்சு சாம்சன் ஏன் வெளியே? எனவே இந்த முடிவு உணர்ச்சியின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவே தோன்றுகிறது" என்றார்.
'அணியில் இல்லாதவர்களைத்தான் ரசிகர்கள் தேடுவார்கள்'
இந்திய கிரிக்கெட்டில் இது புதிய விஷயம் அல்ல என்றும் பார்த்திவ் படேல் சுட்டிக்காட்டினார். "அணியில் இல்லாத வீரர்தான் சிறப்பாக விளையாடியிருப்பார் என்று ரசிகர்கள் எப்போதும் நினைப்பார்கள். கடந்த டி20 உலகக் கோப்பியின்போது ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இல்லை என்பதே பெரிய விவாதமாக இருந்தது. இப்போது அதே நிலை சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்டுள்ளது. இது இந்திய கிரிக்கெட்டில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் விஷயம்" என்று அவர் கூறினார்.
இங்கிலாந்தின் திட்டமிடலுக்கு இந்தியாவிடம் பதில் இல்லை
இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் தவறான ஷாட் தேர்வும், திட்டமிடல் குறைபாடும்தான் என்று பார்த்திவ் படேல் கூறினார். "இஷான் கிஷன், வைபவ் சூரியவன்ஷி, அபிஷேக் சர்மா ஆகிய மூவரும் ஷார்ட் பந்துகளை நன்றாக விளையாடக்கூடியவர்கள். ஆனால் ஒவ்வொரு ஷார்ட் பந்தையும் புல் ஷாட் அடிக்க முடியாது. அடிக்க ஏற்ற பந்து இல்லாதபோது குறுக்காக பேட்டை சுழற்றுவது தவறான முடிவு. இந்திய வீரர்கள் இதே தவறை மீண்டும் மீண்டும் செய்தனர். அதே நேரத்தில் இங்கிலாந்து அணி சிறந்த திட்டமிடலுடன் பந்துவீசி, அதை கச்சிதமாக செயல்படுத்தியது" என்று அவர் விளக்கினார்.
தெளிவான திட்டம்தான் இந்திய அணிக்கு இப்போது தேவை
இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட தோல்வி இந்திய அணியின் பலவீனங்களை வெளிப்படுத்தியுள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது வரவேற்கத்தக்க விஷயம் என்றாலும், அதே நேரத்தில் அனுபவம் வாய்ந்த வீரர்களை எந்த அடிப்படையில் வெளியே வைக்கிறோம் என்பதற்கும் தெளிவான விளக்கம் இருக்க வேண்டும். குறிப்பாக சஞ்சு சாம்சன் விவகாரம் மீண்டும் தேர்வுக்குழுவின் அணுகுமுறையை கேள்விக்குறியாக்கியுள்ளது. வெளிநாட்டு மைதானங்களில் வெற்றி பெற வேண்டுமெனில், அணித் தேர்வு முதல் களத்திட்டம் வரை இந்திய அணி தெளிவான அணுகுமுறையை பின்பற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக முன்னாள் வீரர்களின் கருத்துகள் உணர்த்துகின்றன.