என்னிடம் மரியாதைக்குகூட ஒரு வார்த்தை அனுமதி கேட்கவில்லை - ஆதங்கத்தில் வைரமுத்து போட்ட போஸ்ட்

By subhashini · 9/6/2025

பாடல்கள் காப்பி ரைட்ஸ் பற்றி கவிஞர் வைரமுத்து போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் பழைய பாடல்களை பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாக வருகிறது. அந்த பாடல்களுடைய இசையமைப்பாளர்கள், பாடல் இடம் பெற்ற படத்தினுடைய உரிமையாளரிடம் அனுமதி வாங்காமலேயே பயன்படுத்துவது தான் தற்போது பிரச்சனையாக இருந்து வருகிறது.

அனுமதி வாங்கி பயன்படுத்தும் போது அதில் எந்த பிரச்சினையும் இல்லை. அனுமதி வாங்காமல் செய்வதனால் தான் கேள்வி எழுகிறது. அதில் சில இசையமைப்பாளர்கள் பெருந்தன்மையாக பயன்படுத்தி கொள்ளட்டும் என்கிறார்கள். ஆனால் சிலர், நான் இசையமைத்த பாடல்களை என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் எப்படி பயன்படுத்தலாம் என்று கேட்கிறார்கள். இதற்கு பலரும், காசுக்காக இப்படி எல்லாம் கேள்வி கேட்பார்களா? என்று விமர்சித்து வருகிறார்கள்.

வைரமுத்து பதிவு:

இந்த நிலையில் தன்னுடைய பல்லவி கூட அனுமதி இல்லாமல் பயன்படுத்தியது தொடர்பாக கவிஞர் வைரமுத்து போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர்,

என்னுடைய
பல்லவிகள் பலவற்றைத்
தமிழ்த் திரையுலகம்
படத் தலைப்புகளாகப்
பயன்படுத்தி இருக்கிறது

அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும்
என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு
மரியாதைக்குக்கூட
ஒரு வார்த்தையும் கேட்டதில்லை

ஒன்றா இரண்டா…

பொன்மாலைப் பொழுது,
கண் சிவந்தால் மண் சிவக்கும்,
இளைய நிலா,
ஊரத் தெரிஞ்சுகிட்டேன்,
பனிவிழும் மலர்வனம்,
வெள்ளைப் புறா ஒன்று,
பூவே பூச்சூட வா,
ஈரமான ரோஜாவே,
நிலாவத்தான் கையில புடிச்சேன்,
மெளன ராகம்,
மின்சாரக் கண்ணா,
கண்ணாளனே,
என்னவளே, உயிரே,
சண்டக்கோழி,
பூவெல்லாம் கேட்டுப் பார்,
தென்மேற்குப் பருவக்காற்று,
விண்ணைத் தாண்டி வருவாயா,
நீ தானே என் பொன் வசந்தம்,
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்,
தங்கமகன்

இப்படி இன்னும் பல…

சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக
இவர்கள் யாரையும்
நான் கடிந்து கொண்டதில்லை
காணும் இடங்களில் கேட்டதுமில்லை

செல்வம் பொதுவுடைமை
ஆகாத சமூகத்தில்
அறிவாவது
பொதுவுடைமை ஆகிறதே
என்று அகமகிழ்வேன்

ஏன் என்னைக் கேட்காமல்
செய்தீர்கள் என்று கேட்பது
எனக்கு நாகரிகம் ஆகாது

ஆனால்
என்னை ஒருவார்த்தை
கேட்டுவிட்டுச் செய்வது
அவர்களின்
நாகரிகம் ஆகாதா? என்று எழுதி இருக்கிறார்.

வைரமுத்து குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும், இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றம் சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து பல பெண்களுக்கும் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள். அதன் பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இதற்கு பலர் வைரமுத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல் கொடுத்து இருந்தார்கள். இருந்தாலும், இதை எல்லாம் வைரமுத்து கண்டு கொள்ளாமல் இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full