கமிட் ஆன பின்னால் அஜித் ரோலில் இருந்து விலகிய பிரசாந்த் - இதான் காரணம்
பிரபல தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு, நடிகர் பிரசாந்த் குறித்து கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் நிறைய வெற்றிப் படங்களை தயாரித்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2000ம் ஆண்டு கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'. இப்படத்தில் நடிகர் மம்முட்டி, அஜித், ஐஸ்வர்யா ராய், தபு, அப்பாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் இசையமைத்திருந்தார்.
இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படத்தை தயாரிப்பாளர்கள் உலகம் முழுவதும் வெளியிட்டு வெற்றி கண்டார்கள். இப்படத்திற்கு 'நேஷனல் அவார்ட்' மற்றும் 'பிலிம்பேர் அவார்ட் சவுத்' போன்ற விருதுகளும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர்கள் குறித்து சமீபத்தில் தயாரிப்பாளர் தாணு பேட்டியில் பேசியுள்ளார்.
கலைப்புலி எஸ் தாணு பேட்டி:
அதில், 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் முதலில் பிரபு தேவா மற்றும் பிரசாந்த் தான் நடிப்பதாக இருந்தது. பின் பிரபுதேவாவிற்கு நாங்கள் ஒரு சம்பளம் சொன்னவுடனே, அவர் இவ்வளவு கம்மியான சம்பளத்தில் நடிக்க மாட்டேன் என்று வருத்தப்பட்டு படத்திலிருந்து விலகி விட்டார். மேலும் இப்படத்தில் ஹீரோயின்களாக முதலில் சௌந்தர்யா மற்றும் மீனாவை தான் முடிவு செய்திருந்தோம். நடிகர் பிரசாந்தும் கதையை கேட்டுவிட்டு நான் (அஜித் ரோல்) நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.
ஐஸ்வர்யா ராய என்ட்ரி:
அதற்குப் பிறகுதான் ராஜீவ் மேனன் பம்பாய் போகும்போது ஐஸ்வர்யா ராய் இடம் இந்த கதையை சொல்லி இருக்கிறார். கதையைக் கேட்ட உடனே அவங்க ஓகே நான் பண்றேன்னு சொல்லிட்டாங்க. உடனே எனக்கு போன் பண்ணி ஐஸ்வர்யா ராய் நடிக்க ஒத்துக்கிட்டாங்க அப்படின்னு சொன்ன உடனே, நானும் சூப்பர் என்று சொல்லிவிட்டு அட்வான்ஸ் அனுப்பி விட்டேன். அதற்குப் பிறகு பிரசாந்த், நான் ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் கூட 'ஜீன்ஸ்' படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறேன்.
ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க கேட்ட பிரசாந்த்:
அதனால், இந்தப் படத்தில் தபுவிற்கு ஜோடியாக நடிப்பதற்கு பதில், ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடித்தால் நல்லா இருக்கும் அப்படிங்கற மாதிரி ஒரு சஜஷன் கொடுத்தாரு. அதற்கு இல்லை கதையின்படி இதுதான் உங்கள் கேரக்டர் என்று பிரசாந்திடம் சொல்லிவிட்டோம். பின் பிரசாந்த் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். அதற்குப் பிறகுதான் மம்முட்டி, அஜித், அப்பாஸ், ஐஸ்வர்யா ராய், தபு உள்ளிட்ட நடிகர்கள் இந்த படத்தில் நடித்தார்கள் என்று கூறியுள்ளார் தாணு.
பிரசாந்த் குறித்து:
தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் 'ஆண் அழகன்' என்ற பட்டத்தை பெற்றவர் நடிகர் பிரசாந்த். இவர் பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவார். 1990 ஆம் ஆண்டு வெளிவந்த 'வைகாசி பொறந்தாச்சு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் பிரசாந்த், சில காரணங்களால் நடிப்பில் இருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் நடித்து வரும் நிலையில் அந்தகன், கோட் போன்ற படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.