இரண்டாவது நாளிலேயே குறைந்த வசூல், முதல் இரண்டு நாட்களில் 'புஷ்பா 2' செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

By krithika · 7/12/2024

'புஷ்பா 2' படம் முதல் இரண்டு நாட்கள் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல்கள் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி கொண்டு இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் , கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புஷ்பா. இந்தப் படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார்.

மேலும், இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஆந்திரா மாநிலம் வனப்பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

புஷ்பா 2 :

அதனைத் தொடர்ந்து , இதே படக்குழுவுடன் புஷ்பா 2: தி ரூல் படம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த சில வருடங்களாகவே புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. அந்த தாமதத்துக்கு காரணம் அல்லு அர்ஜுனுக்கும் இயக்குனர் சுகுமாருக்கும் இடையே இருந்த பிரச்சனை தான் என தகவல்கள் பரவின. ஒரு வழியாக இப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

அல்லு அர்ஜுன் நடிப்பு :

மேலும், இப்படம் வழக்கமான தெலுங்கு மசாலா படம் போல்தான் இருக்கிறது. அல்லு அர்ஜுன் மட்டும் தான் இந்தப் படத்தை ஒட்டுமொத்தமாக தோலில் சுமக்கிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்திருந்தது. அதே சமயம் முதல் பாகத்தில் பாடல் எல்லாம் அருமையாக இருந்தன. ஆனால், இந்த படத்தில் அப்படி இல்லை என்று சிலர் கருத்தை முன் வைத்திருந்தார்கள். இப்படம் வெளியாகி முதல் நாளில் உலக அளவில் ரூபாய் 294 கோடி வசூலித்து, ஓபனிங் நாளில் அதிக வசூலை பெற்ற படம் என்ற புதியதொரு சாதனை படைத்திருக்கிறது.

புஷ்பா 2 வசூல்:

ரிலீசுக்கு முந்தைய நாள் திரையிடப்பட்ட ப்ரிவ்யூ, முதல் நாள் காட்சிகள் என அனைத்தும் சேர்ந்து இவ்வளவு வசூல் பெற்றுள்ளது. தற்போது படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இரண்டாவது நாள் வசூலில் லேசான சரிவு ஏற்பட்டுள்ளது. பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை வெளிப்படுத்தும் sacnilk.com கூற்றுப்படி, 'புஷ்பா 2' ரிலீஸ் ஆன இரண்டாவது நாளில் இந்தியாவில் மட்டும் ரூபாய் 90. 10 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. முதல் நாளில் ஏற்கனவே வசூலித்த ரூபாய் 174.9 கோடியுடன் சேர்த்து, இப்போது படத்தின் வசூல் இரு நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூபாய் 265 கோடியாக உள்ளது.

வசூரில் சரிவு :

படத்தின் வசூல் முதல் நாளிலிருந்து சற்று சரிவைக் கண்டுள்ளது மற்றும் வார இறுதியில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும். முதல் நாளில் கிட்டத்தட்ட ரூபாய் 125 கோடி வசூலித்த புஷ்பா 2, இந்திய பாக்ஸ் ஆபிஸில் புதியதொரு உச்சத்தை தொட்டது. அதாவது இதற்கு முன்னர் முதல் நாளில் அதிக வசூல் பெற்ற ஆர்ஆர்ஆர் படத்தின் ரூபாய் 133 கோடி வசூலை முறியடித்தது. மேலும், முதல் நாளில் அதிக வசூல் பெற்ற பாலிவுட் படமான ஜவான் வசூலையே புஷ்பா 2 பின்னுக்கு தள்ளியது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full