இனி தலைவர் நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்ள மாட்டேன். லாரன்ஸ் அதிரடி அறிக்கை.

By Rajkumar · 23/12/2019

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருந்து தற்போது இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வரும் லாரன்ஸ் கடந்த சில காலமாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இதற்கு முக்கிய காரணமே சமீபத்தில் நடைபெற்ற தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியது தான். இந்த விழாவில் சீமான் குறித்தும் கமல் குறித்தும் இவர் பேசிய விஷயங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல இதனால் ரஜினி ரசிகர்கள் சிலரும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள் என்ற செய்திகளும் வைரலாக பரவியது. இந்த நிலையில் நடிகர் லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்த செய்தி எனது மீடியா நண்பர்கள் மற்றும் செய்தி எழுத்தாளர்களுக்கானது. தர்பார் இசை வெளியீட்டுக்கு பிறகு என்னை பல ஊடக நண்பர்கள் பேட்டி கொடுக்கும்படி கேட்கின்றனர். தற்போது நான் இந்தி படப்பிடிப்பில் சற்று பிஸியாக இருப்பதால், தற்சமயம் என்னால் பேட்டி எதுவும் கொடுக்க இயலாது. ஆனால் எனது படப்பிடிப்பு முடிந்ததும் நான் வந்து அனைவருக்கும் தனித்தனியாக பேட்டி கொடுப்பேன். நீங்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும், பொதுவான சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் பதிவிடும் ட்வீட்டுகள், நான் பேசிய பேச்சு மற்றும் இனிமேல் நான் பேசப்போகும் விஷயங்கள் அனைத்தும் எனது சொந்த கருத்துக்கள் மட்டுமே.

என்னுடைய கருத்துகளுக்கு தலைவர் சூப்பர் ஸ்டார் எவ்வகையிலும் பொறுப்பல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ரஜினி சார் சொல்லி தான் நான் பேசுவதாக சிலர் சொல்லுவது உண்மையற்றது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவர் பேச விரும்பினால், அவர் தானாகவே பேசுவார். ஒருவரை தூண்டிவிட்டு பேசவைக்ககூடிய நபர் அல்ல அவர். என்னால் அவருக்கு எந்த பாதிப்பும் வேண்டாம். நான் அவருடைய ரசிகனாக அவரிடம் எதிர்பார்ப்பது அவருடைய ஆசீர்வாதமும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது மட்டுமே தான். நான் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவன் அல்ல, நான் யாரையும் ஆதரிக்கவில்லை. நான் எனது சேவையைச் செய்கிறேன், தேவைப்படும் போதெல்லாம் எனது குழந்தைகளுக்கான உதவி கேட்பேன், இதைத் தவிர அவர்கள் உதவி செய்தால் எனது நன்றியைத் தெரிவிப்பேன்.

https://twitter.com/offl_Lawrence/status/1208738044821401600

எனக்கு அரசியலில் எந்த தொடர்பும் இல்லை, ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நான் தேவையின்றி ஒரு பிரச்சினையில் இழுத்துச் செல்லப்பட்டேன். இதன் காரணமாக எனக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் கருத்து வேறுபாடும், சர்ச்சைகளும் எழுந்தன. எனவே நான் பேச வேண்டிய ஒரு நிர்பந்தத்திற்கு தல்லப்பட்டேன். எனது பிறந்த இடம், மொழி மற்றும் எனது சேவை குறித்து அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர், அதற்கு நான் சாந்தமாக பதிலளிப்பேன். ஜல்லிக்கட்டு சமயத்திலிருந்தே நான் சாந்தமாகவே பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன், அதை தொடர்ந்து என்னால் முடிந்த அளவில் அவர்களுக்கு சாந்தமாக புரியவைக்க முயற்சிப்பேன். அன்பு தான் தமிழ் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள லாரன்ஸ், எனது நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், இனிவரும் நாட்களில் தலைவருடைய அனுமதி இல்லாமல் அவர் சம்பந்தப்பட்ட எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் நான் பங்கு பெற மாட்டேன். இதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கிறது அதை நான் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. அவருடைய ஆசீர்வாதம் மட்டுமே எனக்கு போதுமானது என்று பதிவிட்டுள்ளார் லாரன்ஸ்.

behindtalkies AMP · Quick view
View full