50 வருஷமா லட்சக்கணக்கான பணத்தை வீணாக்கிட்டோம், ஆனால் - ரஜினி ரசிகர்கள் எடுத்த அதிரடி முடிவு
ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி செய்து இருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. பொதுவாகவே பிரபல நடிகர்களின் படங்கள் என்றால் அவருடைய ரசிகர்கள் போஸ்டர் ஓட்டுவது, கட்டவுட், பால் அபிஷேகம் செய்வது என்று அமர்க்களம் செய்வார்கள். இதனால் லட்சக்கணக்கில் கூட செலவு செய்திருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் ரஜினிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகம் முழுவதுமே இருக்கிறார்கள். அவருடைய படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே திரையரங்குகளின் முன்பு ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இருப்பார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் ரஜினி சினிமாவில் நுழைந்து 50-வது ஆண்டு முடிவடைந்து இருப்பதால் ரஜினி ரசிகர் செய்திருக்கும் செயல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சாதிக் பாஷா. இவர் விருகம்பாக்கத்தை சேர்ந்தவர். இவர் சமீபத்தில் வெளியான ரஜினியின் கூலி படத்திற்காக ரசிகர் மன்றத்தின் சார்பில் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை திரட்டி அந்த பகுதியில் வசிக்கும் வசதியற்ற மக்களுக்கு தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், புடவை வேட்டி என்று வழங்கி இருக்கிறார்.
ரஜினி ரசிகர் செய்தது:
இவருடைய இந்த செயல் தான் இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் சாதிக் பாஷா, தலைவர் படம் ரிலீஸ் ஆகிறது என்றால் ஒரு மாதத்திற்கு முன்னாடியே நாங்கள் ரெடியாகி விடுவோம். மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் எல்லோருமே சேர்ந்து பணம் திரட்டி போஸ்டர், கட்டவுட் வைப்பது என்று ரகளை எல்லாம் பண்ணுவோம். இதில் மன்றங்களுக்கு இடையில் போட்டி எல்லாம் நடக்கும். ஒரு லட்சம் வரையும் இதற்காக நாங்கள் செலவெல்லாம் செய்திருக்கிறோம். நாளடைவில் கட்டவுட் வைப்பதில் கொஞ்சம் பிரச்சனை வந்தது. கட்டவுட் கீழே விழுந்ததில் சிலருக்கு அடிப்பட்ட சம்பவம் நடந்தது.
ரஜினி ரசிகர் பேட்டி:
படம் பார்க்கிற ரசிகர்கள் சும்மா இருக்காமல் கட்அவுட் மேல் ஏறினால் கீழே விழாமல் என்ன செய்யும்? இதனால் ஒரு கட்டத்தில் கட்அவுட் வைப்பதை விட்டுட்டு போஸ்டர், பாலபிஷேகம் என்று பண்ணினோம். அதற்கும் பால் முகவர் சங்கத்துக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். காசு கொடுத்துதான் பால் வாங்குகிறோம். ஆனால், அவர்கள் எதுக்கு பாலை வீணாக கொட்டுறீங்கன்னு கேட்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவங்க பேச்சிலும் நியாயம் இருந்ததாக எங்களுக்கு தோன்றியது. பால் வாங்க காசு இல்லாமல், அதை குடிக்க முடியாமல் இருக்கும் குழந்தைகள் இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள்.
மாற்றத்திற்கு காரணம்:
நாம் பண்ணுவது சரியில்லை என்று எங்களுக்கு புரிந்தது. அதோடு நாங்கள் இப்படி எல்லாம் செய்வதால் தலைவருக்கும் தான் சேர்ந்து கெட்ட பெயர் வருகிறது என்பதையும் தெரிந்து கொண்டோம். கடைசியாக போஸ்டர் மட்டும் ஒட்டியிருந்தோம். அதையும் படம் முடிந்த இரண்டாவது நாளில் மாடு தான் சாப்பிடுது. இந்த நிலையில் தான் எங்கள் பகுதியில் வசிக்கிற சில பொதுநல ஆர்வலர்கள், மகிழ்ச்சியை நீங்கள் கொண்டாட கூட நாலு பேரையும் சேர்த்துக்கப்பா என்று சொன்னார்கள்.
ரசிகர் செய்த உதவி:
அப்பதான் எங்கள் புத்திக்கு உறைத்தது. எங்கள் பகுதியிலேயே கஷ்டப்படுகிற சில குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கு தேவைப்படுகிற சில விஷயங்களை செய்தோம். படம் ரிலீசான அன்றே அவர்களையும் வரவழைத்து அந்த பொருட்களை எல்லாம் தந்தோம். அவர்கள் முகத்தில் பார்த்த அந்த சந்தோஷத்தை எங்களால் வார்த்தைகளில் சொல்ல முடியாது. அதனால் இனி 5 பைசா கூட தேவையில்லாமல் செலவு செய்யக்கூடாது என்று முடிவு செய்திருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்.