கோவில்பட்டியை அடுத்து உள்ள சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் இருவரின் மரணத்தால் தமிழகமே கொந்தளித்து போய் உள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் (59), அவரது மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் (31) பழைய பேருந்து நிலையத்தில் ஏபிஜே செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்தார்கள். கடந்த 19 ஆம் தேதி ஜெயராஜ் அவர்கள் ஊரடங்கு உத்தரவு அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடை திறந்து வைத்ததால் காவல் துறை அதிகாரிகள் கண்டித்தனர். பின் தந்தை,மகன் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸ் கடுமையாக தாக்கி உள்ளனர்.

காவல்துறையினர் தாக்கியதில் இருவருக்குமே பலத்த காயம் ஏற்பட்டு அநியாயமாக உயிர் இழந்து உள்ளார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காட்டுத் தீயை விட வேகமாக கொழுந்து விட்டு எரிகிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு நியாயம் கேட்டு நாடு முழுவதும் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், நடிகர், நடிகைகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னுடைய இரங்கலை ரஜினிகாந்த் தெரிவித்ததாக சென்னை முன்னாள் மேயரும், ரஜினிகாந்தின் நண்பருமான கராத்தே தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இறந்து 12 நாட்கள் ஆன நிலையில் தற்போது தான் ரஜினி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது” என்று கூறி #சத்தியமா_விடவே_கூடாது என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டார். ரஜினி சொன்ன #சத்தியமா_விடவே_கூடாது என்ற வார்த்தை தற்போது ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது.

Advertisement
Advertisement