இன்றைய காலகட்டத்தில் எதிர்கால சந்ததிகளுக்கு நாம் செய்ய வேண்டியது மது கலாச்சாரமா? - ராமராஜன் அறிக்கை

By Rajkumar · 21/6/2024

கள்ளக்குறிச்சியில் விசச் சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கும் சம்பவம் தான் ஒட்டுமொத்த தமிழகத்தையே புரட்டி போட்டு இருக்கிறது. சில பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அது மட்டுமில்லாமல் பல பேர் வாந்தி, மயக்கம், தலைவலி, வயிறு எரிச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலுமே, மருத்துவர்கள் பல பேர் இறக்க வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததால் தான் இந்த உயிரிழப்பிற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிந்திருக்கிறது. மேலும், காவல்துறை பொறுப்பு இல்லாமல் இருந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இதனால் பத்துக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவாகரத்தில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு போட்டிருக்கிறார்.

பிரபலங்கள் கண்டனம்:

பின் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பிரபலங்கள் நடிகர் விஜய், நடிகர் சூர்யா, இயக்குனர் பா ரஞ்சித், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் போன்றோரும், எதிர்க்கட்சித் தலைவர்கள் என பலரும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் அவர்கள் தமிழக அரசை கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தும் ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் ராமராஜன் இது தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

ராமராஜன் அறிக்கை:

அதில், 50 மரணங்கள் என்பது ஒரு சின்ன கிராமத்தில் நினைத்துப் பார்க்க இயலவே இல்லை. கிராமங்களில் ஒரு மரணம் என்றாலே அத்தனை வீடும் சோறு பொங்காது. சாப்பிடாது. தூக்கத்தில் பங்கெடுக்கும். இங்கு 50 வீடுகள் அதன் சொந்த பந்தங்கள் எப்படி துயர் கொண்டிருப்பவர் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்னால். கொரோனா கொத்து கொத்தாய் அள்ளிய மரணங்கள் போல் இந்த கள்ளச்சாராய சாவு எண்ணிக்கையும் பயப்படுத்திக் கொண்டே உயர்கிறது. இழப்பு நாம் இயல்பாக சந்திப்பது. ஆனால் இத்தகைய இழப்பு நம் முன் கோரக் கொடூர முகம் காட்டி செல்கிறது.

மனிதர்களை குடி எப்படி கொல்கிறது என்பது நிகழ்கால பாடமாக நிகழ்ந்திருக்கிறது. குடிகளுக்கு ஏன் குடி? அவசியமற்ற ஒன்றை மகிழ்ச்சி என்ற பெயரில் மக்கள் வழக்கமாகக் கொண்டிருப்பது பல குடும்பங்களின் நல்லுறவை சிதைக்கிறது. இன்றைய காலகட்டத்தில் எதிர்கால சந்ததிகளுக்கு நாம் செய்ய வேண்டியது மது கலாச்சாரமா? போதைப் பொருள் கலாச்சாரமா? தெரியவில்லை. அவர்கள் நன்றாக ஆரோக்கியத்துடன் குடும்பங்களை உருவாக்க வேண்டியவர்கள் என்பதை எப்போது உணர்ந்து கொள்ள வைக்க போகிறோம்? ஒரு படத்தின் ஆரம்பத்தில் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பதோடு நம் சமூக அக்கறை முடிந்து போகிறதா? குடியால் நாம் இறந்தவர்கள் அதிகம்.

அதுவும் இந்த கள்ளச் சாராயா சாவுகள் இழப்பின் உச்சம். இதுக்கு காரணமானவர்கள் 50 பேரின் கொலையாளிகளாக தீர்க்கப்பட வேண்டும். நீதி தனது கடமையை செய்யும் என எப்போதும் நம்புபவன் நான். நிச்சயம் சட்ட வரைமுறைகள் அவர்களை தண்டிக்கட்டும். அரசு விரைந்து இதுப்போல் மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். மனிதம் மிக உயர்ந்தது. அதைவிட நம்மை நாமாக வைத்துக் கொள்வது வேறு எதுவும் இல்லை. மனிதம் காப்போம். மரணம் தவிர்ப்போம். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full