கன்னட படமான 'காந்தாரா' படத்தை ஏன் அனைவரும் பார்க்க வேண்டும்?

By Rajkumar · 16/10/2022

காந்தாரப் படம் குறித்து இயக்குனர் ரிஷப் ஷெட்டி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படங்களில் ஒன்று கே ஜி எஃப். இந்த படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருந்தார். இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தான் தற்போது காந்தாரா என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.

இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அஜனீஷ் லோக்நாத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரிஷப் ஷெட்டி தான் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் சமீபத்தில் தான் கன்னட மொழியில் வெளியாகி இருந்தது. கூடிய விரைவில் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காந்தாரா படம்:

மேலும் தமிழில் இந்த படம் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தான் இந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டு இருக்கிறார். தமிழகத்திலும் காந்தாரா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து படத்தின் இயக்குனரும், நடிகரும் ஆன ரிஷப் செட்டி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார்.

ரிஷப் செட்டி அளித்த பேட்டி:

அதில் அவர் கூறியிருந்தது, காந்தாரா என்பது அடர்ந்த வனத்தின் உள் இருக்கும் மர்மமான பகுதி. 18 ஆம் நூற்றாண்டில் இருந்து கர்நாடகாவில் இது குறித்த நம்பிக்கை இருந்து வருகிறது. மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையே நடைபெறும் மோதலை சொல்ல வேண்டும் என்று தான் இந்த படத்தை எடுத்தோம். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். அதற்குப் பின் தான் திரையுலகில் அறிமுகமானேன். மேலும், இந்த படத்தை நான் என்னுடைய சொந்த ஊரில் தான் எடுத்தேன்.

காந்தாரா படத்தின் கதை:

சிறிய வயதில் என்னென்ன பார்த்து ரசித்தேனோ அதனை எல்லாம் இந்த படத்தில் படமாக்கி இருக்கிறேன். அப்பொழுது இருந்த சமூகம், மக்களின் நம்பிக்கை, கலாச்சாரம் போன்ற பல விஷயங்களை இந்த படத்தில் காண்பித்திருக்கிறேன். இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநில மக்களுக்கும் அவர்கள் வாழ்கின்ற பகுதியில் காவல் தெய்வங்கள், குலதெய்வங்கள் இருக்கும். அது போன்ற காவல் தெய்வத்தின் மீது நம்பிக்கை கொண்டவன் தான் நான். காவல் தெய்வங்கள் தான் சமூகத்தில் உயர்ந்தவர்கள் மற்றும் தாழ்ந்தவர்கள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் மனிதர்களை சம நிலையில் வைத்திருக்கும் சக்தி படைத்தது என எண்ணுகிறேன்.

படம் குறித்து சொன்னது:

காந்தாரப் படத்தில் இடம் பெற்றிருப்பது போல நான் சிறிய வயதில் தெய்வம் வேடமிட்டு வருபவர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் அனைவரையுமே சமமாகவே கருதுவார்கள். தற்போது இந்த விஷயங்கள் எந்த மாதிரியான விமர்சனத்தை எதிர்கொண்டு இருக்கின்றது என்பதை பற்றியும் இந்த படத்தில் தெளிவாக காண்பித்து இருக்கிறோம். இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே பாலமாக இந்த காவல் தெய்வங்கள் இருக்கிறது என்ற நம்பிக்கை பயன்படுத்தி தான் இந்த படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது என்று படம் குறித்து பல சுவாரஸ்யமான பகிர்ந்து இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full