'சஞ்சு சாம்சன் பெயரே இல்லை... இது உண்மையான இந்திய அணியா என்று அதிர்ச்சியடைந்தேன்!' - பிசிசிஐயை கேள்வி எழுப்பிய ராபின் உத்தப்பா

'சஞ்சு சாம்சன் பெயரே இல்லை... இது உண்மையான இந்திய அணியா என்று அதிர்ச்சியடைந்தேன்!' - பிசிசிஐயை கேள்வி எழுப்பிய ராபின் உத்தப்பா

By S.Dhilip Kumar · 8/7/2026

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சனின் பெயர் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, முன்னாள் வீரர்கள் உள்ளிட்ட பலரும் இந்த முடிவுக்கு கேள்வி எழுப்பிய நிலையில், தற்போது முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பாவும் பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். தனது யூடியூப் சேனலில் பேசிய உத்தப்பா, சஞ்சு சாம்சன் போன்ற வீரருக்கு தொடர்ந்து இப்படியான அணுகுமுறை காட்டப்படுவது சரியல்ல என்று தெரிவித்துள்ளார்.

'இது ரசிகர்கள் உருவாக்கிய அணி என்று நினைத்தேன்'

இந்திய அணியின் பட்டியலை முதலில் பார்த்தபோது அது உண்மையான அணி என்று கூட நம்ப முடியவில்லை என உத்தப்பா கூறினார். "முதலில் இந்திய அணியை பார்த்தபோது, இது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உருவாக்கிய போலியான அணி என்று நினைத்தேன். காரணம், அதில் சஞ்சு சாம்சனின் பெயரே இல்லை. ஆனால் அது அதிகாரப்பூர்வ அணி என்பதை தெரிந்ததும் எனக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. இன்னும் எவ்வளவு காலம் ஒரே வீரரை இப்படியே நடத்தப் போகிறீர்கள்? இது சரியாகத் தெரியவில்லை," என்று அவர் கூறினார்.

'உலகக் கோப்பையை வெல்ல உதவிய வீரருக்கு இதுதானா பரிசு?'

சஞ்சு சாம்சன் சமீபத்திய டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதையும் உத்தப்பா நினைவுபடுத்தினார். "நான்கு மாதங்களுக்கு முன்புதான் அவர் உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு உதவினார். அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இரண்டு முதல் பந்தில் அவுட்டான இன்னிங்ஸ்கள், ஒரு குறைந்த ஸ்கோர் என்பதற்காகவே அவரை அணியில் இருந்து வெளியே வைப்பது சரியான முடிவாக எனக்குத் தோன்றவில்லை," என்றார்.

'திட்டமிடல் இல்லை... உடனடி எதிர்வினை போல இருக்கிறது'

தேர்வுக்குழுவின் முடிவுகள் தெளிவான திட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை என்றும் உத்தப்பா குற்றம்சாட்டினார். "இந்த முடிவுகள் நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்படுவது போல தெரியவில்லை. ஒவ்வொரு போட்டியின் முடிவுக்கும் உடனடியாக எதிர்வினை காட்டுவது போலவே இருக்கிறது. ஒரு தொடர்ச்சியான திட்டம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை," என்று அவர் விமர்சித்தார்.

'இன்னும் என்ன செய்தால் இடம் உறுதியாகும்?'

சஞ்சு சாம்சன் இன்னும் என்ன செய்தால் இந்திய அணியில் தனது இடத்தை நிரந்தரமாக்க முடியும் என்று உத்தப்பா கேள்வி எழுப்பினார். "ஒரு உலகக் கோப்பை தொடரில் 'பிளேயர் ஆஃப் தி டோர்னமென்ட்' விருது வென்ற வீரரின் இடமே இன்னும் கேள்விக்குறியாக இருந்தால், அவருக்கு எப்போது பாதுகாப்பான இடம் கிடைக்கும்? இந்தியாவுக்காக போட்டிகளை வென்று கொடுக்க முடியும் என்பதை சஞ்சு ஏற்கனவே நிரூபித்துவிட்டார். அவரது தேர்வு குறித்து இனியும் விவாதமே இருக்கக் கூடாது," என்று அவர் வலியுறுத்தினார்.

சஞ்சுவை சுற்றி அதிகரிக்கும் சர்ச்சை

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு முன்பு ஹர்ஷா போக்லே, சஞ்சுவை நீக்கியதற்கான காரணத்தை பிசிசிஐ வெளிப்படையாக விளக்க வேண்டும் என்று கூறியிருந்தார். தற்போது ராபின் உத்தப்பாவும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளதால், சஞ்சு சாம்சனின் எதிர்காலம் மற்றும் இந்திய அணியின் தேர்வுக் கொள்கை மீண்டும் ரசிகர்கள் மத்தியில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full