'சினிமாவை விட்டு மக்களுக்காக வராருனா' - விஜயின் அரசியல் வருகை குறித்து SAC பேட்டியில் பகிர்ந்தது
நடிகர் விஜயின் அரசியல் என்ட்ரி, கடைசி படம் போன்ற பல விஷயங்கள் குறித்து விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ். ஏ. சந்திரசேகர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதற்கிடையே விஜய் சமீபத்தில் 'தமிழக வெற்றிக் கழகம்' என்னும் அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார்.
மேலும், தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் 'தளபதி 69' படம் தான் அவரின் கடைசி படம் என்றும், இதற்குப் பிறகு அரசியலில் முழுமையாக ஈடுபடுவதாகவும் அறிவித்திருக்கிறார். அதோடு வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் விஜய் தனித்துப் போட்டியிட உள்ளார். இந்நிலையில் விஜயின் கடைசி படமான 'தளபதி 69' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என பட குழு அறிவித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
எஸ். ஏ. சந்திரசேகர் பேட்டி:
இந்நிலையில், விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அளித்திருக்கும் பேட்டி தான் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தான் 'நாளைய தீர்ப்பு' என்கிற படத்தின் மூலம் விஜயை முதலில் அறிமுகப்படுத்தி, விஜயின் திரை வாழ்க்கையின் பெரும் பகுதியை கட்டமைத்தவர். அதோடு, நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தினை மக்கள் இயக்கமாக மாற்றியது மட்டுமில்லாமல், அதன் கட்டமைப்பிலும் அதிக கவனம் செலுத்தியவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இந்நிலையில் விஜயின் கடைசி படத்தின் டைட்டில் 'நாளைய தீர்ப்பு' என செய்திகள் பரவி வரும் நிலையில், அது குறித்தும் அவர் பேட்டியில் பேசியிருக்கிறார்.
https://www.youtube.com/shorts/lhk75HvuTGI
எல்லாமே திட்டமிட்டது தான்:
பேட்டியில் அவர், விஜயின் கடைசி படத்தின் டைட்டில் 'நாளைய தீர்ப்பு' என தகவல்கள் வருகின்றது. ஆனால், அது உண்மையா எனத் தெரியவில்லை. அப்படி இருந்தால் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். அவரது முதல் படத்தின் டைட்டிலும் அதுதான். விஜயின் அரசியல் வருகை திட்டமிட்டது தான். எனது படங்கள் சமூக அக்கறை கொண்ட படங்களாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும்போது தான், விஜயகாந்த் படங்களில் மக்களின் பிரச்சனைகளைப் பேசும் நடிகராக நடித்து தலைவராக உருவானார். அதேபோல் தான், இன்றைக்கு விஜயும் உருவாகி உள்ளார். இது எல்லாமே திட்டமிட்டது தான்.
ஜாலியாக இருந்திருக்கலாம்:
மேலும், நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்றெல்லாம் ஒன்னும் இல்லை. அவங்களும் சமூகத்தில் ஒரு அங்கம் தான். அவர்களை தனித்துப் பார்க்க கூடாது. அவங்க மக்களுக்கு ஏதோ பண்ணனும்னு நினைக்கலாம் இல்ல. நினைக்கிறது மட்டும் கிடையாது அவங்க பண்ணனும் இல்ல. அந்த மாதிரி பண்ணனும்னு விஜய் வந்திருக்கிறது எவ்வளவு பெரிய விஷயம். அது சந்தோஷமான விஷயம். அவர் சும்மா போலாம், கேரவனில் உட்காரலாம், ஏசியில் இருக்கலாம், நடிக்கலாம், சம்பளம் வாங்கலாம், வீட்ல இருக்கலாம், சந்தோஷமாக ஜாலியாக இருக்கலாம் இல்ல.
அப்பாவாக எனக்கு சந்தோஷம்:
அதை விட்டுட்டு இல்லை நான் மக்களுக்காக உழைக்கப் போகிறேன். மக்களுக்கு நல்லது பண்ணப் போறேன். இந்த நாட்டுக்கு நல்லது பண்ணப் போறேன் என்று நினைத்து ஒருத்தர் வருகிறார் என்றால் அது ஒரு அப்பாவாக எனக்கு எவ்வளவு பெரிய சந்தோஷம். மேலும், விஜய் மாநாட்டில் பேசுவதற்கு முன்னர், பெற்றோர்களான எங்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு, பின்னர் மாநாட்டில் பேசியது, பல இளைஞர்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு இல்லையா' எனவும் எஸ். ஏ. சந்திரசேகர் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.