'ரசிகன் இல்லை பக்தன்' 4 ஆண்டுகளாக எஸ்பிபிக்கு மலரஞ்சலி செலுத்தும் ஹோட்டல் உரிமையாளர்- குவியும் பாராட்டுக்கள்
இந்திய நாட்டின் மிகச் சிறந்த பின்னணி பாடகரும், தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியன். தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர், சிவாஜி துவங்கி தற்போதுள்ள விஜய், அஜித் வரை அணைத்து முன்னனி ஹீரோக்களுக்கு பின்னணி பாடலை பாடியவர் எஸ்பிபி. இவர் நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கொரொனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார்.
இவருடைய இழப்பு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இவரின் மறைவு திரையுலகத்தினரை கண்ணீர் கடலில் ஆழ்த்தியது. இவர் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் இவருடைய பாடலின் மூலம் அனைவரின் மதியிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். எஸ்பிபியின் நினைவு நாளில் ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் மலரஞ்சலி செலுத்தி இருந்தார்கள். அந்த வகையில் எஸ்பிபியின் தீவிர ரசிகரான ஓட்டல் உரிமையாளர் தன்னுடைய ஹோட்டலில் எஸ்பிபிக்கு மலரஞ்சலி செலுத்தி இருக்கும் தகவல் தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
எஸ்பிபி நினைவு நாள்:
இவர் தன்னுடைய ஹோட்டலின் நுழைவு வாயிலில் எஸ்பிபியின் புகைப்படத்தை வைத்து தினமும் மலர் அஞ்சலி செலுத்து வருகிறார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக இதை அவர் செய்து வருவது பலருக்குமே ஆச்சரியம் தான். இந்நிலையில் இது தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர் பாக்கிய சீலன் அளித்த பேட்டியில், நான் தேனி பெரியகுளம் ரோட்டில் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஹோட்டல் நடத்தி வருகிறேன். எனக்கு சின்ன வயதிலிருந்தே பாடல்களை கேட்பது ரொம்ப பிடிக்கும். இதனாலே திரை இசை பாடல்கள் கேட்பதற்காக மைக் செட் போடும் வேலையை பார்த்தேன்.
ஹோட்டல் உரிமையாளர் போட்டி:
பத்தாம் வகுப்பு படித்து முடித்து ஹோட்டலில் சமையல் வேலைக்கு செய்வதற்காக கோவை, ஊட்டி, பெங்களூர் என பல பகுதிகளில் பயணித்திருந்தேன். அந்தப் பயணத்தின் போது பாடல்களை கேட்பதை வழக்கமாக வைத்திருந்தேன். நான் பாடல்களைக் கேட்பதற்காகவே பேருந்துகளில் பயணிப்பேன். இதனாலே எனக்கு எஸ்பிபி குரல் மீது அதிக மயக்கம், ஆசை ஏற்பட்டது. எஸ்பிபி பாடிய முதல் பாடலான ஆயிரம் நிலவே வா என்ற பாடல் அனைத்தும் மனப்பாடமாகவே தெரியும். எந்த பாடல், எந்த படத்தில் இருக்கும், எந்த ஆண்டு வந்தது என்பது வரை தெரியும்.
இசை குறித்து சொன்னது:
மேலும், நான் சின்ன வயசில் பள்ளிக்கு போகும்போது பாட்டு புத்தகங்கள் எல்லாம் பாட புத்தகத்தில் வைத்து பாடுவேன். தினமும் எஸ்பிபியின் பாடல்களை காலையில் தொடங்கி இரவு தூங்கும் வரை கேட்டுக் கொண்டே இருப்பேன். எவ்வளவுதான் அவருடைய பாடல்களை கேட்டாலும் எனக்கு சலிக்கவே சலிக்காது. நான் எஸ்பிபியின் ரசிகன் இல்லை, பக்தன். அவர் இறக்கவில்லை, போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே என்று தமிழ் மக்களை அழைத்துக் கொண்டே உயிர் உடன் இருக்கிறார். அவருடைய இறந்த செய்தி கேட்டு என்னுடைய ஓட்டல் நுழைவு வாயிலில் அவருடைய படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினேன்.
எஸ்பிபி பற்றி சொன்னது:
அடுத்த நாள் அந்த படத்தை எடுத்து வைக்க எனக்கு மனமே இல்லை. ஒன்று, இரண்டு மாதம் என்று தற்போது நான்கு ஆண்டுகளாக அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தி வருகிறேன். என்னுடைய ஹோட்டலுக்கு வரும் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், பிரபலங்கள், கூலி தொழிலாளர்கள் என பலருமே இதை பார்த்து வியப்படைந்து பாராட்டியும் இருந்தார்கள். இளம் தலைமுறைகளும் எஸ்பிபி குறித்து கேட்டு செல்கின்றார்கள். கடவுளை தேடி பக்தனுக்கு கிடைக்கும் வரத்தைப் போல, தன்னுடைய குரலால் ரசிகனுக்கு மன நிம்மதி, மகிழ்ச்சி, புத்துணர்ச்சி அனைத்தையுமே எஸ்.பி.பி தந்திருக்கிறார். இதனால் தான் அவருடைய பக்தன் என்று எல்லோரிடமும் நான் பெருமையாக சொல்கிறேன் என பேசி இருக்கிறார்.