நல்லவளா நடிச்சிருக்கேன், கெட்டவளா நடிச்சிருக்கேன், ஆனால் இப்படி ஆடியிருப்பது - ஊ சொல்றியா மாமா குறித்து சமந்தா.

By Ajju · 21/12/2021

தென்னிந்திய திரை உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீப காலமாக இவரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனிடையே நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். பின் இவர்கள் இருவரும் பரஸ்பரமாக பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

சமந்தாவின் முதல் ஐட்டம் பாடல் :

இப்படி ஒரு நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய திரை வாழ்க்கையில் முதன் முறையாக புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். பகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது.

ஒன்ஸ் மோர் கேட்கும் ரசிகர்கள் :

மேலும், இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்ற 'வாயா சாமி ' பாடலை விட சமந்தா ஆடிய 'ஹ்ம் சொல்றியா' பாடல் தான் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த ஒரு பாடலில் ஆட நடிகை சமந்தாவிற்கு 1.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும், திரையரங்கில் இந்த பாடலை ரசிகர்கள் ஒன்ஸ் மோர் கேட்டு வருகின்றனர்.

பாடலின் வரவேற்பும் சர்ச்சையும் :

எந்த அளவிற்கு இந்த பாடல் வரவேற்பை பெற்றதோ அதே அளவு இந்த பாடல் சர்ச்சியிலும் சிக்கி இருக்கிறது. ஆந்திராவை சேர்ந்த ஆண்களுக்கான அமைப்பு ஒன்று புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய அந்த பாடலை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்கள். பின் அவர்கள் அளித்த மனுவில் அந்த பாடலில் ஆண்கள் தவறான எண்ணம் கொண்டவர்கள் என்று கூறப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

செக்ஸியாக இருப்பது கடினம் :

இப்படி ஒரு நிலையில் இந்த பாடலில் ஆடியது குறித்து தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சமந்தா 'நான் நல்லவளாக நடித்திருக்கிறேன், கெட்டவளாக நடித்திருக்கிறேன், ஜாலியாகவும் நடித்திருக்கிறேன், சீரியஸாகவும் நடித்திருக்கிறேன், நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும் இருந்திருக்கிறேன். நான் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் என்னுடைய கடின உழைப்பை போட்டிருக்கிறேன். ஆனால், செக்ஸியாக இருப்பது அடுத்தகட்ட கடினமான உழைப்பு, ப்பா, உங்கள் அன்பிற்கு நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.

சமந்தாவின் விளக்கம் :

ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற சமந்தாவிடம், இந்த பாடலில் நடமான ஒத்துக்கொண்ட காரணம் குறித்து கேட்கப்பட்டது. இதற்க்கு பதில் அளித்த சமந்தா 'இது மிகவும் சவாலாக இருந்தது. அந்த பாடலின் ரிதத்தை புரிந்து கொண்டு சரியாக நடனமாட வேண்டும். அதுவும் அல்லு அர்ஜூனுடன் நடனமாட வேண்டும் என்பது எல்லாம் மே காட் என்ற அளவிற்கு இருந்தது' என்று கூறியிருந்தார் சமந்தா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full